அ
ரவிந்த்சாமி பணக்கார வீட்டுப் பிள்ளை. கட்டப் பஞ்சாயத்து செய்யும் அலட்டல் பேர்வழி. அவருக்கு ஒரு மகன். அதேபோல, கணவர் இல்லாத இளம்பெண் அமலா பால். அவருக்கு ஒரு மகள். ‘‘உனக்கு அம்மா இல்ல. எனக்கு அப்பா இல்ல. நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம அப்பா, அம்மாவை சேர்த்துவைச்சா நம்ம ரெண்டு பேருக்கும் அப்பா - அம்மா கிடைப்பாங்கள்ல’’ என்று குழந்தைகள் திட்டம் போடுகின்றன. அவர்களது திட்டம் வெற்றி அடைந்ததா? அரவிந்த்சாமியும், அமலா பாலும் ஒன்றுசேர்ந்தார்களா? என்பதுதான் கதை.
மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் சக்கைபோடுபோட்ட படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. அதை இயக்கிய சித்திக், தமிழ் ரசிகர்களுக்கேற்ப முலாம் பூசியுள்ளார். நடிகர் அரவிந்த்சாமி, ‘புதையல்’ படத்துக்கு பிறகு ஜாலி ஹீரோவாக நடித்துள்ளார்.
வேட்டி கட்டி, சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டு, படம் முழுக்க அசால்ட்டாக ஆடி காரில் வலம் வருகிறார்.
அம்மா கேரக்டரை மிகை இல்லா மல் செய்திருக்கிறார் அமலா பால். குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் ராகவன், பேபி நைனிகா நன்கு ஸ்கோர் செய்கின்றனர். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தையின் மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம் என சகல உணர்வுகளையும், அவர்களின் வலியையும் வெளிப்படுத்திய விதம் நேர்த்தி. அரவிந்த்சாமியின் அப்பாவாக வரும் நாசர், வழக்கம்போல தனது தனித்துவ நடிப்பால் மிளிர்கிறார்.
சூரி, ரோபோ சங்கர், ரமேஷ்கண்ணாவை பணியாளர்களாக வைத்துக்கொண்டு, முதலாளி அரவிந்த்சாமி படும் இன்னல்கள் ரசனை! சில இடங்களில் மொக்கை. அரவிந்த்சாமியும் அவ்வப்போது தனது மேனரிச காமெடிகளால் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
சண்டைக் காட்சி இயக்குநர் பெப்ஸி விஜயனுக்கு இது 500-வது படம். குழந்தைகளை முன்னால் நிறுத்தி, பின்னால் இருந்து அரவிந்த் சாமி தாக்கும் காட்சி சிறப்பு.
பங்க்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருக்கும்போதே, ‘‘சீக்கிரம் போடு. விலையை ஏத்திடப்போறாங்க’’ என்பது உட்பட ஆங்காங்கே ரமேஷ் கண்ணாவின் எழுத்தில் வசனங்கள் பலம். திரைப்படத்தின் நீளம் பலவீனம். ரொம்பவே பொறுமையை சோதிக்கிறது. முதல் பாதியில் குழந்தைகளின் உணர்வுகளை நகைச்சுவையோடு முன்வைத்த இயக்குநர், இரண்டாம் பாதியில் புளூட்டோனியம், ஹார்டு டிஸ்க், கொல்கத்தா சண்டைக் காட்சிகள் என கதைக்கு சம்பந்தமில்லாதவற்றை சேர்த்து சலிப்பூட்டுகிறார்.
அம்ரிஷ் இசையில் அவ்வப் போது வந்து செல்லும் பாடல்கள் எதுவும் மனதை தொடவில்லை. விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகக் காட்டுகிறது.
பாடல்களில் கவனம் செலுத்தி, தேவையற்ற நீளத்தையும் குறைத்திருந்தால், பாஸ்கர் செல்லமான ‘ராஸ்கல்’ ஆகியிருப்பான்.