இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: காவிரிக்காக...

செய்திப்பிரிவு

டிஜிட்டல் சினிமா சேவை நிறுவனங்களின் கட்டண விகிதம், குரூப் ரிலீஸ் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துவரும் தமிழ்ப் படவுலகின் வேலைநிறுத்தம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. அப்படிஇருக்க தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கமும் போராட்டம் நடத்த முன்வந்திருக்கிறது. இதற்காகப் படவுலகின் அனைத்துச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஏப்ரல் 8-ம் தேதி சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ‘மெர்குரி’

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறப்புக் காட்சியாக ‘மெர்குரி’ படம் திரையிடப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஏப்ரல் 13-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தால் இப்படம் திட்டமிட்டபடி வெளியாகலாம் என்கின்றன தயாரிப்பாளர் வட்டத் தகவல்கள்.

‘பாரி’ ஆக மாறும் நயன்

கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைவிடக் கதாநாயகர்களின் இடத்தை எடுத்துக்கொள்ளும் பெண் மையக் கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் ‘பாரி’ என்ற இந்திப் படத்தின் தமிழ் மறு ஆக்கத்தில் நடிக்க நயன்தாரா முடிவு செய்திருக்கிறார். அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் ‘பாரி’.

காதல் பூங்கா

சமந்தா கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கும் தெலுங்குப் படமான ‘ரங்கஸ்தலம்’ ஆந்திராவில் வசூல்ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. அதைப் புறந்தள்ளிவிட்டு தன் கணவர் நாக சைதன்யாவுடன் அமெரிக்காவின் நியூயார்க் பறந்துள்ளார் சமந்தா. அங்குள்ள சென்ட்ரல் பார்க்கில் தன் கணருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை வெளியிட்டு ட்வீட்டியிருக்கும் அவர்,

“ இந்த இடத்தில்தான் 8 வருடங்களுக்கு முன் எங்களது காதலை உணர்ந்து பரிமாறிக்கொண்டோம். அதை நன்றியுடன் நினைவுபடுத்திப் பார்க்கவே இந்த செல்ஃபி” என்று குறிப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

இயக்குநரின் தேடல்

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் புதிய படத்தை இயக்க இருக்கிறார். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்காகத் தமிழகம் முழுவதும் இளம் கால்பந்தாட்ட வீரர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறாராம் இயக்குநர் சுசீந்திரன்.

பாடகி மடோனா

‘பிரேமம்’ புகழ் மடோனா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்துகொண்டிருக்கிறார். நடித்து கிடைக்கும் வருமானத்தைவிட அவர் தனது இசைக்குழு மூலம் நடத்திவரும் லைவ் இசை நிகழ்ச்சிகள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பாடகியாக வலம் வருகிறாராம். அமெரிக்காவில் நடக்க இருக்கும் பாப் ஃபெஸ்டிவலில் கலந்துகொண்டு பாட, தனது டெமோ சிடியை அனுப்பி வைத்திருக்கிறாராம்.

SCROLL FOR NEXT