இந்து டாக்கீஸ்

மும்பை கேட்: சிறந்த நடிகர் விருது

கனி

நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் ‘(NYIFF) ‘கலி குலியான்’ (‘In the Shadows’) என்ற படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோஜ் பாஜ்பாய்க்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்கிறது. நான்கு சுவருக்குள் மட்டுமல்லாமல் மனச் சுவருக்குள்ளும் சிக்கிக்குள்ளும் ஒரு மனிதனின் உளச்சிக்கலைப் பதிவுசெய்திருக்கிறது தீபேஷ் ஜெய்ன் இயக்கியிருக்கும் இந்தப் படம்.

மனிதத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அவன் எடுக்கும் முயற்சிகளை உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்று பாராட்டப்படும் இந்தப் படத்தில் மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து ரன்வீர் ஷோரே, நீரஜ் கபி, சஹானா கோஸ்வாமி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதுவரை 15 சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டிருக்கும் ‘கலி குலியான்’ விரைவில் உலகம் முழுவதும் வெளியாக விருக்கிறது.

பாலிவுட்டில் நுழைகிறார் துல்கர்

இயக்குநர் ஆகர்ஷ் குரானா இயக்கத்தில் துல்கர் சல்மான், இர்ஃபான் கான், மிதிலா பால்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காரவான்’ வரும் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் ‘ஃபர்ஸ்ட் லுக்’கையும் நடிகர் துல்கர் சல்மான் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். ஒரு சாலைப் பயணத்தின்போது சந்திக்கும் மூவரின் வாழ்க்கையையும் நகைச்சுவையுடன் பின்தொடர்கிறது இந்தத் திரைப்படம்.

‘காரவான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்துவைத்திருக்கிறார் துல்கர் சல்மான். இந்தப் படத்தைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் சோனம் கபூருடன் ‘தி ஸோயா ஃபேக்டர்’ படத்தில் நடிக்கிறார் அவர். இந்த படங்களில் வெற்றி, தோல்வியைப் பொறுத்து அவரது பாலிவுட் பயணம் அமையலாம்.

SCROLL FOR NEXT