அர்த்தபூர்வமாக இருந்தால் தவிர திரைவிழாக்களில் அடிவைக்கமாட்டார் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம். சமூகச் செயற்பாட்டாளர் ‘டிராஃபிக்’ ராமசாமியின் வாழ்க்கை வரலாறு, ‘டிராஃபிக் ராமசாமி’ என்ற தலைப்பிலேயே படமாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் ‘ட்ராஃபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கும் அந்தப் படத்தின் டீசரை வெளியிட்ட சகாயம் “இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி ‘டிராஃபிக்’ ராமசாமி. இந்தப் படம் சமூகத்தின் குரலாக ஒலிக்கும் என்று நம்புகிறேன்” என்று வாழ்த்தினார்.
‘நர்மதா’வாக நந்திதா!
திருநங்கைகளைப் பற்றி ‘என்னைத் தேடிய நான்’, அறியா வயதில் தோன்றி அலைக்கழிக்கும் காதலைப் பற்றிப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத, வாய் பேசாத ஒரு சிறுவனை மையப்படுத்திய ‘கபாலி’ என மூன்று குறும்படங்களைத் தயாரித்து இயக்கியிருப்பவர் கீதா ராஜ்புத். பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், தற்போது ‘நர்மதா’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். தாய், மகனுக்கு இடையிலான பாசப் பிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்ல முயலும் இந்தப் படத்தில் நர்மதாவாக நடிப்பவர் நந்திதா ஸ்வேதா. இது நந்திதா ஸ்வேதா ஏற்று நடிக்கும் முதல் பெண் மையப் படம்.
விறுவிறு வர்மா!
தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை ‘வர்மா’ என்ற தலைப்பில் மறு ஆக்கம் செய்துகொண்டிருக்கிறார் பாலா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துவரும் காட்சிகளை ‘ரிகர்சல் டெஸ்ட்’ போலப் படம்பிடித்து வருகிறாராம் பாலா. படத்துக்குக் கதாநாயகி தேர்வாகிவிட்டாலும் அதை முதல் கட்டப் படப்பிடிப்பு முடியும்வரை அறிவிக்க வேண்டாம் என்று ரகசியம் காத்து வருகிறார்களாம். இந்தப் படத்துக்கு ‘ஜோக்கர்’ படப்புகழ் இயக்குநர் ராஜுமுருகன் வசனம் எழுதியிருக்கிறார்.
புகழ் மழையில் ‘நடிகையர் திலகம்’
‘மகாநடி’ தெலுங்குப் படத்தைப் பார்த்த ‘பாகுபலி’ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ட்வீட் ஒன்று, அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பைத் தமிழகத்திலும் அதிகப்படுத்தியிருக்கிறது. தனது ட்விட்டில் ‘‘நடிகை சாவித்திரியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பு அபாரம்! நான் இதுவரை பார்த்ததில் கீர்த்தி சுரேஷ் மிகச் சிறந்த நடிப்பை இந்தக் கதாபாத்திரத்துக்கு வழங்கியுள்ளார். அவர் நடிப்பின் மூலம் நடிகை சாவித்திரியை நம் கண்முன் மீண்டும் கொண்டு வந்துள்ளார் ” என்று குறிப்பிட்டிருக்கும் அவர், “ஜெமினி கணேசனாக நடித்துள்ள துல்கர் சல்மானின் நடிப்பைப் பார்த்து அவரது ரசிகராகிவிட்டேன் ” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகளின் படப்பிடிப்பில்...
அப்பாவின் இயக்கத்தில் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்துவந்தார் ஸ்ருதி ஹாசன். ஆனால், கமலின் அரசியல் பயணத்தால் அந்தப் படம் அப்படியே நிற்க, ஸ்ருதி ஹாசனைப் பற்றி ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. இது வேலைக்கு ஆகாது என்று முடிவுசெய்தாரோ என்னவோ, தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கத்தில் உருவாகிவரும் தலைப்பிடப்படாத படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குத் திடீரென்று வருகை தந்த ஸ்ருதி ஹாசனின் அம்மா சரிகா, மகளின் திரை நடிப்பைப் பக்கத்தில் இருந்து பார்வையிட்டுக் கண்கலங்கி மகளை அணைத்துக்கொண்டாராம்.
‘நரை’கள் வெகுண்டால்...
இளமை முறுக்குகொண்ட கதாநாயகர்கள் வில்லன்களை அடித்துத் துவைப்பதைப் பார்த்துப் பழகிப்போன ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தைத் தர இருக்கிறது ‘நரை’ என்ற திரைப்படம். “முதியோர் இல்லத்தில் வசிக்கும் 60 வயதைக் கடந்த ஏழு முதியவர்கள் கூட்டணி அமைத்து வில்லன்களிடம் மோதும் கதை. எதற்காக மோதுகிறார்கள், அதில் வென்றார்களா என்ற பின்னணி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கும்” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் விவி. வில்லன்களாகவும் நடித்துப் பெயர் வாங்கிய சங்கிலி முருகன், சந்தானபாரதி, ‘ஜூனியர்’ பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ் ஆகிய ஐந்துபேர்தான் இன்றைய வில்லன்களோடு மோதும் அந்த ஏழு ‘நரை’கள். இந்தப் படத்தில் ஹீரோக்கள்தான் முதியவர்களே தவிர லீமா, ஈதன் என 19 வயதுக்கு உட்பட்ட கதாநாயகிகள் இருவரும் பதின் பெண்கள்.