இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஜன்னல்: அம்மான்னா சும்மாவா?

எஸ்.எஸ்.லெனின்

ஒரு தாய் தனது குழந்தைகளுக்காகப் புத்தியிலும் சக்தியிலுமாக அதிரடி அவதாரம் எடுப்பதே ‘பிரேக்கிங் இன்’ திரைப்படம். பதின்ம வயது குழந்தைகளின் பாசத் தாயாகப் பொறுப்புடன் வலம்வரும் காப்ரியல், தன் தந்தையின் மறைவை அடுத்து அவரது சொத்துகள் குவிந்திருக்கும் வனாந்தர வீட்டுக்கு வருகிறார். வெளியாட்கள் எளிதில் ஊடுருவ முடியாத நவீனப் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அந்த வீட்டில் அம்மாவும் குழந்தைகளும் உற்சாகமாகப் புழங்கத் தொடங்குகின்றனர். அப்போது காப்ரியலின் தந்தை பதுக்கி வைத்திருக்கும் பணக்குவியலை அபகரிக்க கொடூரக் குற்றவாளிகள் நால்வர் நள்ளிரவில் அந்த வீட்டை சுற்றி வளைக்கிறார்கள்.

திட்டமிட்டு வீட்டினுள் ஊடுருவும் கொள்ளையர்கள், காப்ரியலின் குழந்தைகளைப் பணயமாக்கி கரன்சி கொள்ளையில் முன்னேறுகிறார்கள். எதிர்பாராதவிதமாக வீட்டுக்கு வெளியே மாட்டிக்கொள்ளும் காப்ரியல் தன் குழந்தைகளை மீட்கத் துணிகிறார். தன்னாலான புத்தியையும் சக்தியையும் திரட்டி, வீட்டின் நவீன பாதுகாப்பு அம்சங்களைத் தகர்த்து உள்ளே நுழைவதுடன், கொள்ளையர்களையும் நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்.

அம்மா, குழந்தைகள், வீடு, கொள்ளையர் என ‘பேனிக் ரூம்’ படத்தின் திகுதிகு நிமிடங்களை நினைவுபடுத்தும் திரைக்கதையில், குஞ்சுகளுக்காகச் சீறும் தாய்ப் பறவையாக அம்மா கதாபாத்திரத்தில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

சமூகச் செயல்பாட்டாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட காப்ரியல் யூனியன், இப்படத்துக்காகத் ‘தடையறத் தாக்கும்’ ஆக்ஷன் கம் பாசத் தாய் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதுடன் படத் தயாரிப்பிலும் இணைந்திருக்கிறார். ‘வி ஃபார் வென்டேட்டா’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் மெக்டெய்க் (James McTeigue) இயக்கத்தில், சேத் கார், கிறிஸ்டா மில்லர், ஜாசன் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் உடன் நடித்திருக்கின்றனர். அம்மா புகழ்பாடும் இந்த ஆக்ஷன் த்ரில்லர், அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 11 அன்று வெளியாகிறது.

SCROLL FOR NEXT