இந்து டாக்கீஸ்

ஏப்ரல் 23: உலகப் புத்தக நாள்- இரவுகளுக்குத் திகிலூட்டியவர்கள்

இந்திரா செளந்தர்ராஜன்

லக அளவில் ‘ஹாரர்’ என்று சொல்லப்படுகிற ‘திகில்’ படங்களுக்கு, பிதாமகராக விளங்குபவர் ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக். ஆனால் இந்தியாவில் அப்படியொரு ஆளுமை இன்னும் உருவாகவில்லை. எனினும், இந்தியத் திரைஉலகில் ‘திகில்’ படங்களுக்கான பாதையைப் போட்டுக்கொடுத்தவர்கள் என்று ‘ஏழு சகோதரர்களை’ சொல்லலாம். அந்த ஏழு சகோதரர்கள்… ‘ராம்ஸே பிரதர்ஸ்’. எழுபதுகள், எண்பதுகளின் இரவுகளை அச்சமூட்டுவதாக மாற்றிய முன்னோடிகள்!

1972-ல் வெளிவந்த தங்களின் முதல் படம் தொட்டு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ‘ராம்ஸே பிரதர்ஸ்’ பேனரில் வெளிவந்த சுமார் 20 திகில் படங்களின் ‘டெம்ப்ளேட்’ ரசிகர்களை குலைநடுங்க வைத்தது. பேய்களிலேயே பல வித்தியாசங்களை உருவாக்கி திகில் படங்களை ‘கல்ட் ரசனை’க்குள் கொண்டுவந்த ராம்ஸே பிரதர்ஸ் பற்றி, ஹார்ப்பர் காலின்ஸ் வெளியீடாகச் சமீபத்தில் வெளிவந்தது ‘டோன்ட் டிஸ்டர்ப் தி டெட்’ எனும் புத்தகம். ‘கல்ட் வாசகர்’களையும் இன்றைய தலைமுறை வாசகர்களையும் கவரக்கூடிய இதைப் பத்திரிகையாளர் ஷம்யா தாஸ்குப்தா எழுதியுள்ளார்.

‘டோன்ட் டிஸ்டர்ப் தி டெட்’ எனும் இந்தப் புத்தகத்துக்கான தலைப்பு கிடைத்ததே ரொம்பவும் சுவாரசியமான விஷயம். புத்தகத்துக்காக, அதன் ஆசிரியர் ஷம்யா, ராம்ஸே சகோதரர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களில் ஒருவர் தங்களின் ஆரம்பகாலப் படங்களைப் பற்றிப் பகிர்ந்தார். அப்போது, சுடுகாட்டில் ஒரு காட்சி எடுக்க வேண்டியிருந்ததாம். அதற்காக அனுமதி வேண்டி, அந்தச் சுடுகாட்டின் பாதுகாவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘இறந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் படம் எடுங்கள்’ என்று கூறிச் சென்றாராம். அப்படிக் கிடைத்ததுதான் இந்தத் தலைப்பு. தங்களது படங்களின் மூலம் அன்றைய ரசிகர்களைத் தூங்கவிடாமல் பயமுறுத்தி தொந்தரவு செய்த அந்தச் சகோதரர்கள், பேய்ப் படம் எடுக்க வந்தது, அதைவிட சுவாரசியமான வரலாறு.

1947-ல், கராச்சியில் ரேடியோ கடை ஒன்றை நடத்தி வந்தார் ஃபதேசந்த் உத்தம்சந்த் ராம்சிங்கானி. ஆங்கிலேயர்களின் வாயில் ‘ராம்சிங்கானி’ என்ற வார்த்தை சரியாக நுழையவில்லை. அதனால் பலர் அவரை ‘ராம்ஸே’ என்று அழைக்கத் தொடங்கினர். பிரிவினைக்குப் பிறகு, மும்பைக்கு வந்தார் ராம்ஸே. அங்கேயும் ரேடியோ கடைதான் வைத்தார். அவருக்குத் திருமணமானது. அடுத்தடுத்து 7 மகன்கள், 2 மகள்கள் பிறந்தனர். குமார், கங்கு, துளசி, அர்ஜுன், கேஷூ, ஷ்யாம், கிரண் ஆகிய 7 மகன்களின் பெயருக்குப் பின்னாலும் ‘ராம்ஸே’ ஒட்டிக்கொண்டது. இவர்கள்தாம் பின்னாளில் ‘ராம்ஸே பிரதர்ஸ்’ ஆனார்கள்.

அப்பா ராம்ஸேவுக்கு, தன் நண்பர் ஒருவர் மூலமாக சினிமாவில் கால் பதிக்க ஆர்வம் ஏற்பட்டது. எனவே, ராம்ஸேவும் அவருடைய நண்பரும் பகத் சிங் குறித்து, ‘ஷாஹிதே ஆசம் பகத் சிங்’ எனும் தலைப்பில் படமொன்றை எடுத்தார்கள். என்ன காரணத்தாலோ, அந்தப் படத்தில் ராம்ஸேவின் பெயர் இடம்பெறவில்லை. மனம் தளராத ராம்ஸே, தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் ‘ரஸ்தம் சோரப்’ எனும் படத்தை எடுத்தார். ஆனால் அது சரியாகப் போகவில்லை. அதற்குப் பிறகு ‘ஏக் நன்ஹி முன்னி லட்கி தீ’ எனும் படத்தை பிருத்விராஜ் கபூர் நடிப்பில் தயாரித்தார் ராம்ஸே. அந்தப் படம் பரவாயில்லை ரகம்.

தன்னுடைய மகன்களுக்கும் சினிமா ஆர்வம் இருந்ததால், ஹாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த ஜோசப் வி.மசெல்லி என்பவர் எழுதிய ‘ஃபைவ் சி’ஸ் ஆஃப் சினிமாட்டோகிராஃபி’ எனும் புத்தகத்தை, அவர்களைப் படிக்கவைத்தார். அதை முழுவதுமாகக் கற்றுத் தேர்ந்த அவர்களை, தான் தயாரிக்கும் படங்களிலேயே கிளாப் அடிப்பது, ட்ராலி தள்ளுவது, டீ சப்ளை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தினார். இதனால், சினிமாவின் அடிப்படைகள் பலவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

பிருத்விராஜ் கபூர் நடித்த அந்தப் படம் வெளியானபோது, அந்தச் சகோதரர்கள் அனைவரும் திரையரங்குக்குச் சென்றார்கள். அந்தப் படத்தில், கபூர், விகாரமான ஒரு முகமூடியை அணிந்து, அருங்காட்சியகத்திலிருந்து மதிப்பு வாய்ந்த ஒரு பொருளைத் திருடுவார். அந்த முகமூடியைப் பார்த்ததுமே ரசிகர்கள் ‘ஆ…!’ என்று அச்சத்திலும் ஆச்சரியத்திலும் கத்தினார்கள். அந்த ‘ஆ…!’தான், ராம்ஸே சகோதரர்களுக்கு பாலிவுட்டில் முகவரியை வழங்கியது. ‘ஹாரர்’ என்றால் ஹாலிவுட் என்ற நிலையை மாற்றி, இந்திய ரசிகர்களுக்கு இந்தியத் தன்மையுடன் கூடிய திகிலை ஏற்படுத்தினார்கள்.

‘தோ காஸ் ஜமீன் கீ நீச்சே’ எனும் ராம்ஸே சகோதரர்களின் முதல் ‘ஹாரர்’ படம். படம், பெரிய அளவில் ‘ஹிட்’ ஆகவில்லை என்றாலும்கூட, ‘யாருப்பா இவங்க…?’ என்று பாலிவுட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தப் படத்தில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், எடிட்டிங், ஒலிப்பதிவு, கேமரா, தயாரிப்பு என ஒரு திரைப்படத்தின் முக்கிய அம்சங்கள் அனைத்தையுமே ராம்ஸே சகோதரர்களே பார்த்துக்கொண்டார்கள். அடுத்த இருபது ஆண்டுகளில், அவர்கள் எடுத்த சுமார் 20 படங்களுக்கும் இதே கூட்டணியே தொடர்ந்தது குறிப்பிடத்தகுந்த ஒன்று!

முதல் படத்துக்குப் பிறகு, ‘தர்வாஸா’, ‘புராணா மந்திர்’, ‘புராணா ஹவேலி’, ‘வீரானா’ (சென்ஸாரில் 46 வெட்டுகள் வாங்கிய படம்!) என அடுத்தடுத்து அவர்களின் பேனரில் வெளிவந்த படங்கள் அனைத்தும் ‘ரன் அவே ஹிட்’. குறைந்த பட்ஜெட், பெரும்பாலும் உள்ளூர் லொகேஷன்கள் (மும்பையில் உள்ள மஹாபலேஸ்வர் எனும் பகுதியை இவர்களைப் போல வேறு எந்தத் தயாரிப்பு நிறுவனமும் பயன்படுத்தியிருக்க முடியாது), அவ்வளவாக அறிமுகமில்லாத நடிகர்கள் (ஷூட்டிங்குக்குத் தேவையான உடைகளை நடிகர்களே எடுத்து வர வேண்டும்), ஒரே ஃபார்முலா கதை… இந்தக் காரணங்களால் இதுபோன்ற திகில் படங்களுக்கு ‘ஏ’ சர்டிஃபிகேட் ஆடியன்ஸ் மட்டுமே வந்து சென்றார்கள். இப்போதுவரை, இந்தியாவில் ‘ஃபேமிலி ஆடியன்ஸ்’ வராத படம் என்றால் அது ‘பி கிரேட்’ படம்தானே..?

90-களுக்குப் பிறகு, சினிமா தொழில்நுட்பம் வளர, கதைக் களங்களும் விரிவடைய, குற்றங்களும் அதிகரிக்க… பேய்களுக்கான தேவை இல்லாமல் போய்விட்டது. அதனால், ராம்ஸே சகோதரர்களின் சரிவு தொடங்கியது. என்றாலும், பின்னாட்களில் ‘ஜீ டிவி’யில் திகில் தொடர்களைத் தயாரித்து, இயக்கி தங்களின் பெயர் மங்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இன்று, அவர்களின் வாரிசுகள், ‘ராம்ஸே’ பாரம்பரியத்தைக் காப்பாற்ற முயன்று வருகிறார்கள். இந்தப் புத்தகத்தின் ஓரிடத்தில் சகோதரர் ஒருவர் இப்படிச் சொல்வார்: “இன்றைக்கு மனிதர்களின் மிகப் பெரிய எதிரி, மனிதர்கள்தான். பேய்கள் அல்ல. பேய்கள் ஒருபோதும் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்வதில்லை!”. நிஜம்தானே அது..?

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

SCROLL FOR NEXT