குறும்படங்கள், சுயாதீனமாக இருக்க வேண்டியவை. அவற்றுக்கு வெகு ஜன சினிமாவுக்கான கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் சமீபகாலமாக குறும்படங்களும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. அவற்றில் புதிய பரிசோதனைகள் முயற்சிகள் இல்லை. வெகு ஜன சினிமாவுக்கான அடையாளத்தை இலக்காகக் கொண்டு குறும்படங்கள் இயக்கப்படுவது இதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் சில குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்தி சினிமாவைப் பொறுத்தவரை வெகு ஜன சினிமா இயக்குநர்கள் சிலர் அவ்வப்போது குறும்படங்கள் இயக்குகிறார்கள். அவை பொருட்படுத்தத்தக்க முயற்சியாகவும் வெளிப்படுகின்றன. மலையாளத்தில் ‘கேரள காஃபே’ ‘5 சுந்தரிகள்’ போன்ற குறும்படத் தொகுப்புகள் வெகு ஜன சினிமா போல் வெளியாகி கவனம் பெற்றன. இவற்றை இயக்கியது அங்குள்ள பிரபல இயக்குநர்கள்தாம். தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்ஜின்‘அவியல்’ அப்படியான முயற்சிதான்.
இலக்கியத்தில் சிறுகதையைப் போன்றது குறும்படம். கூர்மையும் சிக்கனமான விவரிப்பும்தான் அதன் லட்சணத்தை வெளிப்படுத்தும். அப்படியான ஒரு படம்தான் ‘கிரித்தி’. ‘ஜோக்கர்’ இந்திப் பட இயக்குநர் ஷிரிஷ் குந்தர் இதை இயக்கியுள்ளார். படத்தின் ஒருவரிக் கதையைவிட, படமாக்கப்பட்டிருக்கும் விவரிப்பு முக்கியமானது. வெகு ஜன சினிமாவுக்கு நிகரான தொழில் நுட்ப ஆற்றலை இந்தக் குறும்படம் சுவீகரித்துக்கொண்டுள்ளது. இந்தி சினிமாவின் பிரபல நடிகர்கள் மனோஜ் பாஜ்பாயி, ராதிகா ஆப்தே இதன் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு வீடும் இரு அறைகளும்தான் கதைக் களம். மனசிதைவு நோயாளி ஒருவரின் விநோதமான கற்பனையும் யதார்த்தமும் முயங்கிக் கிடைக்கும் சிக்கல்தான் கதை. நாயகனுக்கு ஒரு புதிய தோழி கிடைத்திருக்கிறாள். அவள் வெளியே தன் முகம் காட்ட விரும்பாத எழுத்தாளர். ஆனால் அவனது மனநல மருத்துவர். அப்படி ஒரு பெண்ணே இந்தப் பூமியில் இல்லை அது ஒரு கற்பனை என்கிறார். அவன் மூர்க்கமாக அதை மறுக்கிறான். அப்படி என்றால் நிரூபிக்கச் சொல்கிறார். ஆனால் அவளோ ஃபேஸ்புக், ட்வீட்டர் எதிலும் இல்லை. ‘அப்படியானால் ஸ்கைப்பில் காட்டு’ எனச் சவால் விடுகிறார். மனநல மருத்துவராக ராதிகா ஆஃப்தே நடித்திருக்கிறார்.
தன் புதிய காதலியின் வீட்டு வருகிறாள். அவள் கதை எழுதிக் கொண்டு இருப்பதை ஸ்கைப் வழியாகக் காண்பிக்கிறான். ஆனால் மருத்துவன் நம்பவில்லை. தான் நிஜமென்று நம்பும் ஒன்றைக் காண்பிக்க இயலாமல் அவன் தவித்துப் போகிறான். அவனது புதிய தோழியைக் கட்டாயப்படுத்துகிறான். அவன் கெஞ்சுகிறாள்.அவளைக் காண்பிக்க நடக்கும் போராட்டத்தில் அவள் கொல்லப்படுகிறாள். போலீஸ் வருகிறது. இந்தப் படத்தை விநோதமாக்க ஆளுயுர பொம்மைகள் அறையெங்கும் உள்ளன. சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்களும் விநோதமாக இருக்கின்றன. மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவிலும் இறுக்கம் உள்ளது. கற்பனைக்கும் நிஜத்துக்குமான சிறுஇடைவெளியைத் திறந்து பார்ப்பதுடன் படம் முடிகிறது.