கு
ட்டி பாண்டா ஒன்று கடத்தப்பட்டதன் பின்னணியை ஆராயக் கிளம்புகிறார் எஃப்.பி.ஐ ஏஜெண்ட். அவருக்கு உதவியாகக் கடமையாற்ற, நியூயார்க் காவல் துறையின் மோப்ப ஹீரோவான மேக்ஸ் என்ற நாய் இணைகிறது. தங்களுக்கு இடையிலான ஏழாம் பொருத்தத்தை மீறி, விலங்குகளைக் கடத்தும் சர்வதேச வலைப் பின்னலை இருவரும் வெற்றிகரமாகப் பின்தொடர்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நாய் கண்காட்சி ஒன்றில் கூடவிருக்கும் விலங்குக் கடத்தல் தாதாக்களைப் பிடிக்கத் திட்டமிடுகிறார் அந்த ஏஜெண்ட். அதன்பொருட்டு அழகுப் போட்டியில் தனது போலீஸ் நாய் பங்கேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்கிறார். அதைத் தொடர்ந்து வில்லன்களை வளைப்பதற்காகத் தனது நான்கு கால் நண்பனுடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகளே ஹாலிவுட்டிலிருந்து கோடை விடுமுறைக்கு வெளியாகவிருக்கும் ‘ஷோ டாக்ஸ்’ திரைப்படம்.
குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் திரைப்படத்தில் விலங்குகளின் பேச்சும் சேட்டையும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘ஸ்கூபி டூ’ வரிசையில் சில திரைப்படங்கள் உட்படப் பல குழந்தைகள் மற்றும் குடும்ப நகைச்சுவைப் படங்களை இயக்கியவரான ராஜா காஸ்நெல் ‘ஷோ டாக்ஸ்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
வில் அர்னெட், நடாஷா லியோன், ஜோர்டின் ஸ்பார்க்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமான காவல் நாய்க்கு, அமெரிக்க நடிகரும் ராப்பருமான க்றிஸ் ப்ரிட்ஜஸ் பின்னணிக் குரல் தந்துள்ளார்.