தமிழின் அகரமுதலி, ‘அசுரன்’ என்கிற சொல்லுக்கு ‘தேவர்களின் பகைவர் குலத்தைச் சேர்ந்தவன்; விரைந்து திறமையாகச் செயல்படுபவன் மற்றும் மது அருந்தாதவன்’ என்று பொருள் தருகிறது. 2022இல் அமேசான் ஒரிஜினல் வரிசையில் வெளியான ‘ரீச்சர்’ தொடரின் கதாநாயகனான ஜேக் ரீச்சரை ஓர் அட்டகாசமான ‘அசுரன்’ என்று சொல்லிவிடலாம்.
தேவர்களைப் போன்று பெரும் புகழ், அந்தஸ்துடன் திகழும் பெரிய மனிதர்கள், அரசாங்கத்தைத் தங்கள் கைப்பாவையாக்கி வைத்துக் கொண்டு சமூகத்துக்கு எதிராக ஆடும் திரை மறைவு ஆட்டம் வெளியே தெரிவதில்லை. ஆனால், இயற்கைக்கு மாறான எதையும் அது வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை.
இக்கதையின் நாயகனை இயற்கை அனுப்புகிறது. அமெரிக்க ராணுவத்தில் முன்னாள் மேஜராக இருந்த ஜேக் ரீச்சார்தான் அந்த ஆசாமி. தனது அண்ணன் குடியேறிய மார்கிரேவ் என்கிற சிறு நகரத்துக்கு (அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உண்மையில் அப்படியொரு நகரம் இல்லை) முதல் முறையாக, அவனைக் காணப் பல ஆண்டுகளுக்குப் பின் பேருந்தில் வந்து இறங்கி ஊருக்குள் நடக்கிறான்.
அவன் அந்த ஊருக்குள் நுழைந்த நிகழ் நேரத்தில் ஒரு கொலை நடக்கிறது. அக்கொலையை ரீச்சர் செய்திருப்பான் என நகரின் காவல்துறை அவனைப் பிடித்து விசாரணைக் கைதி ஆக்குகிறது.
ஆனால், அதே காவல்துறை, விரும்பியும் விரும்பாமலும் ரீச்சரின் புலன் விசாரணைத் திறனைப் பார்த்து வியக்கிறது. அந்தக் கொலையை விசாரிக்க ஒரு ‘அன் - அஃபிஷியல்’ ஏஜெண்டைப் போல அவனைப் பயன் படுத்துகிறது. ரீச்சர் ஊருக்குள் நுழைந்த வேளையில் கொலையானது அவனுடைய அண்ணன் எனத் தெரிய வரும்போது ரீச்சரின் புலன் விசாரணை சூடுபிடிக்கத் தொடங்குகிறது.
ஒரு சுயாதீன புலன் விசாரணை புலியாக மாறும் ரீச்சர், உண்மையின் வேர்களைத் தோண்டிச் செல்லும் அசுரத்தனமான பயணத்தில் எதிர்ப்படும் கதாபாத்திரங்கள் ஹாலிவுட் வணிக சினிமாவில் வருவனபோல் இருக்கின்றன. என்றாலும் புதிர்களை விடுவிக்கும் நிக் சண்டோராவின் சாரமான திரைக்கதை பாணி உங்களை அடித்து உட்கார வைக்கும்.
அறத்தின் பக்கம் நிற்க விரும்பும் ஜேக் ரீச்சராக, டி.சி காமிக்ஸின் சூப்பர் ஹியுமன் படங்களில் தோன்றிப் ஹாலிவுட் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஆலன் ரிச்சர்சன் கெத்து காட்டியிருக்கிறார். அவர் செய்யும் சாகசங்கள் பெரும்பாலான காட்சிகளில் தர்க்கரீதியாக அபாரம்.
ரீச்சர் தனது நுணுக்கமான அறிவையும் உடல் பலத்தையும் பயன்படுத்தும் கதாபாத்திரம் என்பதால் தொடர் கடந்த 2 ஆண்டுகளில் வெகுவாக ரசிக்கப் பட்டிருப்பதுடன், பார்வையாளர்கள் மத்தியில் அதிக மதிப்பெண் பெற்ற தொடராகவும் கவர்கிறது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘பல்ப் பிக் ஷன்’ எழுத்தாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் டோவர் கிராண்ட் என்பவர், ‘லீ சைல்ட்’ என்கிற புனைபெயரில் எழுதிக் குவித்த சாணிக் காகித நாவல்களில் புகழ்பெற்றதுதான், அவசியப்படும் போது மிகை வன்முறையைக் கையிலெ டுக்கும் இந்த ரீச்சர் கதாபாத்திரம். 18 வயதைக் கடந்தவர்கள் மட்டும் இதைக் காண்பது நலம். புத்திசாலித்தனமான திரைக்கதையால் உடல் சிலிர்ப்பவர் களுக்கான குற்றப் பின்னணிக் களம்.