இளைஞர்களிடம் நிலவும் மனரீதியிலான போராட்டத் தினை யதார்த்தமான உணர்வுகளுடன் பார்வை யாளர்களுக்குக் கடத்த முயன்றிருக்கிறது ‘மை லிபரேஷன் நோட்ஸ்’ (My Liberation Notes) .
தொடரின் மையக் கதாபாத்திரம் யோம் மி ஜியோங். இவர், ஸ்னேபோ என்கிற புறநகர் கிராமத்திலிருந்து கொரியாவின் தலைநகரான சியோலுக்கு அலுவலக வேலையின் பொருட்டு வந்து செல்லும் பெண்.
‘இன்ட்ரோவர்ட்’ சுபாவம் கொண்ட யோம் மி, பணியிடங்களில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். இரைச்சலையும் கூட்டத்தையும் விரும்பாதவர். தனது சக வயதுப் பெண்களின் கொண்டாட்டங்களிலிருந்தும் விலகியே இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தனது அன்றாட வாழ்க்கை மீது சலிப்பு கொள்ளும் யோம் மி, அதிலிருந்து விடுபட முயல்கிறார். யோம் மி-க்கு, யோம் கி ஜியோங் என்கிற சகோதரியும், யோம் சாங்-ஹீ என்கிற சகோதரரும் இருக்கிறார்கள். இம்மூவரின் வாழ்க்கையை சுற்றிதான் இத்தொடரின் கதைப் பயணிக்கிறது.
ஒரு கண்டிப்பான தந்தையைக் கொண்டிருக்கும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே உணர்வை இம்மூவரின் கதாபாத்திரங்களும் அளிக்கின்றன. தனது சகோதரி, சகோதரனுடன் நேராக முகம் கொடுத்துக்கூடப் பேசாத இக்கதாபாத்திரங்கள், அவர்களின் துயரங்களின்போது நீங்காமல் துணை இருப்பது அவ்வுறவுக்கான இயல்பை வெளிப்படுத்துகிறது.
நீண்ட காலமாகத் தனக்கென்று ஒரு துணையைத் தேடிக் கொண்டி ருக்கும் யோம் கி ஜியோங், தந்தையுடன் முரண்பட்டாலும் தனது கனவை நோக்கி ஓடும் யோம் சாங் ஹீ கதாபாத்திரங்களை இயக்குநர் கையாண்ட விதம் சிறப்பு.
தங்களுடைய தந்தையின் மரக்கடையில் வேலைக்குச் சேரும் ‘கு’, இம்மூவரின் வாழ்க்கையில் எப்படிப்பட்டத் தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என அடுத்த கட்டம் நோக்கி நகரும் கதையில் கு - வின் வரவு நிமிர்ந்து உட்கார வைக்கிறது. கு-வினால் யோம் மி-யின் வாழ்க்கையில் என்ன மாதிரியான வெளிச்சம் படர்ந்தது என்பதைச் சுவாரசியம் கலந்த திரைக்கதையுடன் ‘மை லிபரேஷன் நோட்ஸ்’ விவரித்துச் செல்கிறது
பரப்பரப்பான சியோல் நகரின், மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தலையைக் குனிந்தபடி திறன்பேசியில் மூழ்கியிருக்க, உணர்வற்று நின்று கொண்டிருக்கும் யோம் மி, ரயிலுக்கு வெளியே, கட்டிடம் ஒன்றில், ‘உங்களுக்கு நல்லது நடக்கும்’ என எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை ஒவ்வொரு முறையும் படிக்கும்போது நம்பிக்கை கொள்கிறார்.
இதுபோன்ற காட்சிகள் மூலம், இயக்குநர் கிம் சுக் யூன் மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் கொரியச் சமூகத்துக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கையை அளிக்க விரும்புகிறார். "நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடிக்க போவதில்லை; நான் மகிழ்ச்சியற்றவளாகவும் நடிக்கப் போவதில்லை; நான் நேர்மையாக இருக்க போகிறேன்” என்பது போன்ற வசனங்களை தொடர் முழுவதும் ரசிக்கலாம்.
பூங்கா ஒன்றில் பல தலைமுறை மனிதர்களைப் பார்த்தபடி வாழ்ந்து கொண்டிருக்கும் மரத்திலிருந்து காற்றில் எழுதியபடி தரையில் வந்தும் விழும் இலைகளைக் கவனித்திருக்கிறார்களா? அதே போன்றதொரு அமைதியை இந்த நெட்ஃபிளிக்ஸ் தொடரும் தருகிறது.
- indumathy.g@hindutamil.co.in