தமிழ்த் திரையின் பொற்காலம் என்று கொண்டாடப்படக் காரணமாக இருப்பவை, கறுப்பு வெள்ளைத் திரைப்படங்கள். கதையின் சாரத்தைக் கொண்டிருந்த பாடல்கள் அப்படங்களின் முக்கிய அம்சம். அவற்றை எப்போது கேட்டாலும் மூத்த தலைமுறையினர் நினைவுகளில் மூழ்கிப் போவார்கள்.
அப்படிப்பட்டச் செவிக்கினிய பாடல்களைப் பற்றி இந்து தமிழ் திசை வாசகர்களுக்குத் தொடர்ந்து எழுதி வருபவர் கோவையில் வசித்து வரும் பி.ஜி.எஸ்.மணியன். கரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அச்சிலும் பின்னர் இந்து தமிழ் இணையதளத்திலும் என்று இரண்டு திரையிசைத் தொடர்களை எழுதினார். ‘மறக்க முடியாத திரையிசை’, ‘திரையிசைக் கடலோடி’ ஆகிய தலைப்புகளில் வெளியான அந்தத் தொடர்களிலிருந்து 38 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து முதல் பாகமாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.
பாடல் களில் பயன்படுத்தப்பட்டுள்ள ராகம், இசை நுட்பம், பாடல் வரிகளின் கவிதை நயம், பாடகர்களின் பங்களிப்பு ஆகிய வற்றுடன், பாடல் உருவானபோதும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சமயத்திலும் நடந்த சுவையான சம்பவங்களையும் தேடித் திரட்டி இசைக் கூட்டாஞ் சோறுபோல் கொடுத்திருக்கிறார். மணியனின் இசை குறித்த எழுத்து நடை வாசிப்பவரின் நினைவை உசுப்பி அசைத்துவிடும். அதை இக்கட்டுரைகளை வாசிக்கும் போதும் உணரலாம்.
மறக்க முடியாத திரை இசை (பாகம் -1)
l பி.ஜி.எஸ். மணியன்
பக்கங்கள் 248
விலை ரூபாய் 250/-
வைகுந்த் பதிப்பகம்,
நாகர்கோவில் - 2;
தொடர்புக்கு: 94420 77268.
நிகழ மறுத்த அற்புதம்!
கறுப்பு - வெள்ளைப் படங்களின் காலத்தில், குறிப்பாக 50 மற்றும் 60களில் தமிழ் சினிமா இலக்கியத்திலிருந்து எடுத்துக்கொண்டது மிகக் குறைவு. ஆனால், அதே காலகட்டத்தில் தனது செவ்விலக்கியத்திலிருந்தும் சமகால இலக்கியத்திலிருந்தும் மலையாள சினிமா சுவீகரித்துக்கொண்ட கதைகள் ஏராளம். அதன்பின்னர் புத்தாயிரத்துக்கு முன்பு வரையிலும் இந்தச் சுவீகாரம் தொடர்ந்ததால் மலையாளத்தில் 100க்கும் அதிகமான சிறந்த கதைப் படங்கள் வெளிவந்தன.
கவிஞரும் திரைப்பட இணை இயக்குநருமான பொன்.சுதா தொகுத்துத் தந்திருக்கும் இந்நூல், திரை நூலகத்துக்கு ஓர் அற்புதமான வரவு. 1966இல் வெளியான ‘செம்மீன்’ படத்தை அறிமுகப்படுத்திய படி தொடங்கும் நூல், அங்கிருந்து 80கள், 90களுக்குப் பயணப்பட்டு ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு சிறந்த படங்களை அவற்றின் கதைச் சுருக்கத்தை ரசனையுடன் அறிமுகப்படுத்தி, அவற்றைத் தேடிக் காண வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. எம்.டி.வியின் எழுத்தில் உருவான பல திரைப்படங்கள் இதில் இடம்பெற்றதில் வியப்பில்லை. அதே நேரத்தில் முகுந்தன், வைக்கம் முகமது பஷீர் தொடங்கி பால் சக்கரியா வரையிலான படைப்பாளிகளின் படைப்புகள் மலையாளத் திரையில் இடம் பிடித்ததுபோல், தமிழில் நிகழாமல் போய்விட்டதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது.
ஆகச் சிறந்த 50 மலையாள சினிமா கதைகள்
l பொன்.சுதா
212 பக்கங்கள்
விலை 240/-
நாதன் பதிப்பகம்
சென்னை -93
தொடர்புக்கு:
98840 60274