இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: துப்புத் துலங்கும் நாவல்

எஸ்.எஸ்.லெனின்

கை

விடப்பட்ட குற்ற வழக்குகள் மீண்டும் கிளரப்படும்போது, பொத்திவைத்த ரகசியங்கள் சீற்றத்துடன் வெளிக்கொண்டு வரப்படும். மே 11 அன்று வெளியாகவிருக்கும் க்ரைம் த்ரில்லரான ‘டார்க் க்ரைம்ஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தின் கதையோட்டம் இந்த ரகத்தில் சேரும்.

கொலைச் சம்பவம் ஒன்றினைத் தீவிரமாகத் துப்பறியும் காவல் அதிகாரிக்கு, மேற்கொண்டு வழக்கு முன்னேறாது போகவே அதனைக் கைவிட நேர்கிறது. பணியில் கரைந்துபோகும் இயல்புடைய அந்தக் காவல் அதிகாரி, அந்த வழக்கின் துண்டான முனையை தனக்குள் புதைத்துக்கொண்டு தொடர்ந்து இயங்குகிறார். ஆண்டுகள் கழிந்து வெளியாகும் நாவல் ஒன்று, கைவிட நேர்ந்த குற்றச் சம்பவத்தின் முடிச்சுகளை தொடர்புப்படுத்த, அதிகாரி துள்ளி எழுகிறார். பழைய கொலை வழக்கின் விசாரணை புதிய கோணத்தில் மீண்டும் வேகமெடுக்கிறது.

நாவலின் எழுத்தாளரைக் குற்றவாளியாக வரிந்துகொண்டு விசாரணையைத் துரிதப்படுத்தும் காவல் அதிகாரிக்கு எதிர்பாராத அதிர்ச்சிகள் வரிசை கட்டுகின்றன. மறைவாகச் செயல்படும் நிழல் உலகமும் அதன் பின்னணியும் புலப்படுகிறது. கூடவே காவல் அதிகாரிக்கும் அதில் தனிப்பட்ட கண்ணி காத்திருக்கிறது. பழைய வழக்கின் தீர்வு, புதிய சவால்களில் பொதிந்திருக்கும் புதிர்கள், அவற்றில் சிக்கும் விசாரணை அதிகாரி என அடுத்தடுத்த திருப்பங்களுடன் மிச்சத் திரைப்படம் நகர்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் ‘த நியூ யார்க்கர்’ பத்திரிக்கையில் வெளியான உண்மைச் சம்பவக் கட்டுரை ஒன்றினை அடிப்படையாக வைத்து உருவான திரைக்கதையுடன் ’டார்க் க்ரைம்ஸ்’ ரசிகர்களின் பார்வைக்காக காத்திருக்கிறது.

விசாரணை அதிகாரியாக ஜிம் கேரி, எழுத்தாளராக மார்டன் பால் ஆகியோரின் நடிப்பு சர்வதேசத் திரைப்பட விழாக்கள் வாயிலாகப் பேசப்படுகிறது. உடன் அகதா கலேஸா, சர்லோட் கெயின்ஸ்பர்க் உள்ளிட்டோர் நடிக்க, கிரேக்க இயக்குநரான அலெக்ஸாண்ட்ரோ அவ்ரனஸ்(Alexandros Avranas) படத்தை இயக்கி உள்ளார்.

SCROLL FOR NEXT