வாசகர்கள், எழுத்தாளர்கள், விற்பனையாளர்கள் என மூன்று தரப்பினரையும் இணைப்பதில் சிறந்து விளங்கும் பதிப்பக நிறுவனங்களில் ஒன்று டிஸ்கவரி பதிப்பகம். அதனைத் தொடங்கிக் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்கவரி மு. வேடியப்பன் தற்போது ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதி, இயக்கியிருக்கும் ‘ரயில்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் வேடியப்பனுடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
சென்னைக்கு வந்ததே சினிமாவில் சாதிக்கத்தான் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள்? பிறகு பதிப்பகத் தொழிலில் இறங்கியது ஏன்?
சரியான தொடக்கப்புள்ளி என்றால் எனது வாசிப்புப் பழக்கம் என்று சொல்வேன். இளங்கலையில் தமிழ் இலக்கியம் படித்தேன். அதுவே எனக்குள்ளிருந்த படைப்பு மனத்தை முகிழ்க்கச் செய்தது. பணம், புகழ் எதுவாக இருந்தாலும் கலையின் அதிகபட்சச் சாத்தியமாக அப்போது எனக்குத் தெரிந்தது சினிமாதான். இப்போது அந்த எண்ணம் மாறியுள்ளது என்றாலும் ஒரு சிறந்த திரைப்படம் சமூகத்தில் உடனடியாகவோ, காலப்போக்கிலோ உருவாக்கும் தாக்கமும் மாறுதல்களும் ஆழமானவை என நம்புகிறேன். திரைப்படத்தை அந்த உயரத்தில் நேசிக்கும் பலரும் சென்னைக்கு சினிமா கனவுடன் வருவதுபோல்தான் நானும் வந்தேன். சென்னையில் திரைப்பட நண்பர்களுடன் நேரடியாகப் பழகத் தொடங்கியபோதுதான் வாசிப்புப் பழக்கம் என்கிற ஒன்று இங்கே பெரிதாக இல்லை என்று தெரிந்தது. வார இதழ்கள் படிப்பதே அதிகம். அல்லது அதுவே போதுமானது என்கிற ஒரு குழுவும் இருந்தது.
அது மாற வேண்டும் என்று நினைப்பது ஆரோக்கியம். நான் அதை மாற்ற வேண்டும் என்று முயன்றேன். ஆரோக்கியமான சமையல் வேண்டும் என்றால், சமையற்கட்டில் கைக்கு எட்டும் தூரத்தில் எல்லாப் பொருள்களும் இருக்க வேண்டும். திரைப்படங்கள் உருவாகும் பகுதியில் படைப்பு மனதுடன் புழங்கு கிற அனைவரும் இலக்கியம், உரைநடை இரண் டையுமே வாசிக்க வேண்டும். வாசிப்பு இல்லாமல் எப்படி நல்ல சினிமா வரும்? அதனால் வாசிக்கும் சூழலை கைக்கு எட்டும் தூரத்தில் உருவாக்கித் தர வேண்டும் என்கிற எண்ணம்தான் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடையை சென்னையின் கே.கே.நகரில் தொடங்கியதற்கான காரணம். புத்தகக் கடையின் நீட்சியாகவே பதிப்பகத்தையும் தொடங்கினேன்.
தற்கால இலக்கியத்தைப் பதிப்பிப்பவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால், சினிமா கனவுடன் வருகிறவர்கள் உங்கள் கடையைத் தேடி வந்து இலக்கியப் புத்தகம் வாங்குகிறார்களா?
இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், குறும்பட இயக்குநர்கள், புதிய தலைமுறைத் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு டிஸ்கவரி புக் பேலஸ் ‘படைப்புகளின் சுரங்கமாக’ இருப்பதாக அவர்களே என்னிடம் சொல்லிச் செல்கிறார்கள். மறைந்த மூத்த படைப்பாளிகளில் பாலு மகேந்திரா, மணிவண்ணன் தொடங்கி பலரும் வருகை தருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்கூட, புத்தகக் கடையின் மேல் தளத்தில் நடக்கும் கலை இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வரும்போது, சூழல் சார்ந்து வாசிப்புப் பழக்கத்திற்கு உட்படுகிறார்கள். பிறகு அவர்களே தொடர்ச்சியாக வாசிக்கத் தொடங்குகிறார்கள். டிஸ்கவரி புத்தகக் கடையைத் தேடி வந்து நேரம் செலவழித்து புத்தகத்தை வாங்கிச் செல்லும் பிரபலமான படைப்பாளிகள், வாசகர்கள் எண்ணிக்கை மிகப்பெரியது.
இயக்குநர் ஆகும் கனவுடன் இருந்த நீங்கள், இப்போது தயாரிப்பாளர்! எப்படியிருந்தது இந்த அனுபவம்?
என் மீது நம்பிக்கை வைத்த பல நண்பர்களின் உதவியுடன் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். எல்லாவற்றிலும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள நினைப்பேன். இந்த அனுபவம் என்பதுகூட முடிவானது இல்லை. புத்தகக் கடை, பதிப்பாளர், உலக அளவில் புத்தகச் சந்தைகளை நோக்கிய பயணம், நல்ல சினிமாவுக்காகப் பத்திரிகை ஒன்றை நடத்தியது, ஆயி ரத்துக்கும் மேற்பட்ட கலை இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தது எனப் பல வேலைகளைச் செய்து வந்தாலும் கலை – இலக்கியம் என்கிற வட்டத்தைத் தாண்டிய தில்லை. அதில் ஒன்றே திரைப்படத் தயாரிப்பு என்பதும். எந்தக் கலையாக இருந்தாலும் அந்தக் கலையைச் சார்ந்துள்ள கலைஞர்களைச் சமூகம் கைவிடாது என்றும் நம்புகிறேன்.
புலம்பெயர் தொழிலாளர்களின் வலியைப் படமாக்க எடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?
இப்படத்தின் இயக்குநர் பாஸ்கர் சக்தி புகழ்பெற்ற எழுத்தாளர், தேசிய விருது பெற்ற திரைப்படத்தின் கதாசிரியர், வசனகர்த்தா. அவருடைய படைப்புகள் பலவற்றை நாங்களே பதிப்பித்துள்ளோம். அவருடைய பால்ய நண்பரான தேனி ஈஸ்வர், இன்று தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான ஒளிப்பதிவு மூலம் தனியிடத்தைப் பிடித்திருக்கிறார். இரண்டு சிறந்த படைப்பாளிகள் ஒரு நல்ல கதையுடன் வந்தபோது, அது எல்லாருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்பது என் முடிவு. புலம்பெயர் தொழிலாளர் கதைதான் வேண்டும் என்று நாங்கள் திட்டமிடவில்லை. இந்த மண்ணின் அன்பையும் இங்கே வாழும் மக்களின் வாழ்க்கையில் தற்காலம் உருவாக்கும் மாற்றங்களையும் பேசும் கதையையே சிறந்த முதலீடாகக் கொண்டு நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம்.
‘வடக்கன்’ என்கிற தலைப்பை ‘ரயில்’ என மாற்றிவிட்டீர்கள். தணிக்கையில் என்ன நடந்தது?
திரைப்படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் பெற அனுப்புவதற்கு முன்பாக குறு முன்னோட்டம் ஒன்றை வெளியிட்டோம். அப்போதே திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்தோம். இதனால், தணிக்கைக் குழுவினர் திரைப்படத்தைப் பற்றிய சில முன் கருத்துகளோடு படத்தைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ஆனால் படம் பார்த்து முடித்ததும் அவர்களால் ஓர் இடத்தில்கூட ‘கட்’ சொல்ல முடிய வில்லை. பாராட்டவும் செய்தார்கள். என்றாலும் தலைப்பில் வந்து நின்று விட்டார்கள். ‘வடக்கன்’ என்கிற சொல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களைக் கேலி கிண்டல் செய்வதாகவும் பிரிவினையை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என்று கூறித் தலைப்பை மாற்றச் சொல்லி விட்டார்கள். பல தலைப்புகளையும் சொல்லி அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் ‘ரயில்’ இறுதியானது. இந்தத் தலைப்பு எங்களுக்கு மட்டுமல்ல இப்போது எல்லாருக்குமே பிடித்திருக்கிறது. அந்த வகையில் தணிக்கைக் குழுவுக்கு நன்றி. ‘ரயில்’ என்கிற இந்தச் சிறப்பான தலைப்பைக் கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி. அவருக்கும் எங்கள் குழு சார்பில் நன்றி.
தற்போது தயாரிப்பு, அடுத்துப் பட இயக்கமா?
அடிப்படையில் நானும் எழுத்தாளன். நாமே விரும்பி அமைத்துக்கொண்ட பரபரப்பான சூழல் எழுத்தாளனை முடக்கிவிட்டது. ஆனால், இயக்குநரை இழக்க மாட்டேன். சரியான சூழலைத் திட்ட மிட்டுக்கொண்டு இயக்குநர் ஆவேன். திரைப்படத் துறையில் இயக்குநர் என்கிற இடம்தான் ஒரு படைப்பாளிக்கு நிறைவான இடம். மக்களோடு உரையாட முடிகிற இடம்.