இந்து டாக்கீஸ்

“பார்வையாளன் அல்ல… பங்கேற்பாளன்” - மை.பா. நாராயணன் பேட்டி

ஆர்.சி.ஜெயந்தன்

‘ஜோ

க்கர்’ படத்தில் அமைச்சரின் பி.ஏவாக வந்து ‘கட்டிங் கலாச்சாரம்’ பற்றிப் பேசி அதிர வைத்தவர் மை.பா. நாராயணன். பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நாச்சியார்’ படத்தில் அரசு வழக்கறிஞராகத் தோன்றி “யுவர் ஆனார். திஸ் கேர்ள் இஸ் விக்டிம். திஸ் இஸ் மை ஜட்ஜ்மெண்ட்.. யூ ப்ளீஸ் கிவ் த சேம் ஜட்ஜ்மெண்ட்” என்று பேசும் வசனத்துக்குத் திரை அரங்கில் அப்ளாஸ் அள்ளியது. 25 வருடப் பத்திரிகையாளர் அனுபவத்துடன் எழுத்து, மேடைப்பேச்சு, சினிமா நடிப்பு என பிஸியாக வலம் வந்துகொண்டிருப்பவருடன் உரையாடியதிலிருந்து...

ஒரு புலனாய்வு பத்திரிகையாளனாக நன்கு அறியப்பட்டவர் நீங்கள். தற்போது ஆன்மிகத் தொடர் எழுதி ஆச்சரியப்படுத்தி வருகிறீர்கள்... எப்படி நடந்தது இந்த மாற்றம்..?

சினிமாவின் திரைக்கதை போலவே எனது வாழ்க்கையிலும் ஆச்சரியத் திருப்பங்கள் உண்டு. எனது பத்திரிகை பணி முரசொலியில் தொடங்கியது. நான் உருமாறத் தொடங்கியது அங்கிருந்துதான். சில வருடங்களில் சுதாங்கனின் தலைமையிலான ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு வந்தேன். உதவி ஆசிரியர் மற்றும் நிருபராக என்னை மாற்றம் செய்தது சுதாங்கன்தான். அந்தக் காலத்தில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோலை அவர்களுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது.

உணர்வில் மட்டுமே ஆன்மிகவாதியாக இருந்த நான் அவருடன் மந்த்ராலயம் சென்று வந்த பிறகு, எனது எழுத்தில் ஆன்மிகம் பிரதிபலிக்கத் தொடங்கியது. இந்தக் கேள்வியை நான் ஆழமாக உணரும் இந்தத் தருணத்தில் எனக்கு ஆழ்வார்க்கடியான் என்ற பட்டம்கொடுத்து உச்சிமுகர்ந்த எனதருமை காவியக் கவிஞர் அமரர் வாலி அவர்களை நினைத்துக்கொள்கிறேன்...

பத்திரிகை உலகில் கடல் போல் அனுபவம் கிடைக்குமென்றாலும் உங்களால் மறக்க முடியாத சில அனுபவங்களைப் பகிர முடியுமா?

பத்திரிகை பணியில் ஏராளமான அனுபவங்கள் உண்டு. ஆனால் இன்னும் மனதின் ஆழத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவை சில. அவற்றில் முக்கியமானது 2009-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் தலைமையில் நடந்த விருது வழங்கும் விழா. அந்த விழாவில் பார்வையாளனாக இருந்த நான் அப்போதைய செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மூலம் கலைஞர் முன்பாக பேசுவதற்கு அழைக்கப்பட்டேன். அந்த எதிர்பாரா அழைப்பில் பிரமித்த நான், என்னையும் அறியாமல் கலைஞர் முன்பாக இருபது நிமிடங்கள் அரசியல், ஆன்மிகம், நாட்டு நடப்பு என்று கோவையாகப் பேசினேன். எனது பேச்சைப் பெரிதும் ரசித்த கலைஞர், அருகில் அழைத்து “நீ வெறும் பார்வையாளன் அல்ல! பங்கேற்பாளன்” என்று தோளில் தட்டிப் பாராட்டினார்.

அடுத்த சம்பவம். தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துடன் இருந்தேன். ஒருநாள் என்னைத் தொடர்பு கொண்ட மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, “ விஜயகாந்தை எனது கலிங்கப்பட்டி இல்லத்துக்கு அழைத்து வர முடியுமா?” என்றார். அதன்படி வைகோவின் இல்லத்துக்குச் சென்றோம். வைகோவின் பாரம்பரிய வீட்டில் வைகோ, விஜயகாந்த், நான் ஆகிய மூவரும் அருகருகே அமர்ந்தோம். வைகோவின் தாயார் மாரியம்மாள் அன்போடு பரிமாற உணவருந்தியதை மறக்க முடியாதது.

எனது முதல் திரைத்தோற்றம்.. சின்னத்திரையில் நிகழ்ந்து என்று சொல்லலாம். துக்ளக் ஆசிரியர் மதிப்புக்குரிய சோ அவர்கள் மூலம் ‘எங்கே பிராமணன்?’ தொடரில் தோன்றினேன். பிறகு விகடனில் பணியாற்றிய எனது நெருங்கிய நண்பர், தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகன் ‘ ஜோக்கர்’ படத்தில் சிறப்பான கேரக்டரில் நடிக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் விநோத் ‘ தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் வாய்ப்பளித்தார். பின்னர் தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் ‘நாச்சியா’ரில் வாய்ப்புத் தந்தார். நடிகராக வலம் வந்தேன் என்று சொல்வதைவிட என்னை நண்பர்களெல்லாம் நடிகராக்கி அழகு பார்த்தார்கள் என்றுதான்சொல்ல வேண்டும்.

29chrcj_maipaபாலாவின் ‘நாச்சியா’ரில் நீங்கள் ஏற்றிருந்த வழக்கறிஞர் கதாபாத்திரம் பேசும் வசனத்துக்குத் திரையரங்கில் பலத்த கைதட்டல். எப்படி உணர்ந்தீர்கள்?

அந்தக் கைதட்டலைத் திரையரங்கில் நானும் குடும்பத்தோடு கேட்டு நெகிழ்ந்து உணர்ந்தேன். அந்தக் கணமே இயக்குநர் பாலாவுக்கு மானசீகமாக ஒரு வணக்கம் தெரிவித்தேன். அந்த வார்த்தைகள், அவை வடிவமைத்து உச்சரிக்கப்பட்ட விதம் எல்லாமே பாலா எனும் படைப்பாளியால் பட்டை தீட்டப்பட்டவை.

தற்போது நடித்து வரும் படங்கள்?

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜிப்ஸி ’ இன்னும் சில பெயரிடப்படாத படங்கள் என்று திரைப்பயணம் தொடர்கிறது. எழுத்தைச் சுவாசிக்கிறேன். நடிப்பை நேசிக்கிறேன். என் இருப்பைக் காலம்தான் முடிவு செய்யும். எது என் மீது விதிக்கப்படுகிறதோ அதை மனநிறைவோடு ஏற்றுக் கொள்வேன்.

SCROLL FOR NEXT