டிஜிட்டல் கேமராவின் வருகைக்குப் பிறகு, சினிமாவை செல்லுலாய்ட் பிலிமில் படமெடுக்கும் முறை உலகம் முழுக்க அருகிவிட்டது. ஆனால், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைவிட, பாலியஸ்டரும் எமல்சனும் கலந்த செல்லுலாய்ட் பிலிம்தான் ஒளியை அத்தனை நேர்த்தியோடு பதிவுசெய்துகொள்ளும் ஊடகம் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஹாலிவுட்டின் மாஸ்டர்களாகக் கொண்டாடப்படும் குவெண்டின் டரண்டினோ, கிறிஸ்டோபர் நோலன், ஜே. ஜே. ஆப்ரம்ஸ் ஆகியோர் இன்னும் படச்சுருள்களைத்தான் தங்கள் படங்களுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகெங்கும் வரவேற்பைப் பெற்ற, இரண்டாம் உலகப் போர் பற்றிய ‘டன்கிர்க்’ திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன், 65 எம்எம் படச்சுருளில்தான் படமாக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. முழுவதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட சினிமாவில் இன்னும் செல்லுலாய்ட் படச்சுருளின் மகத்துவத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். தமிழில் படச்சுருளில் கடைசியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட திரைப்படம் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த ஷங்கரின் ‘ஐ’. செல்லுலாய்ட் பிலிம் உலகத் திரைப்படக் கலாச்சாரத்தின் அங்கமென்று கூறி, படச்சுருளில் படமெடுப்பதை ஊக்குவிப்பதற்காகச் சென்ற வாரம் கிறிஸ்டோபர் நோலன் மும்பை வந்திருந்தார்.
படங்களை எடுப்பதற்கு மட்டுமின்றி, பழைய திரைப்படங்களைப் பாதுகாப்பதற்கும் செல்லுலாய்ட் ஊடகம்தான் டிஜிட்டல் வடிவத்தைவிடச் சிறந்தது என்கிறார் கிறிஸ்டோபர் நோலன். “உலகிலேயே அதிக சினிமாக்கள் தயாரிக்கப்படும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் சினிமாத்துறையினரிடம் கலந்து பேசுவதற்கான பயணம் இது. இந்திய சினிமா பற்றித் தெரிந்துகொள்வதும், முக்கியமான சினிமா ஆளுமைகளைச் சந்திப்பதும்தான் எனது ஆசை” என்று கூறிய கிறிஸ்டோபர் நோலன், சத்யஜித் ராய் இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’யைச் சமீபத்தில் தான் பார்த்துள்ளார். தான் பார்த்த சிறந்த திரைப்படைப்புகளில் ஒன்று அது என்று பாராட்டியுள்ளார்.
செல்லுலாய்ட் பிலிமில் படமெடுப்பது செலவை அதிகரிப்பது, பாதுகாக்க முடியாதது, செல்லுலாய்ட் பிலிம் கிடைக்காது போன்ற கற்பிதங்களைத் தகர்க்கும் வகையில் கிறிஸ்டோபர் நோலன் மும்பையில் பங்குபெற்ற கருத்தரங்கம் அமைந்தது. பிலிம் ஹெரிட்டேஜ் அறக்கட்டளையின் தலைவரான சிவேந்திர சிங் துங்கர்புர் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், ஷாரூக் கான், கமல் ஹாசன், ஷியாம் பெனகல், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டனர்.
ஒரு செல்லுலாய்டு பிலிமில் எடுக்கப்பட்ட படத்தைப் பார்க்கும் அனுபவத்தை எல்லாரும் உணர வேண்டும் என்பதற்காக ‘டன்கிர்க்’ படம் 70 எம்எம் ஐமேக்ஸ் முறையில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. ‘இன்டர்ஸ்டெல்லார்’ படம் 35 எம்எம்மில் திரையிடப்பட்டது.
“நாம் எதிர்பார்க்காத விதங்களில் திரைப்படக் கலாச்சாரம் மேம்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்தக் கருத்தரங்கில் படப்பதிவு ஊடகமாக செல்லுலாய்ட் பிலிம் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினோம். எதிர்காலத்தில் யார் இதைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை ஊகிக்கவும் முடியாது.
பாதுகாத்து வைப்பதற்கான ஊடகமாக டிஜிட்டல் இமேஜிங் தொழில்நுட்பத்தைவிட இன்னமும் செல்லுலாய்ட்தான் சிறப்பானது என்பதை மட்டும் என்னால் வலியுறுத்திச் சொல்ல முடியும். அதை டிஜிட்டல் சினிமா பேக்கேஜாக மாற்றினாலும் அந்தத் தரத்தை நம்மால் உணர முடியும்” என்று கூறியுள்ளார் நோலன்.
வெறுமனே பொருளாதார தர்க்கங்களின் அடிப்படையிலேயே சினிமாவை ஆராய முடியாது என்று கூறும் கிறிஸ்டோபர் நோலன், “நாம் வாழும் உலகத்தையும் நமது கனவுகளையும் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் அருமையான ஊடகம் சினிமா.
ஆழ்மன, உணர்வுரீதியான எதிர்வினைகளைத் தூண்டக்கூடிய வல்லமை கொண்டது சினிமா” எனும் கிறிஸ்டோபர் நோலன், “செல்லுலாய்ட் பிலிமுக்கு அழிவில்லை, செல்லுலாய்ட் பிலிம் மட்டுமே இருக்க வேண்டுமென்று கூறவில்லை. டிஜிட்டலும் செல்லுலாய்டும் இணைந்து பயணம் செய்ய வேண்டும்” என்கிறார். படச்சுருள் குறித்து மும்பை கருத்தரங்கில் நோலன் கூறியிருக்கும் கருத்துகள் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
கமல் கோரிய மன்னிப்பு
சினிமா, அரசியல் என இரண்டிலும் இடைவிடாமல் இயங்கிவரும் கமல் ஹாசன் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டது பற்றி ட்வீட் செய்திருக்கிறார். ‘‘சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனைச் சந்தித்தேன். அவர் இயக்கிய ‘டன்கிர்க்’ திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ‘ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியை அவருக்கு வழங்கியிருக்கிறேன்.
நான் நடித்த ‘பாபநாசம்’ படத்தை அவர் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி’’ என்று தெரிவித்திருக்கும் கமல், தனது ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பிகாசோவின் ஓவியத்தை ஜெராக்ஸ் பிரதியாகப் பார்ப்பதைப் போலத்தான் ஒரு செல்லுலாய்ட் பிலிம் திரைப்படத்தின் டிஜிட்டல் வடிவம் இருக்குமென்றும் பிலிமே ஒரிஜினல் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார்.