இந்து டாக்கீஸ்

மலையாளக் கரையோரம்: கின்னஸ் குரு!

ஆர்.சி.ஜெயந்தன்

கே

ரளத்தில் பிறந்து தேசம் முழுவதும் அறியப்பட்டவர் ஸ்ரீ நாராயண குரு. ஜாதி, மதப் பாகுபாடுகளால் விளைந்த ஏற்றதாழ்வுகளைக் களைய சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, ஆன்மிகச் சுதந்திரத்தையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்கியவர் ஸ்ரீ நாராயண குரு. அவரது வாழ்க்கையை மையப்படுத்தி ’விஷ்வகுரு’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது.

ஏற்கெனவே ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான சில மலையாளப் படங்கள், மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களிலிருந்தும் மாறுபட்டு தற்போது தயாராகியிருக்கும் ’விஷ்வகுரு’ புதிய கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறது.

கதை, திரைக்கதை, வசனம் என எழுத்துப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கியது முதல் அதிகாரபூர்வத் திரையிடல் வரையிலான அனைத்துப் பணிகளையும் 51 மணி நேரம் 2 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்திருக்கிறது படக்குழு. இதனால் உலகிலேயே மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘விஷ்வகுரு’ படைத்திருக்கிறது.

படப்பிடிப்பு மட்டுமின்றி, படத்தலைப்பு முன்பதிவு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள், சுவரொட்டிகளுக்கான வடிவமைப்பு, விளம்பரங்கள், தணிக்கை, திரையிடல் வரை அனைத்துப் பணிகளையும் இந்த 51 மணி நேரத்துக்கு உள்ளாக முடித்திருக்கிறார்கள்.

அனுபவம் மிக்க நாடக நடிகர்களைக் கொண்டு, தீவிர ஒத்திகைக்குப் பின் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, ஏவிஏ புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் தயாரித்திருக்க, விஜேஷ் மணி இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு சிங்கள மொழியில் தயாரான ‘மங்களகமனா’ (MangalaGamana) என்ற இலங்கைத் திரைப்படம், 71 மணிநேரம் 10 நிமிடங்களில் எடுக்கப்பட்டிருந்த நிலையில் ‘விஷ்வகுரு’ மலையாளத் திரைப்படம் அந்த உலக சாதனையை முறியடித்துள்ளது.

SCROLL FOR NEXT