“பாலிவுட்டில் திரைப்படத் தைப் பார்த்து திரைப்படம் எடுக்கிறார்கள். மக்களின் வாழ்க்கை யிலிருந்து திரைப்படங்களை உருவாக்க முடியாததே அவர்களின் பலவீனம்.” இதைச் சொன்னவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். மாறாக, ‘லாபத்தா லேடீஸ்’ அவரது குறை கூறலைப் புறந்தள்ளும்விதமாக வெளிவந்திருக்கும் ஒரு பாலிவுட் படம்.
படத்தில் நிர்மல் பிரதேசம் என்கிற ஒரு கற்பனையான மாநிலம். 2001இல் கதை நடக்கிறது. இரண்டு திருமண ஜோடிகள் ஒரே ரயிலில் பயணிக்க நேர்கிறது. பல்வேறு காரணங்களால், மணப்பெண்கள் இடம் மாறி வேறு மணமகனுடன் சென்றுவிடுகிறார்கள். அதனால் விளையும் குழப்பங்கள், எதிர்பார்ப்புகள், மனத் திறப்புகள் ஆகிய வற்றால் நிகழும் இயல்பான திருப் பங்களின் நகைச்சுவை விளைவுதான் கதை.
மேலோட்டமான பார்வைக்குப் பெண்களுக்குச் சுய அதிகாரமளித்த லைப் பற்றிய படம் போல் தோன்றும். ஆனால், நகரமயமாக்கல் தொடாத ஓர் இந்தியக் கிராமத்துக்கே உரித்தான எளிய கதாபாத்திரங்கள், நம்பத்தகுந்த நிகழ்வுகள், அன்றாட அல்லல்களின் நடுவே முகிழ்த்துச் சிதறும் நகைச்சுவை, அரசியல் அதி கார மையத்துள் சிக்கும் எளிய மனி தர்களின் ஏமாற்றம் எனப் பலவற்றை நச்சென்று தொட்டுச் செல்கிறது இப்படம்.
‘அடுத்தது என்ன?’ என்கிற கதை சொல்லும் முறையை விட்டுக்கொடுக் காத திரைக்கதை இப்படத்தின் முக்கிய சுவாரசியம். கூடுதல் கவன ஈர்ப்பாக, படம் நெடுகிலும் ஒரு காட்சியின் இறுதி சட்டகம், அடுத்த காட்சியின் தொடக்கச் சட்டகமாக ஒரு தொடர் சங்கிலி போல் இணைத்திருப்பது அழகு. முக்கியக் கதாபாத்திரங்களுக்கிடையே ஒரு மெல்லிய காதல் இழையைத் தொடுத்திருப்பது இயல்பான நகைச்சுவையுடன் மிளிர்கிறது.
முதன்மை கதாபாத்திரங்களான நிதான்ஷி கோயல், பிரதீபா ரான்தா பங்களிப்பு தரம். துணைக் கதாபாத்தி ரங்களில் காவல் ஆய்வாளராக வரும் ரவி கிஷண், ரயில் நிலையத்தில் தேநீர் விற்பவராக வரும் சைய்யா கடம் ஆகிய இருவரும் குறிப்பிடப்பிட்டுச் சொல்ல வேண்டிய பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஒரு காவல் நிலையக் காட்சியில் மாட்டிக்கொள்ளும் ஜெயா கதாபாத்திரம், ‘தி யூஷுவல் சஸ்பெக்ட்ஸஸ்’ திரைப்படத்தில் வருவது போல், கண்ணில் படும் பெயர்களை வைத்து ஒரு கதையை உருவாக்குவதை ரசிக்க முடிகிறது.
பிப்லாப் கோஸ்வாமி - ஸ்னேஹா தேசாய் - திவ்யநிதி சர்மா இணைந்து எழுதியிருக்கும் திரைக்கதையும் கிரண் ராவின் திருத்தமான இயக்கமும் படத்தின் பலம். ராம் சம்பத்தின் பின்னணி இசையும், கதையோட்டத்தின் போக்கிலேயே வரும் இரண்டு பாடல்களின் நேர்த்தியான இணைப்பும் தரம்.
மலினமான நகைச்சுவை, ஆபாசம், பெரும் பொருட்செலவு, நட்சத்திர நடிகர்கள், வெளிநாட்டுப் படப்பிடிப்பு எனத் தறிகெட்டுக் கிடக்கும் பாலிவுட் சினிமாவில் மண் சார்ந்த திரைப்படமாக பாறையிடுக்கில் முளைத்த சிறு பூச்செடியாக இப்படம் சிலுசிலுக்கிறது. இப்படத்தைக் குடும்பத்துடன் கொண் டாடலாம்.
180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதே அமீர்கான், 4 கோடி பட்ஜெட்டில் கதையை நம்பி, தன்னுடைய முன்னாள் மனைவி ‘கிரண் ராவ்’ இயக்கத்தில் நடித்துத் தயாரித்த ‘டோபி காட்’ வெற்றி அடைந்ததும் சொல்வது ஒன்றைத்தான். நட்சத்திரங்களைக் காட்டிலும் நல்ல திரைக்கதை என்னும் மின்மினி தரும் வெளிச்சம் அலாதியானது.
- tottokv@gmail.com