கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகப் படங்களில் நடிக்கும் கதாநாயகன் என்ற பெயரைத் தக்கவைத்திருக்கும் விஜய் சேதுபதி, சாமானிய இளைஞன் கதாபாத்திரங்களை அதிகமும் ஏற்று நடித்ததால் அவரை ‘மக்கள் செல்வன்’ ஆக்கியிருக்கிறார்கள் மக்கள்.
காதல் திருமணம், இரண்டு குழந்தைகளின் பாசமான அப்பா என மாறிப்போய் குடும்பத்துக்காக ஓடிக்கொண்டிருந்த விஜய் சேதுபதியிடம் “ உனது கண்களும் முகமும் ஒரு நடிகனுக்கானவை” என்று ஒரு போட்டோகிராபர் கூறிச் சென்ற தருணம்தான் அவருக்கான முதல் திருப்புமுனை. அதன்பின் அயல்நாட்டு வேலையை விட்டுவிட்டு வந்து, ‘சினிமாவில் நடிக்கப்போகிறேன்’ என்று வீட்டிலும் வெளியிலும் கூறியபோது ‘டேய்…ஆர்வக்கோளாறு… போய் பிழைப்பைப் பாரு!’ என்று நக்கல் அடிக்கப்பட்டார்.
அந்தக் கணத்தில் உடைந்துபோகாத உறுதியுடன் நடிப்பைக் கற்க கூத்துப் பட்டறை வந்து, அங்கே கணக்காளராக பணியில் சேர்ந்து, அலுவலகம் பெருக்கி, தேநீர் தயாரித்து, கழிவறைத் தூய்மை செய்து நடிப்புக் கலையைக் கற்றுக்கொண்ட பொறுமைக்குத் திரையில் கிடைத்தவை கூட்டத்தில் ஒருவனாக நிற்கும் துணை நடிகன் வேடங்கள். அங்கும் ‘ஒற்றை வசனம்’ பேசாமல் வைராக்கியம் காட்டி வளர்ந்த விஜய்சேதுபதியிடம் திறமை இருப்பதை இயக்குநர் சீனு.ராமசாமி கண்டுபிடித்ததும் அறிமுகப்படமே தேசிய விருதுகளைப் பெற்றதும் அடுத்தகட்ட திருப்புமுனைகளாய் அமைந்தன.
அதன்பின் ‘இவர் நடிக்கிறாரா, இல்லை, நடிப்பே இவரிடம் அடைக்கலமாகிவிட்டதா?’ எனக் கேட்கும் அளவுக்கு கதாபாத்திர உருமாற்றம் எடுக்கத் தொடங்கினார். இப்படி நடிப்புக் கலைஞனாக மாறிய இவரை ‘ஆல் கிளாஸ்’ நடிகனாகவும் அடையாளம் காட்டியது ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’. தற்போது விஜய் சேதுபதி என்றால் ‘வேதா’ எனக் கத்துகிறார்கள் ரசிகர்கள்.
மண் மணக்கும் பேச்சும், வாய் மூடிக்கொண்டிருக்காத துணிவும் விஜய்சேதுபதியை அசல் கலைஞனாக அடையாளம் காட்டுகின்றன. ‘காலா’வாக விரைவில் திரையில் வெளிப்பட இருக்கும் ரஜினியுடன் வேறொரு படத்தில் திரைவெளியைப் பகிர்ந்துகொள்ளத் தயாராகிவிட்டார் விஜய் சேதுபதி! கார்த்திக் சுப்பராஜின் அந்தப் படம் கூறிவிடும் திரும்புமுனையை எதிர்கொள்ளப்போவது காலாவா, வேதாவா என்பதை.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...