கொங்கு வட்டாரத்தில் ஒரு பசுமையான கிராமம். அங்கே ஓர் எளிய குடும்பம். மதுவுக்கு அடிமையாக இருக்கும் அப்பா, பாசமும் கண்டிப்பும் மிகுந்த அம்மா (நக்கலைட்ஸ் மீனா). நடுத்தர வயதைச் சேர்ந்த இந்தப் பெற்றோரின் 12 வயது மகன் சரவணன் (கார்த்திக் விஜய்), 10 வயது மகள் துர்கா (பிரணிதி)
இருவரும் பள்ளி சென்று திரும்பும் வழியில் கருவேல முள்ளில் சிக்கிக் கிடக்கும் ஓர் ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறார்கள். அதை மீட்டு, வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்து வளர்க்கிறார்கள். துர்கா அதற்கு ‘புஜ்ஜி’ என்று பெயர் சூட்டுகிறாள்.
குடியால் குடும்பத்தைக் கவனிக்காத அப்பாவும் அதனால் அல்லல்படும் அம்மாவும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள் வதைக் காணும் பிள்ளைகள், தங்கள் அன்பை புஜ்ஜியின் மீது நிறைக்கிறார்கள். புஜ்ஜி மீதான தங்கையின் பிணைப்பைப் பார்த்து அண்ணன் ‘மட்டன்’ சாப்பிடுவதையே நிறுத்திவிடுகிறான்.
ஒரு நாள் மது குடிக்கக் காசு வேண்டி, புஜ்ஜியை துர்காவின் அப்பா விற்றுவிடுகிறார். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பிள்ளைகள், புஜ்ஜி விற்கப்பட்டதை அறிந்து, அதை மீட்டுக்கொண்டு வரத் தன்னந்தனியாகப் புறப்படுகிறார்கள். பேருந்தில் பல ஊர்களைக் கடந்து அனுப்பட்டி என்கிற கிராமத்துக்கு வந்து சேர்கிறார்கள்.
அங்கே, அப்பா - அம்மாவை இழந்து நிராதரவாக வாழும் தர்ஷினி (லாவண்யா கண்மணி) என்கிற இளம் பெண், இந்தக் குழந்தைகளுக்கு உதவ அவர்களுடன் இணைந்து கொள்கிறாள். புஜ்ஜியைத் தேடும் பயணத்தில் இந்த மூவரும் எப்படிப்பட்ட மனிதர்களைச் சந்தித் தார்கள். அவர்களால் ஆட்டுக் குட்டியை மீட்க முடிந்ததா இல்லையா என்பது கதை.
கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது ‘கிடா’ திரைப்படம். ஒரு தீபாவளிப் பண்டிகையின் பின்னணி யில், ஒரு கிராமத்துத் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை, அவர்கள் வளர்த்த ஓர் ஆட்டின் மீதான அன்பை மையப்படுத்திச் சிறப்பாகவே சித்தரித்தது. நாய், பூனை, பறவைகளை மட்டுமல்ல; ஆடுகளையும் செல்லப் பிராணியாக வளர்க்கும் கிராமியப் பண்பாட்டைப் போற்றியிருக்கிறது ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.
படத்தை எழுதி, இயக்கியிருக்கும் ராம் கந்தசாமி முதல் பாதிவரை சிறார்களின் மனவோட்டத்தையும் அவர்களது உலகையும் கச்சிதமாகப் படம் பிடிக்கும் காட்சிகள் வழியாகக் கதை சொல்லியிருக்கும் விதம் ஈர்க்கிறது. ஆனால், இரண்டாம் பாதி, பெரியவர்களின் உலகில் பயணிக்கும் சிறார்களின் படமாக மாறிவிடுகிறது.
இரண்டாம் பாதியின் நாடகங்கள் புஜ்ஜியைத் தேடும் பயணத்தில் சிறார் களின் போராட்டத்தை இரண்டாம் இடத்துக்குத் தள்ளுகின்றன. என்றாலும் நடிகர்கள் அனைவரும் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கார்த்திக்ராஜாவின் இசை படமெங்கும் சிலிர்ப்பைத் தந்தபடி தவழ்ந்து செல்கிறது.
நிறை குறைகளைத் தாண்டி, ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’ அசலான தமிழ் கிராமம் ஒன்றின் ஆன்மாவைத் தற்காலத்தின் சிக்கல்களோடு தந்து, சிறார்கள், பெரியவர்களுக்கான படமாகக் கவனிக்க வைக்கிறது.