ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகம் ‘சாமி ஸ்கொயர்’ என்ற தலைப்புடன் படமாக்கப்பட்டுவிட்டது. விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரைலரை நாளை வெளியிடுகிறது படக்குழு. செண்டிமெண்ட் கருதி, முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘திருநெல்வேலி அல்வாடா’ பாடலைப்போன்ற ஒரு குத்துப்பாடலை படத்தில் இடம்பெறச் செய்வதோடு அந்தப் பாடலை படமாக்கிய அதே இடத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் தெலுங்குப் படவுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்துவரும் தேவி ஸ்ரீபிரசாத். ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் மோஷன் போஸ்டருக்கு இவர் இசையமைத்திருந்ததைக் கண்ட விக்ரம் ரசிகர்கள், 30 லட்சம் முறை அதைப் பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் விக்ரமின் மிடுக்கான போலீஸ் தோற்றத்துக்கு எப்படிப்பட்ட அதிரடி இசையை தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்திருப்பார், ட்ரைலர் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
மிரட்டிய ஷாலினி
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2011-ல் வெளிவந்து ஹிட் அடித்த தெலுங்குப்படம் ‘100% லவ்’. மொழியைக் கடந்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற படம். இந்தப் படத்தின் தமிழ் மறுஆக்கம் முழுமையாகத் தயாராகிவிட்டது. தெலுங்கில் நாகசைதன்யா ஏற்ற பாலு கதாபாத்திரத்தை தமிழில் ஜி.வி.பிரகாஷும் தமன்னா ஏற்ற மகாலட்சுமி கதாபாத்திரத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டேவும் ஏற்றிருக்கிறார்கள்.
சந்திரமௌலி இயக்கியிருக்கிறார். படத்தின் நாயகி ஷாலினிக்கு படக்குழுவினர் ஒரு ‘பாராட்டு ஆந்தமே’ வெளியிட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு ஷாலினியைப் பாராட்டியிருக்கிறார் இயக்குநர். தமன்னா ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் லாவண்யா திரிபாதியை ஒப்பந்தம் செய்தது படக்குழு.
கடைசிநேரத்தில் என்னால் தமன்னா அளவுக்கெல்லாம் நடிக்கமுடியாது என்று கழன்றுகொள்ள, அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்கள். அடுத்து தமன்னாவையே கதாநாயகி ஆக்கிவிடலாம் என்று கேட்டபோது “ஜி.வி.பிரகாஷ் எனக்குத் தம்பி மாதிரி இருக்கிறார்” என்று கூறி மறுத்துவிட்டாராம். இந்தநேரத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியாகியிருக்க, அதில் ஷாலினியின் நடிப்பைப் பார்த்து அரை மனதுடன் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் “ஒரிஜினல் படத்தில் பேசப்பட்ட தமன்னாவின் நடிப்பையே தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் ஷாலினி” என்று கூறியிருக்கிறார் இயக்குநர்.
புது ஹீரோயின்களுடன் மட்டுமே நடிக்க என்ன காரணம்? - விஜய் ஆண்டனி விளக்கம்