கடந்த 2006-ல் ஆர்யா நடிப்பில் வெளியான படம் ‘கலாபக் காதலன்’. அதில் ஆர்யா மனைவியின் தங்கையாக, ஏடாகூடமான கைக்கிளைக் காதலில் உருகி, இறுதியில் தன்னை மாய்த்துக்கொள்ளும் கண்மணி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களைக் கலங்கடித்தவர் அக்ஷயா. அதன்பிறகு பல படங்களில் நடித்தவர் திடீரென்று காணாமல் போனார். நண்பர்களுடன் இணைந்து இசை ஆல்பங்கள் தயாரித்திருக்கும் இவர் தன்னை ஒரு பாடகியாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போது கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகியாகவும் நடித்து ‘யாளி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…
நடிக்க வந்த புதிதில் ‘கண்மணி’ போன்ற ஒரு சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் எண்ணம் எப்படி வந்தது?
‘கலாபக் காதலன்’ படத்தின் இயக்குநர் இகோர் அண்ணாதான் காரணம். கதையையும் அதில் எனது கதாபாத்திரத்தையும் கூறியபோது அதிர்ச்சியடைந்து நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். “ துணிந்து யார் நெகட்டிவ் ரோல் எடுத்து நடித்திருக்கிறார்களோ அவர்கள்தான் சினிமா ஹிஸ்ட்ரியில் நின்றிருக்கிறார்கள். இதற்குமுன் மூன்று படங்களில் நடித்திருக்கிறீர்கள், உங்களை யாருக்காவது தெரிந்திருக்கிறதா? இந்த ஒரு கதாபாத்திரம் போதும் உங்களைப் பிரபலப்படுத்த” என்று கூறினார்.
அதுவுமில்லாமல் கண்மணி கதாபாத்திரத்தில் எந்த அளவுக்கு நெகட்டிவ் இருந்ததோ அந்த அளவுக்கு அதில் அவளுக்கான நியாயமும் இருந்தது. அந்த கேரக்டரை ஏற்க அதுவும் முக்கியக் காரணம். இகோர் சொன்னதுபோலவே அந்த ஒரு படமே என்னைப் பிரபலமாக்கிவிட்டது. அதேபோல் ஆர்யாவை சாக்லேட் பாய் என்று ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கியதும் ‘கலாபக் காதல’னுக்குப் பிறகுதான். கண்மணியும் அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். கண்மணி கதாபாத்திரத்துக்கு அவ்வளவு நேர்மையாக நடந்துகொண்டது தவறா என்று தெரியவில்லை.
அதன்பிறகு அதேமாதிரியான கதாபாத்திரங்களுக்குள் என்னைக் குறுக்கிவிடலாம் என்று நினைத்து வந்த 20-க்கும் அதிகமான வாய்ப்புகளை உறுதியுடன் மறுத்திருக்கிறேன். அப்படியும் என் மேல் க்ளாமர் இமேஜ் பதிந்துவிட்டது. அதை எனது ‘யாளி’ மாற்றிக்காட்டும்.
நீங்கள் நடித்துவந்த ‘தசையினைச் தீச்சுடினும்’ படத்தின் ஒளிப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் படம் என்னவானது?
அந்தப் படம் 90 சதவீதம் முடிந்து நின்றுவிட்டது. அதுமட்டும் வெளியாகியிருந்தால் எனது ட்ராவல் வேறுமாதிரி ஆகியிருக்கும். 1940-ல் நடக்கும் பெண் மையக் கதை. பாரதி என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் இளம் பாரதியாகவும் வயது முதிர்ந்த பாரதியாகவும் நடித்தேன். அந்தப் படத்துக்காக நல்ல தமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொண்டு பேசி நடித்தேன். அந்தப் படத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த வெங்கட் அண்ணா, தற்போது ‘காளி’ வெங்கட் என்ற பெயரிலேயே பிரபலமான ஆர்ட்டிஸ்டாக பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜாக்கெட் இல்லாமலும் பஃப் கை வைத்த ஜாக்கெட்டில் மடிசார் கட்டியிருந்த எனது படங்களைப் பத்திரிகைகளில் பார்த்து பாலிவுட்டிலிருந்து அழைப்பு வந்தது. பெங்காலி மற்றும் இந்தி இயக்குநரான சுதீப் ரஞ்சன் சர்க்கார் இயக்கிய ‘தி டிரான்ஸ்ஃபர்மேசன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தேன். அந்தப் படம் 20-க்கும் அதிகமான சர்வதேசப் படவிழாக்களில் கலந்துகொண்டது. ‘தசையினை தீச்சுடினும்’ படக்குழுவினரைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. ஒருக்கால் இந்தப் பேட்டியை அவர்கள் படித்து என்னை அணுகினால் அந்தப் படத்தை முடித்து வெளியிட நான் உதவிசெய்யத் தயாராக இருக்கிறேன்
உங்களுக்குத் திருமணமானது வெளியே தெரியவே இல்லையே?
வெளியே தெரிவிக்கக் கூடாது என்றில்லை. எனக்குத் திருமணம் ஆனபோது நான் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தேன். எனவே, எனது திருமணச்செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்திருக்கலாம். என் கணவர் ஷிப்பிங் தொழிலில் இருக்கிறார். எனது நடிப்பு மற்றும் பாடும் திறமையைப் பார்த்து ‘திருமண வாழ்க்கையால் உன் திறமைகளை வீணடித்துவிடாதே, நல்ல கதையைத் தயார் செய், நானே படத்தைத் தயாரிக்கிறேன். நீயே நடித்து இயக்கு’ என்று என்னை ஸ்டார்ட் கட் சொல்ல வைத்தவரே கணவர்தான்.
‘யாளி’ என்ற தலைப்பு பயமுறுத்துகிறதே?
யாளி நம் கோவில்களில் இருக்கும் காவல் தெய்வம். நமது பண்பாட்டில் மட்டுமே காணப்படும் அபூர்வம். சிங்க முகம், யானைத் தந்தத்துடன் கூடிய துதிக்கை, குதிரையின் உடலைக் கொண்டதுதான் யாளி. ‘புலி’ படத்தின் தலைப்பு எப்படி அந்தப் படத்தின் நாயகன் நடிகர் விஜயைக் குறிக்கிறதோ, அப்படி ‘யாளி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு கதையின் நாயகி ஜனனியைக் குறிக்கிறது. அவள் உணர்வுகளின் அபூர்வக் கலவை. இது ஒரு ரொமான்டிக் திரில்லர் கதை. நான் பாலிவுட் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது எனக்கு உதித்த கதை. மும்பை பின்னணியில் நடக்கிறது.
நாயகி ஜனனியாக நான் நடிக்கிறேன். தமன் ஹீரோ. நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். இவர்களோடு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத பாலா என்ற கதாபாத்திரம் ஜனனியைப் பின்தொடர்கிறது. பாலா யார், எதற்காக ஜனனியைப் பின் தொடர்கிறார், அந்த நேரத்தில் மும்மையில் நடக்கும் தொடர் குற்றச் சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் திரைக்கதை. மும்பை, மலேசியா,சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ஜூலை மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.