சி
ந்திக்கும் ஆற்றல் இருப்பதாலேயே மற்ற விலங்குகளைக் காட்டிலும் தங்களை மேன்மைக்குரியவர்களாகக் கருதிக்கொள்கிறார்கள் மனிதர்கள். குழந்தைகளுக்கு எதிரான வல்லுறவுக் குற்றங்கள் நடக்கிறபோதெல்லாம் அந்தப் பெருமை கேள்விக்கு உள்ளாகிறது. மனிதர்கள் உயிரினங்களிலேயே மிகவும் கேவலமானவர்கள் என்பதை அந்தக் குற்றச் சம்பவங்கள் எடுத்துச்சொல்கின்றன.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் தேசிய குற்றப்பதிவு அறிக்கைகளில், ஆவணங்களில் வல்லுறவுக் குற்றங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம். மாறாத ஒரு கொடுமை, பாதிக்கப்படுபவர்களில் குழந்தைகளும் பெருமளவில் இருக்கிறார்கள் என்பதுதான். குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்தக் கொடுமைகள் பலவும் தனிநபரால் அல்ல, கூட்டு சேர்ந்து நடத்தப்படுகின்றன என்பது இன்னும் துயரமானது.
இதுபோன்ற செய்திகள் வெளிவரும்போதெல்லாம், இங்மர் பெர்க்மனின் ‘தி விர்ஜின் ஸ்பிரிங்’ திரைப்படத்தின் ஞாபகம் வந்து தொலைக்கிறது. பெண்களின் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி நுட்பமாகப் பேசும் அவரது பல படங்கள் சர்வதேச அளவில் இன்றும் கொண்டாடப்படுகின்றன. அவரது மற்ற படங்களைக் காட்டிலும் இந்தப் படம் வித்தியாசமானது. படத்தை மீண்டும் ஒரு தடவை பார்ப்பதற்கு மனம் இடம் தராது.
1959-ல் ஸ்வீடிஷ் மொழியில் வெளிவந்து 1961-ல் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற இந்தத் திரைப்படம், ஸ்வீடிஷ் மொழியில் வழக்கிலிருந்த கதைப்பாடல் ஒன்றைத் தழுவி எடுக்கப்பெற்றது. ஒரு வல்லுறவும் அதைத் தொடர்ந்து நிகழும் கொலைகளும்தான் படத்தின் கதை.
வங்கே கிராமத்தில் வசிக்கும் தோரின் மகளான கரின், வயதால் சிறுமி, மனதளவிலும் குழந்தை. பார்த்த கணத்தில், யாருமே தன் கவலைகளை மறந்து மகிழ்ச்சியடையும் புன்னகை தவழும் அழகு முகத்துக்குச் சொந்தக்காரி. கர்ப்பிணியான தன் அக்கா இங்கேரியுடன் வனாந்தரப் பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்துக்குச் சென்றுவிட்டுத் தனியாக வீடு திரும்பும் கரின் வழியில் ஆடு மேய்க்கும் இரண்டு இளைஞர்களைச் சந்திக்கிறாள். அவர்களுடன் சிறுவன் ஒருவனும் இருக்கிறான்.
அவர்களோடு தனது உணவைப் பகிர்ந்துகொள்கிறாள் கரின். உண்பதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அவர்களிடம் கூறுகிறாள். இது ஆடு மேய்க்கும் இளைஞர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களிடமிருந்து கரின் விடைபெறுகையில் இரண்டு இளைஞர்களும் அவளை மறித்து வல்லுறவுக்கு ஆளாக்குகிறார்கள். நிலைகுலைந்து கிடக்கும் அவள் மயக்க நிலை தெளிந்து அவ்விடத்திலிருந்து கிளம்ப எத்தனிக்கையில் இளைஞர்களில் ஒருவன் அவளின் பின்னாலிருந்து உருட்டுக்கட்டையால் தாக்க கீழே விழுந்து உயிர்விடுகிறாள். கரின் அணிந்திருக்கும் உயர்தரமான ஆடைகளைக் களைந்து எடுத்துக்கொண்டு இளைஞர்கள் நகர்கிறார்கள்.
தொலைதூரத்திலிருந்து அவளுடைய அக்கா இங்கேரி இந்தச் சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அனைத்தையும் அப்பாவியாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவனும்கூட அதிர்ச்சியடைந்த நிலையில்தான் இருக்கிறான். கரினின் சடலத்தின் மீது கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு அந்தச் சிறுவன் இளைஞர்களுடன் சேர்ந்துகொள்கிறான்.
கரினுக்காகப் பெற்றோர்கள் காத்துக்கிடக்கிறார்கள். அதே வீட்டில், அவளைக் கொலை செய்த இரண்டு வாலிபர்களும் சிறுவனோடு தங்குகிறார்கள். அவர்களுக்கு இரவுணவை வழங்குகிறாள் கரினுடைய தாய். உண்பதற்கு முன்பு பிரார்த்தனை செய்யும் அவர்களைப் பார்த்த சிறுவனுக்கு கரினின் நினைவு வந்து மயக்கமடைகிறான். இரவு நேரத்தில், கரினுடைய அம்மாவிடம் தாங்கள் கொண்டுவந்த ஆடைகளைக் காட்டி இரண்டு இளைஞர்களும் விலை பேசுகின்றனர். அவளுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது புரிகிறது.
அவர்கள் தங்கியிருக்கும் அறையை வெளிப்புறமாகத் தாழிட்டுவிட்டு கணவனிடம் நடந்ததைச் சொல்ல, தோர் அவர்களைக் கொல்வதற்காகத் தயாராகிறான். ஒரு மரத்தையே சாய்த்துவிடும் அளவுக்கு அவனுக்குள் ரவுத்திரம் பொங்குகிறது. விடியற்பொழுதில் அறையைத் திறந்து விரட்டி விரட்டி அவர்களைக் கத்தியால் குத்திக் கொல்கிறான். அவனின் கோபத்துக்குச் சிறுவனும் தப்பவில்லை.
இங்கேரி சம்பவம் நடந்த இடத்துக்கு அனைவரையும் அழைத்துச் செல்கிறாள். அங்கே உள்ளாடையோடு பிணமாகக் கிடக்கிறாள் கரின். தோர் மண்டியிட்டு அழுகிறான். “கடவுளே இதை நீ பார்த்துக்கொண்டிருக்கிறாயா, இதையெல்லாம் நீ அனுமதிக்கிறாயா?” என்று கதறுகிறான். மகள்களைப் பறிகொடுக்கும் தந்தையர்களின் குரல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இன்று காஷ்மீரத்தில் முகம்மது யூசுப் புஜ்வாலா கதறிக்கொண்டிருக்கிறார். இந்தக் கதறலும் துயரமும் என்று முடிவுக்கு வரும்?
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in