இசைப் பயணம்
அ
னிருத் முதன்முறையாக லண்டன் மற்றும் பாரீஸ் நகரங்களில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த லைவ் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும் ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகின்றன. தனது இந்த இசை நிகழ்ச்சிகளை ‘கிக் ஸ்டல் ஷோ’ என்ற முறையில் வழங்கவிருக்கும் அனிருத், முழுக்க முழுக்கத் தமிழ்ப் பாடல்களை மட்டுமே இசைக்கவிருக்கிறாராம். இதுவரை இருபது திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத் தற்போது ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் இணையவிருக்கும் படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அழகிய நம்பிக்கை
“யா
ருடைய ஆதரவும் இல்லாமல் சினிமாவில் நுழைவதும் பயணத்தைத் தொடர்வதும் சவாலான விஷயங்கள். சினிமாவைத் தேர்ந்தெடுத்த எனக்கு முழு ஆதரவும் சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி" எனக் கூறும் ஸ்வாதிஷ்டா மாற்றுத்திறனாளி இளைஞனைக் காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொள்ளும் துணிவுமிக்கப் பெண்ணாக ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்தார். இளங்கலையில் பொறியியலும் முதுகலையில் இதழியலும் படித்து முடித்துத் தொலைக்காட்சி தொகுப்பாளராக ஊடகத்தில் அறிமுகம்பெற்றுத் திரைக்கு வந்த ஸ்வாதிஷ்டாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் உண்டு. தற்போது ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் த்ரில்லர் படமான ‘கீ’யில் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் இவர் “ மணிரத்னம் சார் ‘அலைபாயுதே 2’ இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன்” என்கிறார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு
ம
து அரசியலுக்கு எதிராக ‘மதுபானக்கடை’ என்ற மிகத் துணிவான படத்தைக் கொடுத்தவர் கமலக்கண்ணன். இந்தம் படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின் தற்போது தனது இரண்டாவது படத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இதில் நாயகனாக நடிக்க இருப்பவர் சிபிராஜ். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.
சண்டைக்கோழி தயார்!
த
யாரிப்பாளர்கள் தரப்பின் போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வரும் விஷால் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. ஜனவரி மாதம் குடியரசு தினத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட அவரது ‘இரும்புத்திரை’ இன்னும் வெளியாகவில்லை. அடுத்து தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வரும் என்று கூறப்பட்ட ‘சண்டக்கோழி 2’ படமும் வேலைநிறுத்தத்தால் வரவில்லை. இந்நிலையில் விஷாலின் ‘சண்டக்கோழி 2’ முதல் வாரம் வெளியாகும் எனத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் கிடைக்கிறது.
லிங்குசாமி இயக்கத்தில் விஷாலுக்குப் பெரும் வெற்றியாக அமைந்த படம் ‘சண்டக்கோழி’. இரண்டாம் பாகத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லியாக வரலட்சுமி நடித்திருக்கிறாராம். ‘பவர் பாண்டி’ படத்தின் வெற்றியால் ராஜ்கிரண் கதாபாத்திரத்தையும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கிறாராம் இயக்குநர் லிங்குசாமி.
மீண்டும் இணைந்த கூட்டணி
கே
.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அயன்’ பெரிய வெற்றியாக அமைந்தது. இரண்டாவது முறையாக அவரது இயக்கத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த ‘மாற்றன்’ தோல்வி கண்டது. தற்போது சூர்யா மூன்றாவது முறையாக தன்னுடன் இணைந்திருப்பதை அதிகாரபூர்வமாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படம் இது.
மிரட்டும் வில்லன்
இ
யக்குநர் ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் 'சாமி'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் ஹரி இயக்க, சிபு தமீம்ஸ் தயாரித்து வருகிறார். விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறார். முதல் பாகத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகனாக இந்த இரண்டாவது பாகத்தில் நடிக்கிறார் பாபி சிம்ஹா. கோட்டா சீனிவாச ராவின் கதாபாத்திரத்தை மிஞ்சும் விதமாக பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தைத் தோற்றம், நடிப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் ஹரி. ‘சாமி ஸ்கொயர்’ படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில், திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.