இந்து டாக்கீஸ்

சினிப்பேச்சு: இது யோகி பாபு டேஸ்ட்!

செய்திப்பிரிவு

யோகி பாபு இல்லாமல் படங்கள் மட்டுமல்ல; தமிழ் இணையத் தொடர்களும் இல்லை என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறது அவரது நகைச்சுவை பாணி. அவரது நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போட்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் நிலையில், யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சட்னி சாம்பார்’ என்கிற இணையத் தொடரை வெளியிடுகிறது டிஸ்னி ஹாட் ஸ்டார்.

ஊட்டியில் பிரபலமான உணவகம் நடத்திவரும் நிழல்கள் ரவி, சென்னையில் தனக்கொரு மகன் இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறி யோகிபாபுவை அழைத்து வரச் சொல்கிறார். யோகி பாபு ஊட்டி வந்தபிறகு நடக்கும் ரகளைகள்தான் தொடரின் கதை.

இத்தொடரை எழுதி இயக்கியிருக்கும் ராதாமோகன் நம்மிடம் கூறும்போது: “இந்தக் கதையை யோகிபாபுவை மனதில் வைத்தே எழுதினேன். இதில் வேறு யாரும் நடிக்க முடியாது. பாதிக் கதையை எழுதி முடித்ததும் அவரைப் பார்த்து எழுதியவரை அவருக்குச் சொல்லி, அவருக்குப் பிடித்திருந்தால் மட்டும் தொடரலாம் என்று முடிவு செய்தேன்.

கதையைக் கேட்டு சூப்பர் சார் என்று ஓகே சொன்னார். அப்படி உருவானதுதான் இந்த சட்னி சாம்பார்” என்றார். யோகிபாபுவிடம் கேட்டபோது “சட்னி சாம்பார் இரண்டையும் ஒன்றாகக் குழைத்து இட்லியுடன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு ருசி இருக்குமோ அவ்வளவு ருசியான தொடருங்க இது” என்றார்.

தேவயானியின் நெகிழ்ச்சி!: தேவயானியின் தம்பி என்கிற அடையாளத்தைத் தாண்டி, நல்ல நடிகர் என்று பெயர் பெற்றவர் நகுல். அவர் நாயகனாக நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘வாஸ்கோடகாமா’. 5656 புரொடக் ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இப்படத்தின் மூலம் ஆர்.ஜி.கே இயக்குநராக அறிமுகமாகிறார்.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நகுலின் அக்கா தேவயானி, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், ‘ஈரம்’ அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படம் குறித்து இயக்குநர் பேசும்போது: “நல்லவர்கள் எல்லாம் சிறையில் இருக்கிறார்கள், கெட்டவர்கள் எல்லாம் வெளியில் இருக்கிறார்கள்.

அப்படித் தலைகீழாக மாறிவிட்ட ஒரு ஃபேண்டஸி உலகத்தில் வாழும் நாயகனின் ‘சர்வைவல்’ போராட்டம்தான் படம். ‘டார்க் காமெடி’யை படம் முழுவதும் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார். தேவயானி பேசும்போது: “நகுல் எங்கள் வீட்டுக் குட்டிப் பையன். அவன் நல்ல திறமைசாலி. எனது தம்பி என்பதற்காகச் சொல்லவில்லை. நல்ல நடிகன் மட்டுமல்ல, நன்றாகப் பாடுவான்; நன்றாக ஆடுவான்; இசை அமைப்பான்.

தன்னைச் சுற்றி உள்ளவர்களை உற்சாகமாக வைத்திருப்பான். அம்மா - அப்பா மறைந்துவிட்டதால் நான் அவனை அம்மாவைப் போல் பார்த்துக் கொள்கிறேன். எல்லாருக்கும் ஒரு நேரம் வரும் என்று சொல்வார்கள். அந்த நல்ல நேரத்திற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.” என்று நெகிழ்ந்தார்.

ஒரு மெட்ராஸ்காரனின் கோபம்! - இளைய தலைமுறை மலையாள நடிகர்களில் துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில் இருவரும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களின் வழியைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் ஷேன் நிகம். கடந்த ஆகஸ்டில் வெளியான ‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’.

இதில் கலையரசன் மற்றொரு நாயகனாக நடித்துள்ளார். தெலுங்குப் படவுலகில் பிரபலமாக இருக்கும் நிகாரிகா இதில் நாயகியாக நடித்திருக்கிறார். எஸ்.ஆர். புரொடெக்‌ஷன் சார்பில் பி.ஜெகதீஷ் தயாரித்துள்ள இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் வாலி மோகன் தாஸ். சென்னையைச் சேர்ந்த நாயகன் புதுக்கோட்டைக்குப் போய், அங்கிருக்கும் சாதி ஆணவம் கொண்ட ரவுடிகளைப் பந்தாடுவதுதான் கதை.

படத்தின் டீசரை நடிகர் சிம்பு இணையத்தில் வெளியிட்டார். டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர்: “முதல் பாதிக் கதையைக் கேட்டுவிட்டு இரண்டாம் பாதியைக் கேட்க மாட்டேன் படத்தைத் தொடங்கிவிடுங்கள் என இயக்குநரிடம் உடனே ஒப்பந்தம் போட்டுக்கொண்டேன். அந்த நம்பிக்கையை 200 சதவிதம் படத்தில் கொண்டுவந்துள்ளார்” என்றுப் பாராட்டிப் பேசினார்.

SCROLL FOR NEXT