வாழ்க்கைக்கு ரீவைண்ட் பட்டனும் கிடையாது ஃபார்வர்டு பட்டனும் கிடையாது. அதைச் சாத்தியமாக்கிப் பார்க்க முடியாதா என்ற மனித மனதின் ஏக்கம், கால இயந்திரம் எனும் சுவாரசியமான கற்பனையை உருவாக்கியது. நிகழ்காலத்தில் வாழும் கதாபாத்திரங்கள், கடந்த காலம் அல்லது எதிர்காலத்துக்குப் பயணித்துப் புரியும் சாகசங்களைத் திரையில் காண்பதில் நாம் சலிப்படைவதே இல்லை. காலப் பயணத்தின்போது கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சிலிர்ப்பூட்டும் கணங்கள், கால இயந்திரக் கதைகளில் ஏராளமாகக் கொட்டிக் கிடப்பதுதான் இதற்குக் காரணம்.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015-ல் வெளிவந்த படம் ‘இன்று நேற்று நாளை’. தமிழ் சினிமாவின் முதல் கால இயந்திரப் படம். இதில் இடம்பெற்ற ஒரு காட்சியைப் பாருங்கள். கால இயந்திரம் வழியாகக் கதாநாயகி மியா ஜார்ஜ், தான் பிறந்த அந்த நாளுக்கே போகிறார். பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கும் தன் தாயை மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு பிறக்கும் தன்னையே நர்சிடமிருந்து வாங்கி உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறார்.
நிஜத்தில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லாத இந்த அதிசயக் காட்சியை அவளோடு கால இயந்திரத்தில் பயணித்து வந்திருக்கும் கதாநாயகன் விஷ்ணு விஷால் தன் கைபேசியால் செல்ஃபி எடுக்கிறார். இந்தக் காட்சி திரையில் விரிந்தபோது ஆச்சரியத்துடன் ரசிக்கப்பட்டது.
மேலோட்டமாகப் பார்த்தால் கால இயந்திரத்தை மையப்படுத்திய திரைப்படங்களில் காலம் என்பது சுவரில் அடித்துத் திரும்புகிற பந்தைப் போல் எளிதாகத் தெரியலாம். ஆனால், பந்து திசைமாறிப்போய்விட்டால் மொத்த திரைக்கதையும் ரன் அவுட் ஆகிவிடும். இந்த இடத்தில்தான் ‘கதையின் மதிப்பு’ என்ற அம்சம் கால இயந்திரத்தில் ஊடாடும் காலத்தில் குழப்பம் ஏற்படாமல் காப்பாற்றுகிறது.
கால இயந்திரத்தைக் களமாகக் கொண்ட கதை என்றில்லை, நீங்கள் எந்த வகைக் கதைக் களத்தைத் தேர்ந்துகொண்டாலும் கதாபாத்திரங்களின் மதிப்புமிக்க அல்லது முரண்பாடன செயல்களையே உங்கள் திரைக்கதையில் இடம்பெறும் காட்சிகளாக எழுதிச் செல்கிறீர்கள். கதையின் மதிப்பு உயரவேண்டுமானால் காட்சியின் மதிப்பு (scene value) உயர வேண்டும்.
நீங்கள் எழுதும் திரைக்கதையில் இடம்பெற வேண்டிய 60 காட்சிகளையும் எழுதி முடித்துவிட்டீர்கள். அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஒவ்வொரு காட்சியாக எடுத்து வைத்துக்கொண்டு பரிசோதனை செய்யுங்கள். காட்சியில் நிகழும் தருணம் அல்லது சம்பவம் நமது கதாபாத்திரத்தின் வாழ்க்கையோடும் அது எதிர்கொள்ளும் பிரச்சினையோடும் எத்தனை நெருக்கமாகத் தொடர்புகொண்டதாக இருக்கிறது என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
காட்சியில், கதாபாத்திரத்தின் எந்த உணர்வு வெளிப்படுகிறது என்பதைப் பாருங்கள். அன்பா, வெறுப்பா, உண்மையா, சூழ்ச்சியா? எத்தகைய உணர்வாக இருந்தாலும் அந்தக் காட்சியின் வழியாக கதை அடுத்த கட்டத்துக்கு ஒரு அங்குலமாவது நகர்ந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் எழுதிய காட்சியில் கதையை நகர்த்தும் சம்பவம் நிகழவே இல்லை என்றால் அந்தக் காட்சியைச் செயலற்ற காட்சி (Zero Scene Event) என்று அழைக்கிறார் ஹாலிவுட் திரைக்கதாசிரியரும் ‘திரைக்கதையின் அடிப்படை அம்சங்கள்’ (Screenplay: The Foundations of Screenwriting) என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியவருமான சித் ஃபீல்ட். இதை, காட்சி வாரியாக நீங்கள் பரிசோதனை செய்யும்போது நமது திரைக்கதையில் இந்தக் காட்சிக்கு அவசியம் இருக்கிறதா என்று கேட்டு ஒரு கழுகைப் போல நோட்டமிடுங்கள்.
கதையை நகர்த்தும் செயல் எதுவும் நிகழாத காட்சியில், கதாபாத்திரத்தின் உணர்வு வெளிப்படாத காட்சியில் எந்த மதிப்பும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு காட்சியால் கதையின் மதிப்பைக் கூட்ட முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
‘இன்று நேற்று நாளை’ படத்தில் காலம் மற்றும் இடம் ஆகிய இரு முக்கியமான அம்சங்களில் குழப்பம் நேராமல் இருக்க ஒவ்வொரு காட்சியிலும் கதையை நகர்த்தும் செயல்களை இடம்பெறச் செய்திருக்கிறார் இயக்குநர். கதாநாயகன் மற்றும் அவனுடைய நண்பனின் கையில் கால இயந்திரம் கிடைத்துவிடுகிறது. அதைப் பயன்படுத்தி ஒரு சவரன் தங்கம் வெறும் ஐம்பது ரூபாய்க்கு விற்ற காலகட்டத்துக்குப் பின்னோக்கிப் பயணித்து, அங்கிருந்து நூறு சவரன் தங்கம் வாங்கிக்கொண்டு வந்து, தங்க விலை அதிகமுள்ள நிகழ்காலத்தில் விற்றுவிடலாம் என்று திட்டம் போடுகிறார்கள்.
அந்தத் திட்டம் சுவாரசியமாக இருந்தாலும் நாயகனின் அந்தச் சவால், பணம் சம்பாதிப்பது என்பதுடன் முடிந்துவிட்டால் கதையின் மதிப்பும் அந்தக் காட்சியோடு தேங்கிவிடுகிறது. ஆனால், இயக்குநர் ரவிகுமார் அந்த யோசனையைக் கால இயந்திரம் எனும் கருத்தைப் பார்வையாளரிடம் அறிமுகப்படுத்தப் பயன்படுத்திக்கொள்கிறார்.
‘தங்க’ யோசனை சொதப்பியதும் இன்னொரு சுவாரசியமான திட்டத்தை நாயகனும் நண்பனும் அரங்கேற்றுகிறார்கள். நேரமும் இடமும் சொன்னால் போதும், தொலைந்துபோன பொருட்களைக் கண்டுபிடித்துத் தருகிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள். அப்படி வருபவர்களுக்குத் தகவல் கூறிப் பணத்தைக் குவிக்கிறார்கள்.
இப்படிக் கடந்தகால விஷயங்களைத் தெரிந்துகொண்டு பணம் சம்பாதிக்கும் விஷ்ணுவும் கருணாவும் தங்களை அறியாமல் செய்யும் ஒரு காரியத்தால் கடந்தகால நிகழ்வுகளில் மாற்றம் செய்துவிட, அதன் விளைவாக அவர்களது நிகழ்காலம் பாதிக்கப்படுகிறது. மீண்டும் கடந்த காலத்துக்குச் சென்று அதைச் சரிசெய்ய முனைவது கதையின் மதிப்பை மேலும் கூட்டுகிறது. இப்படிச் சரி செய்யும்போது ஏற்படும் பரபரப்பு திரைக்கதையின் சுவாரசியத்தையும் அதன் நகர்வையும் கூட்டுகிறது.
இதைவிடவும் பெரிய சுவாரசியத்தைத் தொடக்கக் காட்சியிலேயே வைத்து கதையின் மதிப்பைக் கூட்டிவிடுகிறார் இயக்குநர் ரவிகுமார். 2065-ல் வாழும் விஞ்ஞானி ஆர்யா, கால இயந்திரத்தைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதைத் தன் தலைமை விஞ்ஞானியிடம் டெமோ செய்துகாட்ட, தனது செல்ல நாயை அந்த இயந்திரத்தில் வைத்து, 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டு 40 நொடிகளில் திரும்பி வரும்படி கமாண்ட் கொடுக்கிறார்.
2065-ல் இருந்து புறப்பட்டு, 2015-ம் ஆண்டைச் சென்றடையும் கால இயந்திரம், பழுது காரணமாக 2015-லேயே சிக்கிக்கொள்கிறது. பின்னர் அது அந்த ஆண்டில் வாழ்ந்த கதாநாயகன் மற்றும் அவனுடைய நண்பன் கையில் கிடைக்கிறது. இந்த இடத்தில் திரைக்கதையின் நிகழ்காலம் என்பது ஆர்யா வாழும் 2065-ம் ஆண்டு.
ஆனால் கால இயந்திரம் சிக்கிக்கொண்ட 2015-ம் ஆண்டுதான் நிகழ்காலம் என்பது போன்ற கால மயக்கத்தை கதாநாயகனின் பிரச்சினையும் அதைத் தீர்த்துக்கொள்ள அவர் மேற்கொள்ளும் காலப் பயண சாகசமும் நமக்கு உருவாக்குகிறது. விஷ்ணுவும் அவருடைய நண்பர் கருணாவும் இன்னும் பின்னோக்கிப் பயணித்து, தண்டி யாத்திரைக்குச் செல்லும் காந்தியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த இடத்தில் திரைக்கதையில் ஊடாடும் காலம், கால இயந்திரத்தைப் பயன்படுத்தும் கதாபாத்திரங்களின் புத்திசாலித்தனம் அவர்களது மதிப்புமிக்க செயல்கள் ஆகியவற்றால் குழப்பமின்றி, தெளிவாக நின்று பார்வையாளர்களை ஈர்த்துக்கொள்கிறது.
ஒரு சம்பவம் அல்லது செயல் நடந்து முடிந்த பிறகு, இதை இப்படிச் செய்திருக்கலாமே, இப்படி நடந்திருக்கலாமே என்று நமக்கு தோன்றியிருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஒன்று நடந்து, அது கடந்து சென்றுவிட்டதால் சென்றதுதான். இன்னொரு வாய்ப்பு என்பதே கிடையாது. ஒருவேளை அந்த இன்னொரு வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது திரைக்கதை தனக்குள் இருக்கும் காலத்தின் நொடி முள்ளை சில கணம் மாற்றிப்போடுகிறது. அப்படிப்பட்ட சோதனை முயற்சிகளில் ஒளிந்திருக்கும் திரைக்கதை உத்திகளை அடுத்த வகுப்பில் காண்போம்.
ரவிகுமாரின் ‘இன்று நேற்று நாளை’, கடந்த 2016-ம் ஆண்டு விக்ரம் கே.குமாரின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘24’ மட்டுமல்ல, ஹாலிவுட் தொடங்கி உலகில் எந்த நாட்டுத் திரைப்படம் கால இயந்திரத்தில் பயணித்தாலும் அதற்குக் தொடக்கப்புள்ளியாக இருந்தவர் ஆங்கில எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ்.
சுவாரசியங்களின் சுரங்கமாக இருக்கும் ‘கால இயந்திரம்’ என்ற கருத்தாக்கத்தை 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரே உருவாக்கினார். ‘கால இயந்திரம்’ என்ற சொல்லாக்கத்தை முன் வைத்தவரும் அவரே.
அறிவியல் புனைவு எழுத்தின் பிதாமகன் என்று போற்றப்படும் வெல்ஸ்தான் ‘கால இயந்திரம்’(The Time machine) என்ற தலைப்பில் உலகின் முதல் கால இயந்திர நாவலை எழுதினார். அது 1895-ல் புத்தகமாக வடிவம் பெற்றது. அந்த நாவலைத் தழுவியும் அதன் தாக்கத்திலும் இதுவரை 20-க்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
பல தொலைக்காட்சித் தொடர்கள், வானொலி நாடகங்கள், அவ்வளவு ஏன் நூற்றுக்கணக்கான நாவல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் படைக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in