இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: வில்லன்கள் வாழும் விவசாய கிராமம் - ரங்கஸ்தலம் (தெலுங்கு)

திரை பாரதி

மிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் கடந்த ஆண்டு சென்னை, கோவையில் சில திரையரங்குகளில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ 28 நாட்கள் ஓடி சுமார் 40 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. தற்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், சமந்தா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியானது நேரடித் தெலுங்குப் படமான ‘ரங்கஸ்தலம்’. சென்னையில் 15 திரையரங்குகளில் வெளியாகி 215 காட்சிகளின் முடிவில் ரூ.69 லட்சம் வசூலை ஈட்டியிருக்கிறது. ஒரு நேரடித் தெலுங்குப் படத்துக்கு இவ்வளவு அதிகமான வசூல் கிடைத்திருப்பதற்கு முதல் காரணம் தமிழ்த் திரையுலகின் வேலை நிறுத்தம்.

புதுப் படங்கள் எவற்றையும் காண முடியாத வறட்சியில் இருந்த ரசிகர்கள், சமந்தா கிராமத்துப் பெண்ணாகவும் ஆதி இரண்டு கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்திருந்ததால் மொழி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்று அகோரப் பசியுடன் சோளக்காட்டுக்குள் புகுந்த யானைக்கூட்டம்போல ரங்கஸ்தலம் படத்தை மேய்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு கொண்டாடும் அளவுக்குத் தகுதியானதா இந்தப் படம்?

06chrcj_samatharight

பல படங்களை இயக்கியிருந்தாலும் கடந்த 2011-ல் வெளியான ‘100 % லவ்’ தெலுங்குப் படத்தின் மூலம் முன்னணித் தெலுங்கு இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்த சுகுமார் இயக்கியிருக்கும் படம் இது. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் படமாக்கத்துக்காகப் பெயர்பெற்றவர். டோலிவுட் சீனியர் ஹீரோக்களின் வாரிசுகள் அப்பாக்களைப் போல ஆக்ஷன் மசாலாவில் குளித்துக்கொண்டிருந்தால், சுகுமார் அவர்களுக்கு நடிப்பதற்கான கதாபாத்திரங்களை உருவாக்கித் தருவார்.

இந்தப் படத்தில் ராம் சரணைக் காது கேளாத, படிப்பறிவில்லாத, முரட்டு கிராமத்து இளைஞனாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார். நவீனத்தின் அடையாளமாக வலம்வந்துகொண்டிருந்த சமந்தாவுக்குக் கறுப்புநிற ஒப்பனை பூசி கிராமத்துப் பெண்ணாக உலவவிட்டிருக்கிறார்.

விவசாயத்தை நம்பி வாழும் ரங்கஸ்தலம் என்ற ஆந்திர கிராமத்தில் கதை நடக்கிறது. அங்கே தனது டீசல் மோட்டாரைக் கொண்டு விவசாய நிலத்துக்குத் தண்ணீர் இறைத்துக்கொடுப்பதை ஒரு தொழிலாகச் செய்கிறார் சிட்டிபாபுவாக வரும் ராம் சரண். சரிவரக் காதுகேளாதவர் என்பதால் கிராமத்து மக்கள் இவரை ‘சவுண்ட் இன்ஜினீயர்’ என்று நக்கல் கலந்த பாசத்துடன் அழைக்கிறார்கள். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமியை (சமந்தா) பார்த்த மாத்திரத்தில் விரும்பத் தொடங்கிவிடுகிறார்.

சிட்டியின் சகோதரர் குமார் பாபுவாக வரும் ஆதி துபாயிலிருந்து திருப்பியவர். ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் படித்த இளைஞர். அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தேர்தலில் யாரையும் போட்டியிட விடாமல் தந்திரமாகத் தன்னையே அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கச் செய்து 30 வருடங்களாகத் தலைவர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிறார் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான வில்லன் ஜெகபதிபாபு.

கிராமக் கூட்டுறவு சங்கக் கடன் என்ற போர்வையிலும் கந்துவட்டி கொடுத்தும் விவசாயிகளின் உழைப்பை மறைமுகமாக உறிஞ்சிக்கொண்டிருக்கிறார். இதை அறிந்துகொள்ளும் குமார் பாபு, கிராமவாசிகள் கடனிலிருந்து விடுபட உண்மையை உணர்த்தி அவர்களைப் பஞ்சாயத்து தலைவருக்கு எதிராகத் திருப்புகிறார். இதற்கிடையில் சிட்டிபாபு தன் காதலி மகாலட்சுமிக்கு கூட்டுறவுக் கடன் வாங்கித் தர முயலும் விவகாரத்தில் வில்லனின் ஆட்களுடன் ஏற்படும் உரசல் மோதலாகி சிறைக்குச் செல்கிறார்.

தம்பி சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த ஜெகபதிக்கு எதிராக பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் குமார் பாபு, பிராகாஷ்ராஜ் உதவியுடன் வெல்கிறார். ஆனால் குமார் பாபு கொல்லப்படுகிறார். சகோதரன் சாவுக்குக் காரணமான வில்லனை எவ்வளவு ‘சவுண்டாக’ ராம் சரண் கணக்குத் தீர்க்கிறார் என்பதுதான் கதை.

இந்திய சினிமாவில் கந்தலாக்கிக் காயப்போட்ட கதை. திரைக்கதை ஸ்பெஷலிஸ்ட் என்று பெயரெடுத்த இயக்குநர், தேய்ந்துபோன கதைக்கு ஆமை வேகத் திரைக்கதையை ஏன் நம்பினார் என்று தெரியவில்லை. முதல் பாதியில் கதை தொடங்குவதற்குள் இருபது நிமிடங்கள் முடிந்துவிடுகின்றன. இரண்டாவது பாதியிலாவது கொஞ்சம் வேகம் எடுப்பார் என்று பார்த்தால் சென்டிமென்ட் காட்சிகளின் ஓவர் டோஸ் காரணமாக முதல் பாதியைவிட மோசமான ஜவ்வு மிட்டாயாக நீள்கிறது. ராம் சரணை கதாபாத்திரமாக சிருஷ்டிக்க முயலும் இயக்குநர், ஒரு கட்டத்துக்குப்பின் அதை மறந்து அவருக்கென்றே வலிந்து உருவாக்கியிருக்கும் உபரிக் காட்சிகளால், பழையபடி மசாலா நாயகனாகவே அவரை நிறுத்திவிடுகிறார்.

அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எளிதில் யூகித்துவிடும் விதமாக நகரும் ஒரு திரைக்கதையில் தேவையற்ற காட்சிகளை வெட்டித் தள்ளியிருக்க வேண்டிய எடிட்டர் நவீன் நூலி காட்சிகளில் கைவைக்கப் பயந்து படத்தைக் காலி செய்திருக்கிறார்.

மகாலட்சுமியாக வரும் சமந்தாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்தும் நெளியும் ரசிகர்களைப் பிடித்து அமரவைக்கிறார்கள். ஆர்.ரத்னவேலு 90-களின் கிராம அழகை, படம் முழுவதும் விரவிக்கிடக்கும் செம்மண் டோன் வழியாக அள்ளித் தந்திருக்கிறார். இத்தனை இருந்தும் அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் என்ற நிலையிலேயே தேங்கிவிடுகிறது இந்தத் தெலுங்கு தேச கிராமத்து மசாலா.

SCROLL FOR NEXT