சென்னையின் ரஷ்யக் கலாச்சார மையத்தின் அரங்கம் நிரம்பி வழிந்தது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் ரசிகர்கள். “ ‘அன்னையின் ஆணை’ திரைப்படம் வெளியாகி வரும் ஜூலை மாதத்துடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நாம் சற்று முந்திக்கொண்டு அதற்குப் பொன்விழா எடுத்துவிட்டோம்” என்று பேசத் தொடங்கினார் என்.டி. ஃபேன்ஸ் (NTFANS - Nadigar Thilagam Film Appreciation Association) சங்கத்தின் செயலாளர் வி.ராகவேந்திரன்.
‘அன்னையின் ஆணை’ உருவான விதம் பற்றியும் அதில் பணியாற்றிய கலைஞர்கள் குறித்தும் விரிவாகவும் சுவையாகவும் அவர் அறிமுகம் செய்தபோது ரசிகர்களின் கரவொலியால் அரங்கம் அடிக்கடி அதிர்ந்தது.
அடுத்து பேசிய என்.டி.ஃபேன்ஸ் சங்கத்தின் பொருளாளர் டி.முரளி ஸ்ரீநிவாஸ் படம் பற்றிய வெளியே தெரியாத சில தகவல்களைப் பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். “ 1958-ல் நடிகர் திலகம் நடித்து ஒன்றோ இரண்டோ அல்ல; 8 படங்கள் வெளிவந்தன. வருடத்தின் முதல் படம் ‘உத்தமபுத்திரன்’. இது நூறு நாள் படம். அடுத்து வெளியான ‘பதிபக்தி’ நான்கு முக்கிய நகரங்களில் 100 நாட்கள் ஓடிய படம் இது. மூன்றாவதாக வெளியான ‘சம்பூர்ண ராமாயணம்’ ஐந்து நகரங்களில் 100 நாட்களும் மதுரையில் 165 நாட்களும் ஓடியது.
நான்காவதாக ‘பொம்மை கல்யாணம்’ 50 நாட்களைக் கடந்து ஓடியது. ஐந்தாவது படம்தான் ‘அன்னையின் ஆனை’. இதுவும் 100 நாள் படம். ஆறாவதாக வெளியான ‘சாரங்கதரா’, ஏழாவதாக வெளியான ‘சபாஷ் மீனா’, எட்டாவதாக வெளியான ‘காத்தவராயன்’ ஆகிய படங்களும் 100 நாள் படங்கள்தாம்” என்று அடுக்கிக்கொண்டே போனார்.
“ ‘அன்னையின் ஆணை’ படத்தின் பாடலாசிரியர்களில் கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியமும் கவி. கா.மு.ஷெரீப்பும் முக்கியமானவர்கள். கு.மா.பாவின் மகன்களில் ஒருவரான கு.மா.பா. திருநாவுக்கரசு, கவி கா.மு.ஷெரீப்பின் மகன் காதர் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். ‘அன்னையின் ஆணை’யில் இடம்பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்த பாடலான ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ பாடலை எழுதியவர் கவி. கா.மு.ஷெரீப். அந்தப் பாடலைத் தன் தந்தை எழுதியது பற்றி அவருடைய மகன் காதர் பேசினார். “ அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ பாடலை அப்பா இந்தப் படத்துக்காக எழுதவில்லை.
அப்பா ஏராளமான தனிப்பாடல்களை எழுதியிருக்கிறார். ‘அன்னையின் ஆணை’ படத்தில் வரும் பாடல் சூழ்நிலைக்கு அது மிகவும் பொருத்தமாக இருந்ததால் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இந்தப் பாடலைப் பயன்படுத்தலாம் என்று இயக்குநர் சி.எச்.நாராயண மூர்த்தியிடம் அனுமதி பெற்றார். திரைப்பாடலாக அது வடிவெடுத்தபோது பல வரிகளை மாற்றிக்கொடுத்தார். என் தந்தையார் சிறுவயதிலே அப்பாவை இழந்தவர்.
அப்பா இல்லாத குறை தெரியாதவாறு தன்னை வளர்த்த அம்மாவின்மேல் கா.மு.ஷெரீப் மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தார். ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை’ பாடலைப் பதிவுசெய்த தினத்தன்று கா.மு.ஷெரீப்பின் தாயார் இறந்துவிட்டார்.
அந்தப் பாடலை இசையாக என் அம்மா கேட்க முடியாமல் போய்விட்டதே’ என்று என்னிடம் வருந்தியிருக்கிறார்” என்று ரசிகர்களைக் கலங்க வைத்தார். இப்படிப் படத்துடன் தொடர்புடைய சிறப்பு விருந்தினர்களின் பேச்சுக்குப்பின் ‘அன்னையின் ஆணை’ திரையிடப்பட்டது.
2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 6 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் நடிகர் திலகத்தின் திரைப்படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் ‘லேண்ட் மார்க்’ விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது என்டி ஃபேன்ஸ் சங்கம். விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத்தின் திரையிடலுடன் படத்தில் பணியாற்றிய வாழும் கலைஞர்களையும் அவர்களது வாரிசுகளையும் அழைத்து கவுரவித்து வருகிறது.
இந்தச் சங்கத்துக்குக் கவுரவத் தலைவராக ஒய்.ஜி மகேந்திரன் செயல்பட, சிவாஜி ரசிகர்களின் தீவிரமான பங்களிப்பால் திறம்பட இயங்கி வருகிறது என்.டி.பேன்ஸ் சங்கம். சங்கத்தில் இணைய 9283195944, 9841425795 எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...