இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: நடிகையர் திலகம்

செய்திப்பிரிவு

தெ

லுங்கில் ‘மகாநடி’யாகவும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் வெளிவந்திருக்கிறது நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப் பதிவு. கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் பிரபல நடிகை சாவித்ரி. அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி செய்தி சேகரிக்கும் பொறுப்பு பத்திரிகையாளரான மதுரவாணிக்கு அமைகிறது. அதுவரை சாவித்ரியை ஒரு நடிகையாக மட்டுமே அறிந்த மதுரவாணிக்கு, அவரது கடந்தகால நிகழ்வுகள் ஒவ்வொன்றாக தெரியவந்து, பெரும் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன. சாவித்ரியின் சிறுவயது தொடங்கி, அவரது நாட்டியப் பயிற்சி, நாடக மேடை, சினிமா வாய்ப்பு, நடிகர் ஜெமினிகணேசனுடன் காதல், திருமண வாழ்க்கை, உதவி செய்யும் குணம், உடல்நலமின்மை என்று ஒவ்வொரு படிநிலைகளையும் ஆர்வமாக சேகரிக்கிறார்.

இதற்கிடையே, தன்னுடன் பணியாற்றும் புகைப்படக் கலைஞரான ஆண்டனி மீது காதலில் விழுகிறார். ஒரு பக்கம் சாவித்ரியின் வாழ்க்கைப் பதிவு சேகரிப்பு, மற்றொரு புறம் காதல் என்று பயணிக்கும் மதுரவாணி, முடிவில் எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்ன என்பதாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.

பொதுவாக, வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது, திரைக்கதை ஆக்கம் போலவே, அந்தக் கதாபாத்திரத்தை சுமக்கப்போவது யார் என்பதும் முக்கியமானது. நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் கச்சிதமான பொருத்தம். நாட்டிய மேடையில் 14 வயது சிறுமியாக, சினிமா கேரியரில் உச்சம் தொட்ட நடிகையாக, எல்லாவற்றையும் இழந்து மதுபோதைக்கு அடிமையான பெண்ணாக.. இப்படி பல கோணங்களையும் தனது நடிப்பில் கொண்டுவந்து சிலிர்க்க வைக்கிறார்.

சாவித்ரியின் மேனரிசம், நடிப்பு பாணி ஆகியவற்றை நகல் எடுக்கவேண்டிய கட்டாயத்துடன், தனக்கே உரிய துடிப்பையும் அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைத்திருக்கும் அவரது பங்களிப்பு அருமை. இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்ட அவரது துணிவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஜெமினிகணேசனாக வாழ்ந்திருக்கிறார் துல்கர். ஜெமினி போலவே அவரது காதல் பேச்சும் மனதை நனைக்கிறது. உடல்மொழியிலும் இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம். பத்திரிகையாளர் மதுரவாணி யாக சமந்தா - அவரது காதலனாக விஜய் தேவரகொண்டா. சாவித்ரியின் காவிய வாழ்க்கையே படம் முழுவதும் வியாபித்து நிற்கும் நிலையில், இவர்கள் இருவரது கதாபாத்திரங்கள் திரைக்கதையில் இணைச் சரடாகவே வருகின்றன. ஆனால், இவர்களது பகுதிகள், கதையின் நகர்வை சோர்வடைய விடாமல் பார்த்துக்கொள் கின்றன.

ராஜேந்திர பிரசாத், தனிக்கெல்லா பரணி, பானுப்ரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே, சிறப்பு தோற்றங்களில் வரும் பிரகாஷ் ராஜ், மோகன் பாபு, நாக சைதன்யா உள்ளிட்டோரின் பங்களிப்பும் சிறப்பு.

கலை இயக்குநர்கள் தோட்டா தரணி, அவிநாஸ் கொள்ளா இருவரின் திறமையை வெகு சிறப்பாக வெளிக்கொண்டுவந்து ‘பிளாக் அன் ஒயிட்’ காலகட்டத்தை அற்புதமாக கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் புரடக்சன் டிசைனர் சிவம் ராவ். குறிப்பாக விஜயா – வாஹினி ஸ்டுடியோவின் அரங்க அமைப்பு.

மதன் கார்க்கியின் நறுக்குத் தெறித்த, அழகுணர்ச்சி மிக்க வசனம் முதுகெலும்பாக உதவி இருக்கிறது. ஒளிப்பதிவு இயக்குநர் டேனி சா லூ, பின்னணி இசையில் மிக்கி ஜெ மெயர் மிக அழகாக தங்களது பொறுப்புகளை கவனித்திருக்கின்றனர்.

காட்சி ஆக்கம், உதட்டசைவு உள்ளிட்ட சில விஷயங்கள் மட்டும் தெலுங்கு படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் சில சமயம், ஆவணப்பட சாயலில் சிக்கிக்கொள்ளும். அல்லது வரலாற்றை விட கற்பனை அதிகமாகிவிடும். அத்தகைய இரு விபத்துகளுக்கும் இடமளிக்காமல் கொஞ்சமும் செயற்கைத்தனமின்றி, நேர்த்தியும், சுவாரசியமும் நிறைந்த படமாக படைத்திருக்கிறார் இயக்குநர். இருகரம் விரித்து வாரி அணைத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம் இந்தப் படைப்பு. ஆனாலும், தெலுங்கு ரசிகர்களை மட்டுமே கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட படம், தமிழில் ‘டப்’ ஆகி வந்திருப்பதால், நமக்கு சில இடைவெளிகள் தெரிகின்றன. சாவித்ரியின் தமிழ்த் திரைப்பட சாதனைகள் பெரிதாக எங்குமே காட்டப்படவில்லை குறிப்பாக, சிவாஜிகணேசன், பீம்சிங் போன்றவர்களின் பங்களிப்பு அவரது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கியது என்பது இல்லாததால், தமிழ் ரசிகர்கள் ஒரு குறையுடனேயே பார்க்கவேண்டி இருக்கிறது.

SCROLL FOR NEXT