தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத ஆளுமைகளை அவர்களின் மரணத்துக்குப் பிறகே அறிகிறோம். எழுத்தாளர், திரைக்கதையாளர் மணி எம்.கே.மணியின் மறைவுக்கான இரங்கல் பதிவுகள் சமூக ஊடக மெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன.
நல்ல சினிமாவை நேசிக்கும் யார் அவரை நெருங்கினாலும் அவர்களுக்கு ‘நண்பர் மற்றும் ஆசான்’ ஆக மாறிவிடுவார் என்கிற அன்பு கலந்த அவருடைய ஆளுமைச் சித்திரம் இப்பதிவுகளில் துலங்குவதைக் காண முடிகிறது. பத்ம ராஜனின் திரைக்கதைகள், கே.ஜி.ஜார்ஜின் திரைப்படங்கள், இளையராஜா, கமல்ஹாசன், உலக சினிமா பற்றித் தனித்த பார்வையுடன் எழுதித் தீர்த்தவர். திரைக்கதை விவாதங்களில் பங்கெடுத்து, பல மூத்த மற்றும் முதல் பட இயக்குநர்களின் திரைப்படங்களை மேன்மையுறச் செய்தவர்.
உலக சினிமா குறித்த அவரது எழுத்தும் பரிந்துரை களும் அவருக்கு ஏராளமான வாசகர்களைச் சேர்த்து வந்த நேரத்தில் மறைந்திருக்கிறார். அவரது மறைவு, ஜெயமோகன், கமல்ஹாசன், மிஷ்கின் தொடங்கி திரையுலகில் பலரையும் ஆழ்ந்த துக்கத்தில் தள்ளியிருக்கிறது. அவருடைய நெருங்கிய நண்பர்கள், வாசக நண்பர்களின் அஞ்சலிப் பகிர்வுகள் சில:
“திரைப்படப் பரிந்துரைகளை எப்போதும் வாசிப்பதில்லை என்றொரு கொள்கை உண்டு. காரணம், மொத்தக் கதையையும் சொல்லி சுவாரஸ்யத்தைக் கெடுத்து விடுவார்கள் என்கிற பயம். அதில் விதிவிலக்காய் ஒருவரது பரிந்துரைகளை மட்டும் வாசிப்பதுண்டு. அது மணி சாருடையது.
பரிந்துரைக்கும் படைப்பின் உருவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதாமல் அதன் ஆன்மா சொல்ல வருவதை மட்டும் எழுதி அப்படைப்பைச் சுவாரசியம் குறையாமல் வாசிப்பவர்களைத் தேடிப் பார்க்க வைத்தவர். படைப்புக் கும் பார்வையாளருக்கும் நடுவே நின்றதொரு கலை உபாசகர். இந்தக் கலைச் சுரங்கத்தைத் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை” - பாலகுரு
“சாலிகிராமத்தில் பேசிக் கழித்தது போக ஊர் ஊராகப் போய்த் தங்கிப் பேசிக் களித்திருக்கிறோம். எங்கள் உரையாடலில் தவறாமல் இடம்பெறுகிற ஆளுமைகள் ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா, இளையராஜா, கமல்ஹாசன், பரதன். அதிலும் முக்கியமாக பத்ம ராஜன். இலக்கியத்தில் புதுமைப்பித்தன், கு.ப.ரா, சிட்டி, தி.ஜா, குறிப்பாக சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமியின் எழுத்துகள் மீது மணிக்கு அத்தனை பிரியம். மணியைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் பட்டாளம் சூழ்ந்திருக்கும். அவர்கள் எல்லோருமே மணியைவிட இருபது வயதாவது குறைந்தவர்கள். அதனால்தான் மணியின் மனது எப்போதும் இளமையாகவே இருந்தது. இனி பத்ம ராஜனின் திரைக்கதைகளைப் பற்றி நான் யாரிடம் பேசுவேன்?” - சுகா
“எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் மணி ரத்னத்துக்குப் பிறகு ‘மணி சார்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுகிற ஒருவர் இருந்தார் என்றால் அவர் எம்.கே. மணி தான். நிறைய வளரும் இயக்குநர்களுக்கு அவர் ஒரு மாஸ்டர். பலருடைய கதைகளைச் செப்பனிட்டுத் தருவதில் விற்பன்னர். அவருடைய எழுத்து ஒரு யூனீக் ஸ்டைலோடு இருக்கும். அவருடைய சினிமா கட்டுரைகள். குறிப்பாகச் சிறுகதைகளுக்கு நான் பெரிய ரசிகன். கதை விவாதத்தில் ‘மணி பிரவாக’மாக எல்லாக் காட்சிகளுக்கும் வேறொரு வெர்ஷன் சொல்வார். அவரது குரலுக்கும், எது குறித்தும் விவரித்துச் சொல்லும் போது இருக்கும் அழுத்தத்துக்கும் நான் ரசிகன்” - கேபிள் சங்கர்