இந்து டாக்கீஸ்

சினிப்பேச்சு: ஒரே நேரத்தில் 3 படங்கள்

செய்திப்பிரிவு

‘டேட்டா பிரைவசி’, ‘சைபர் தடயவியல்’ ஆகிய இரண்டு முக்கியத் தளங்களில் முகநூல், வாட்ஸ் ஆப், கூகுள் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்துக் கொடுத்து வரும் கோவை நிறுவனம் பி.டி.ஜி. யுனிவர்செல்.

அதன் நிறுவனரான பாபி பாலச்சந்திரன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமாண்டி காலனி 2’ , ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ படங்களின் மூலம் சினிமா தயாரிப்பிலும் இறங்கினார்.

இப்படங்கள் விரைவில் ரிலீஸாகவிருக்கும் நிலையில், தனது மூன்றாவது தயாரிப்பையும் பூஜையுடன் தொடங்கியிருக்கிறார். ‘மான் கராத்தே’ படப்புகழ் கிரிஷ் திருக்குமரன் இயக்கும் முழுநீள ஆக்‌ஷன் படமான இதில் அருண் விஜய் நாயகன்.

அவருக்கு ஜோடி சித்தி இத்னானி நடிக்கிறார். மற்றொரு நாயகி தான்யா ரவிச்சந்திரன். லைக்கா நிறுவனத்தில் பல படங்களுக்குப் பணிபுரிந்த எம்.மனோஜ் பெனோ நிர்வாகத் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு இசை சாம்.சி.எஸ்.

மாதம் முழுவதும் ‘வானம்’ - பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தைத் தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடி வருகிறது இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம். ‘வானம் கலைத் திருவிழா’ என்கிற தலைப்பில் முதல் கட்டமாக 3 நாள் நிகழ்ச்சிகளைச் சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர்.

அவற்றில் ‘தலித் வரலாற்று மாதக் கண்காட்சி’, ‘பி.கே.ரோஸி திரைப்பட விழா’, ‘திரைப்படங்களில் சமூக சிந்தனை’ விவாத அரங்கம் ஆகியன பார்வையாளர்களை ஈர்த்தன. இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், பா.இரஞ்சித், லெனின் பாரதி, அருண் மதேஸ்வரன், பி.எஸ். வினோத்ராஜ், கௌதம்ராஜ், திரைக்கதையாளர், எழுத்தாளர்கள் தமிழ் பிரபா, ஜா.தீபா, வாசுகி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இந்த விழாவின் தொடர்ச்சியாக நாடக விழா, ஒளிப்பட விழா, ஓவியக் கண்காட்சி, தலித் இலக்கிய கூடுகை போன்ற பல நிகழ்வுகள் இந்த மாதம் முழுவதும் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன.

மீண்டும் வெற்றிக் கூட்டணி: முன் வரிசைத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏ.ஜி.எஸ். என்டெர்டைன்மென்ட். அதன் தயாரிப்பில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாகவும் நடித்த 'லவ் டுடே' குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூலில் கோடிகளைக் குவித்தது.

இதனால் இப்படத்தின் வெற்றிக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது. இந்தப் புதிய படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி, இயக்க, பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இது ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் 26வது படம்.

இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பொறுப்பேற்றுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில் உருவாகவிருக்கும் இப்படத்துக்காக, பிரதீப் ரங்கநாதன் - அஷ்வத் மாரிமுத்து ஆகிய இருவரது நிஜ வாழ்க்கை நட்பினைப் பிரதிபலிக்கும் வகையில் நகைச்சுவை ததும்பும் காணொலி ஒன்றைப் படக்குழு வெளியிட்டு, படத்துக்கான எதிர்பார்ப்பை உருவாக்க முயன்றுள்ளது.

SCROLL FOR NEXT