நம்முடைய பெயர் மற்றவர்களின் பார்வையில் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்குப் பிடித்தமானதாக / ஈர்ப்புடையதாக இருந்தால், எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துவோம்? பெயரே ஒரு ஈர்ப்பைக் கொண்டுவர முடியும் என்பதால்தான், சொந்தப் பெயர் வேறொன்றாக இருந்தாலும், சினிமாவுக்காகப் பல கலைஞர்கள் தங்கள் பெயரை மாற்றி வைக்கிறார்கள். இன்று பிரபலமாக உள்ள பலரின் சொந்தப் பெயர் வேறொன்று என்பதே இதற்குச் சான்று.
ஒருவரின் பெயருக்கே இப்படி ஒரு கவனம் தேவை என்றால், ஒரு திரைப்படத்தின் தலைப்புக்கு எத்தகைய கவனம் தேவை. இப்போதெல்லாம் அனேகப் படங்களுக்கு இத்தகைய கவனம் இருப்பதாகத் தெரிவதில்லை.
இயக்குநர் மணி ரத்னம் படங்களின் தலைப்புகளின் தாக்கத்தை நன்கு உணர்ந்தவர் என்பதை அவரது தலைப்புகளைப் பார்த்தாலே சொல்லிவிடலாம்: மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பாம்பே, இருவர், அலை பாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன் மற்றும் கடல்.
இயக்குநர் ஷங்கரின் தலைப்புகளான ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் மற்றும் ஐ ஆகியவை சொல்வதென்ன?
கௌதம் மேனனின் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற கவிதையான தலைப்புகள் சொல்லும் ரகசியம் என்ன?
பாலாவின் தலைப்புகளான சேது, நந்தா, பிதா மகன், நான் கடவுள், அவன் இவன் , பரதேசி ஆகியவை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன?
இவ்வாறு வெற்றிப் பட இயக்குநர்களின் படத் தலைப்புகளை ஆராய்ச்சி செய்தாலே நமக்கு நல்ல யோசனைகள் கிடைக்கும்.
சூப்பர் ஸ்டாராக 1980-களில் மாறிய பின், ரஜினிகாந்த் படங்களின் தலைப்புகள் எவ்வாறு இருந்தன என்பதைப் பாருங்கள்: பில்லா, காளி, ஜானி, பொல்லாதவன், தீ, முரட்டுக்காளை, கழுகு, கர்ஜனை, நெற்றிக்கண், போக்கிரி ராஜா, படிக்காதவன், பணக்காரன், தனிக்காட்டு ராஜா, பாயும் புலி, தங்க மகன், நல்லவனுக்கு நல்லவன், நான் சிகப்பு மனிதன், வேலைக்காரன், மாவீரன், தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் மற்றும் லிங்கா. பலவும் ஒரு வார்த்தை தலைப்புகள்; ஒவ்வொன்றும் கேட்ட உடனே அதிர்வையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தக்கூடியவை.
தலைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?
சிறியதே அழகு: ஷங்கரின் படத் தலைப்புகள் எல்லாமே ஒரு வார்த்தையிலே இருப்பதே எவ்வாறு ஒரு குறுகிய சொல், பரவலாக மக்களிடம், சுலபமாகத் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உதாரணம். கே.வி. ஆனந்தும் அயன், கோ, மாற்றான், அனேகன் என்று ஒற்றைச் சொல் தலைப்புகளைத் தேர்வு செய்து, தன் படங்களின் மீது ஆவலை உண்டாக்குகிறார்.
உற்சாகம் தருவது: ஒரு நல்ல தலைப்பு மக்களுக்கு உற்சாகம் தர முடியும். உதாரணம்: கண்ணா லட்டு தின்ன ஆசையா?, தீயா வேலை செய்யணும் குமாரு.
வியப்பளிப்பது: பெரும்பாலானவர்கள் அறியாத தலைப்பு வியப்பை அளிக்கும். உதாரணம்: அயன், கோ, அனேகன், யான்…. இவை அதிகம் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் என்பதால் வியப்பை அளித்து, படத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும்.
தனித்துவமானது / புதுமையானது: இதுவரை கேட்டிராத, அதே சமயம் கேட்டவுடனே பிடிக்கக்கூடிய தனித்துவமான, புதுமையான தலைப்புகள் மக்களிடையே உடனே சென்றடைகின்றன. உதாரணம்: மான் கராத்தே, அட்டகத்தி, ஜிகர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம்.
படத்தைப் பற்றிப் பேசுபவை: சில தலைப்புகள், படத்துடன் சம்பந்தப்படுத்தி ஆர்வத்தை உண்டாக்கக்கூடியவை. அதுவே அப்படத்தின் வெற்றிக்கும் உதவும். உதாரணம்: கலகலப்பு, இவன் வேற மாதிரி, கும்கி, வழக்கு எண் 18/9, சதுரங்க வேட்டை.
கவித்துவமானவை: கௌதம் மேனன் வைக்கும் தலைப்புகள்.
நினைவில் நிற்பவை: கேட்ட உடனே மனதில் பதிந்து, மீண்டும் சொல்லக்கூடிய தலைப்புகள் பெரும் ஆர்வத்தை உண்டாக்க முடியும். உதாரணம்: அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், தசாவதாரம், விஸ்வரூபம் …
விற்பனைக்கு வரும் ஒரு பொருளுக்குக் கவனம் ஈர்க்கும் பெயர் அமைந்தால் அந்தப் பெயரே அப்பொருளின் பிராண்ட் மதிப்பைக் கூட்டுகிறது. அதே போல ஒரு படத் தலைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில், அதுவே ஒரு பிராண்டாக மாற வாய்ப்புள்ளது. ஒரு நல்ல தலைப்பு சக்தி வாய்ந்ததாக மாறும்போது அந்தத் தலைப்பை மீண்டும் உபயோகிக்கவும் முடியும் (பில்லா 2, முனி - 3, நான் அவன் இல்லை 2, சிங்கம் 2 போல).
தலைப்பு செய்யும் மேஜிக்:
உடனடி ஈர்ப்பு (Attract): ஒரு நல்ல தலைப்பு படத்தின் மேல் ஈர்ப்பை உண்டாக்கிவிடுகிறது. அப்படத்தின் முதல் விளம்பரங்களும், முன்னோட்டமும் அத்தலைப்புடன் சரியான முறையில் வெளிவரும்போது, பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும் வலிமை பெறுகிறது.
ஆர்வம் (Interest): ஒரு நல்ல தலைப்பு, படத்தின் மேல் ஆர்வத்தை உண்டாக்கி, அதைப் பற்றிப் பலரிடம் பேச வைக்கிறது. எப்போது படம் வரும் என்ற ஆர்வத்தைப் பார்வையாளர்களிடம் தலைப்பே உண்டாக்க முடியும்.
விருப்பம் / ஆசை (Desire): அனைவரையும் கவரக்கூடிய தலைப்பு படத்தின் மேல் ஒரு ஆசையை / விருப்பத்தை ஏற்படுத்துகிறது. உதாரணங்கள்: கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், கோ, வேட்டை, கலகலப்பு, அட்டகத்தி, சூது கவ்வும், காதலில் சொதப்புவது எப்படி, ஒரு கல் ஒரு கண்ணாடி.
செயல்பாடு (Action): நல்ல தலைப்புடன் ஒரு படம் வெளிவரும் போது, பார்வையாளர்களின் செயல்பாட்டை அது உறுதிசெய்கிறது. அப்படத்தை முதல் நாளே பார்க்க விழைகிறார்கள்.
திருப்தி (Satisfaction): நல்ல தலைப்புடனும், எதிர்பார்ப்புடனும் வெளிவந்த படம், நன்றாக இருந்தால், அது பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தி, படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டும். பலரிடமும் படம் பற்றிய நல்ல தகவல்களைச் சொல்ல வைக்கும்.
இதைத் தான் பிராண்ட் சந்தைப்படுத்துதலில் AIDAS சூத்திரம் என்கிறார்கள். சினிமா படத் தலைப்புகளுக்கும் இந்தச் சூத்திரம் பொருந்தும்.
தலைப்பும் முன்னோட்டமும் தொடக்க வசூலைக் கொண்டுவரும். இதன் பிறகு படம் மக்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் படம் பெரிய வெற்றியை அடையும். வாரத்தில் இரண்டு முதல் நான்கு படங்கள்வரை வரும் சூழ்நிலையில், படத்தின் முதல் தனித்துவமே அதன் தலைப்புதான். தனித்துவமே ஈர்ப்பை உண்டாக்குகிறது. அந்த ஈர்ப்பை உண்டாக்குவது படத்தை உருவாக்குபவர்களின் கடமையும் சவாலும் ஆகும்.
தொடர்புக்கு: dhananjayang@gmail.com