இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: மேகங்களுக்கு அப்பால் மனிதம்! - பியாண்ட் தி க்ளவுட்ஸ் (இந்தி)

இந்திரா செளந்தர்ராஜன்

மிழ் சினிமாவில் சென்னை என்றால், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மணிக்கூண்டை கேமரா காட்டுவதுபோல, உலக சினிமா இயக்குநர்களுக்கு இந்தியா என்றால் மும்பை எனும் ‘க்ளிஷே’! அதிலும் மும்பை என்றால் தாராவி, டோபிகாட், அங்கு வாழும் கடைநிலை மனிதர்கள், நம்பிக்கையும் துரோகமும் இழையும் நிழல் உலகம், சிவப்பு விளக்குப் பகுதிகள், அங்கு விளையாடும் சிறுமிகள்…

இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த எந்த இயக்குநராவது மும்பையை மையமாக வைத்துப் படம் எடுக்கிறார் என்றால், அதற்கான ‘டெம்ப்ளேட்’ மேற்சொன்னதுதான். ஆனால், மஜீத் மஜீதி போன்ற ஈரானிய ஆளுமையும் மேற்சொன்ன ‘க்ளிஷே’க்களையே கலையாக்க முயன்றிருப்பது வருத்தமளிக்கிறது.

வாழ்க்கையில் எவ்வளவுதான் துன்பங்கள் வரட்டும். அந்தத் துன்பங்களினூடே புதிய விடியலுக்கான நம்பிக்கையும் கூடவே வரும். நாம் எதிர்பார்க்காத நேரத்தில், அந்த நம்பிக்கை நம் கரங்களைப் பற்றி கைகுலுக்கி, கடைத்தேற்றிவிடும். ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ (தலைப்புதான் ஆங்கிலம். படம் இந்தி!) படத்தில் மஜீதி சொல்ல வரும் வாழ்க்கைத் தத்துவம் இதுதான்.

போதைப் பொருள் வியாபாரம் செய்யும் கும்பல் ஒன்றிடம் பணிபுரிகிறான் ஆமீர். அந்தக் கும்பல் தரும் பாக்கெட்டுகளைத் தன் வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதுதான் அவனுடைய வேலை. ஒரு கட்டத்தில், அவனை போலீஸ் துரத்த, அவர்களிடமிருந்து அவனைக் காப்பாற்றுகிறாள் தாரா.

தாராவும் ஆமிரும் அக்கா- தம்பி. அவர்களுடைய பெற்றோர், கார் விபத்து ஒன்றில் மரணமடைய, அவர்கள் ஆதரவற்றவர்களாகிறார்கள். தாராவுக்குத் திருமணமாகிறது. அவளுடைய கணவன், குடிகாரன். தினமும் குடித்துவிட்டு, அக்காவையும் தம்பியையும் அடிப்பதுதான் அவனது பொழுதுபோக்கு. ஒரு நாள், தாராவை விட்டு, ஆமிர் பிரிகிறான். போதைப் பொருள் கும்பலில் சேர்கிறான். தாராவோ, கணவனை விட்டுப் பிரிந்து, டோபிகாட்டில் வேலைக்குச் சேர்கிறாள்.

அவள் வேலை செய்யும் இடத்தில் அக்ஷி எனும் ஒருவன், அவளை வல்லுறவு செய்ய முயல்கிறான். அவனிடமிருந்து தப்ப, தாரா அவனைத் தாக்க, அவன் மயக்கமடைகிறான். ஆபத்தான நிலையில் அவன், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அவள், சிறை செல்கிறாள். அக்ஷி உயிருடன் மீண்டு வந்தால் ஒழிய, அவள் விடுதலை பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், அவளின் விடுதலைக்கு முயல்கிறான் ஆமிர். அவனால் அது முடிந்ததா என்பதுதான் மீதிப் படம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அக்ஷியைப் பார்க்க அவனது குடும்பம் வரும்போதுதான், அவன் ஒரு தமிழன் என்பது நமக்குத் தெரிய வருகிறது. அதனால் படத்தில் சுமார் ‘இரண்டு ஏ4 பேப்பர்’ அளவுக்குத் தமிழ் வசனங்கள் இருக்கின்றன. அவனுடைய அம்மா, அவனுடைய இரு மகள்கள்… எனப் புதிய உறவு, ஆமிருக்குக் கிடைக்கிறது. தனது வீட்டில் தாரா தனியாக வாழ்ந்தபோது, அங்கு புறாக்கள் தஞ்சமடைந்தன. இப்போது ஆமிர் தனியாக இருக்கும்போது, விதிவசத்தால் தன்னைப் போன்று தனித்துவிடப்பட்ட அக்ஷியின் குடும்பம் அவனிடம் தஞ்சமடைகிறது.

ஏற்கெனவே சிதிலமடைந்திருக்கும் சக மனிதர்களின் வாழ்க்கை, ஒரு மனிதனின் முறையற்ற ஆசையால் மேலும் எவ்வாறு சிதைந்துபோகிறது என்பதை அழுகை, விரக்தி, துரோகம், நம்பிக்கை, புன்னகை போன்ற உணர்வுகளைக்கொண்டு நம் மனதை நனைக்கப் முயற்சித்திருக்கிறார் மஜீதி. ஆனால் நனையவில்லை… தூறலால் ஏற்படும் மண்வாசம் மட்டும் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது! கலைந்து செல்கிற மேகக் கூட்டங்களுக்கு அப்பால் தெளிந்த வானம் இருப்பதைப் போல, கஷ்டங்களுக்கு அப்பால் மனிதம் ஒளிந்திருப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் மஜீதி.

மஜீதியின் கதை சிக்கல் மிகுந்ததாக இல்லை. நூல்பிடித்தாற்போல நேர்கோட்டில் செல்கிறது. சாதாரணக் கதையை, சொல்லும் முறை மூலம்திரையில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திவிடுகிறார். இந்தப் படத்தில் அந்த மாயாஜாலம் என்பது இருளும் ஒளியும் நிழலும் சேர்ந்ததாக இருக்கிறது.

சிவப்பு விளக்குப் பகுதியை நடத்தும் ஓனரிடம், தான் செய்த ‘டெலிவரி’க்குப் பணம் கேட்டு ஆமிர் வரும்போது, ஜன்னலுக்குப் பின்னால் அந்த ஓனர், புதிதாக ‘வேலை’க்குச் சேர்ந்திருக்கும் சிறுமிகளை ‘பல் நன்றாக இருக்கிறதா?’ என்று பரிசோதித்துப் பார்க்கும் காட்சி, நிழல் காட்சியாகக் காட்டப்பட்டிருக்கும். அதேபோல, அக்ஷியின் மகள்களை மகிழ்விக்க, திரைக்குப் பின்னலிருந்துகொண்டு ‘முக்காபுலா’ பாட்டுக்கு ஆமிர் ‘பிரேக் டான்ஸ்’ ஆடிக் காட்டுவது, சிறையிலிருக்கும் தாரா, அங்கு சக கைதி ஒருத்தியின் மகன் சோட்டுவுக்குச் சோறூட்ட, சுவரில் பறவைகள் பறப்பது போலவும், பாம்பு ஊர்வது போலவும் நிழல் ஆட்டங்களை நிகழ்த்திக் காட்டுவது என… நிழல் அவர்களுக்கு நிம்மதியைத் தருவதாக இருக்கிறது.

படத்தில் சோட்டு, ‘நிலான்னா என்ன? அது எப்படியிருக்கும்?’ என்று தாராவிடம் கேட்பதாக ஒரு வசனம் வரும். அந்தக் காட்சி, இந்தியச் சிறைகளில் பிறந்து, வளர்கிற குழந்தைகளின் நிலையைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையும், அனில் மேத்தாவின் ஒளிப்பதிவும், கவுதம் கோஷ், ஜி.வி.சாரதா போன்றஅனுபவப்பட்டவர்களின் நடிப்பும் படத்துக்குத் தேவையான அளவுக்கு அழகூட்டுகின்றன. புது முகங்கள் இஷான் கட்டர் (ஆமிர்), மாளவிகா மோகனன் (தாரா) இருவரும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ பார்த்த மஜீதியின் ரசிகர்கள், அதை மனதில் கொண்டு, எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். அந்த எதிர்பார்ப்பைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, படம் பார்த்தால் ‘ஃபீல் குட்’ உணர்வைத் தரும்.

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

SCROLL FOR NEXT