மம்மி தி ரிட்டர்ன்ஸ், கேம் பிளான், எம்பெயர் ஸ்டேட் போன்ற படங்களில் பட்டையைக் கிளப்பிய ஹாலிவுட் சூப்பர் நடிகர் டிவைன் ஜான்சன் (தி ராக்) நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் புதிய படம் ஹெர்குலஸ். பாக்ஸ் ஆபீஸ் ரேசில் பல படங்களைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு முன்னால் வந்திருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றி, ஜான்சனுக்கு ‘ஹெர்குலஸ்’ என்ற புதிய பெயரையும் பெற்றுத் தந்துள்ளது என்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். கிரேக்க மாவீரன் ஹெர்குலஸாக இதில் ஜான்சன் வேடம் ஏற்றுள்ளார். கி.மு. காலத்துக் கதை என்றாலும் வெகுஜன ரசனைக்கு ஏற்ப சண்டை, காதல் காட்சிகளை எல்லாம் கலந்து கொடுத்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.
நடிகர் ராக் தனது கதாபாத்திரத் தோற்றதுக்காக உண்மையாகவே அசுரத்தனமான உழைப்பைக் கொடுத்து, தன்னை இதுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத ஹாலிவுட் படவுலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். அவரது ஆறடி அஞ்சு அங்குல உயரம், கிட்டத்தட்ட
120 கிலோ எடை கொண்ட வலுவான உடல் என்று மிரட்டிவிட்டார் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸில். ராக் தோன்றும் காட்சிகளில் வில்லன்கள் மட்டுமல்ல. ராக்கின் ரசிகர்களும் வெலவெலத்துப் போவார்கள். இந்தப் படத்திலும் சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல ராக் பின்னியெடுத்துள்ளார். கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தும் ராக் தன் ரசிகர்களுக்காகச் சண்டைக் காட்சிகளை உண்மையாகச் செய்திருக்கிறார். குறிப்பாக, சிங்கத்துடன் மோதும் காட்சிகளை வியந்து சொல்கிறார்கள்.
ஆக்ஷன் மட்டுமில்லாமல் இந்தப் படத்தில் நடிப்பிலும் ராக் அசத்தியுள்ளார். காதலையும் கோபத்தையும் சோகத்தையும் சின்னச் சின்ன உடல் அசைவில் வெளிப்படுத்தியுள்ளார். “பொதுவாக அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தயாராவேன். சண்டைகள் பழகுவேன். ஆயுதங்களைப் பிரயோகித்துப் பழகுவேன். இப்படி எவ்வளவுக்கு எவ்வளவு அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமோ அந்த அளவுக்குப் பயிற்சி எடுப்பேன்.
ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் முதலில் கிரேக்க இதிகாசக் கதைகளை நம்பத் தொடங்கினேன். மதிப் பளித்தேன்” என்கிறார் ராக். ஹெர்குலஸ் படத்தில் நீங்கள் இதுவரை பார்த்திராத ராக்கைப் பார்ப்பீர்கள் என்றும் சொல்கிறார் ராக்!
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு பக்கம் அதிரடிக் காட்சிகளுக்கு ரெஸ்லிங்க் ராக் கலக்க, இன்னொரு பக்கம் காதல் காட்சிகளில் கலக்க அரினா சய்க்கைக் களமிறக்கியிருக்கிறார்கள். ரஷ்ய மாடல் அழகியான இவருக்கு இதுதான் முதல் படம். ராக்கின் மனைவியாக நடித்துள்ளார். கிரேக்கப் பாரம்பரிய உடையில் அரினா அழகுச் சிற்பமாக உள்ளார். இந்தப் படத்தின் மூலம் அரினாவுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உருவாகிவருகிறார்கள்.