இந்து டாக்கீஸ்

திருப்புமுனை: ‘சிம்புவா இப்படி... நம்ப முடியலியே!’

தி.ஞானபாலன்

ந்த வடிவத்திலும் வந்துவிடலாம் வாழ்வின் திருப்புமுனை. நேற்று வரையிலான நாட்களை இன்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடும் திருப்புமுனை ஒவ்வொன்றும் ஒரு ரகம். நிர்மலா தேவிக்கு ஒரு ஆடியோ லீக். எடப்பாடிக்கு கூவத்தூர் எம்.எல்.ஏ. கூட்டம். வைரமுத்துவுக்கு ஆண்டாள் பேச்சு. பெருமாள் முருகனுக்கு ‘மாதொரு பாகன்’.

காவிரிப் பிரச்சினையில் எல்லோரும் ஒரு வழியில் போராட, முறைப்பும் விறைப்புமாக சிம்பு கொடுத்த பேட்டி அவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சிம்புவுக்கு மீண்டும் ஒரு திருப்புமுனை என்று கோலிவுட் பேசினாலும், சிம்பு தன் திரைவாழ்க்கையில் எதிர்கொண்ட உண்மையான திருப்புமுனை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டாரென்றே சொல்லலாம்.

லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து 'காதல் அழிவதில்லை'யில் கதாநாயகனாகி வரிசையாகப் படங்கள் கொடுத்தாலும், 'விரல்' நாயகன் என்றே விளம்பப்பட்டார் சிம்பு. வரிசையாகத் தோல்விகள் வந்து வாட்டியபோது ‘மன்மதன்’ மற்றும் ’வல்லவ’னில் தனது ‘முத்திரை’த் திறமைகளைக் காட்டி, கொஞ்சம் வெற்றியின் நிழலில் இளைப்பாறிக்கொண்டார். அதன் பிறகும் குத்தாட்டமும் பஞ்ச் வசனமும் என்று தொடர்ந்த சிம்புவை 2010-ல் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில், விரல்களை மடக்கி வைத்துக்கொள்ளும்படி உத்தரவிட்டார் இயக்குநர் கௌதம் மேனன்.

அந்தப் படத்தில், கார்த்திக் என்ற உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்பட்ட சிம்புவைப் பார்த்து, ‘நம்ம சிம்புவா இப்படி, நம்ப முடியலியே!’ என்று ரசிகர்கள் மூக்கின் மீது 'விரல்' வைத்தனர். அந்த அளவுக்கு ‘விடிவி’ அவருக்குத் திருப்புமுனையைத் தந்தது. அடுத்து வந்த 'வானம்' படத்தில் தனக்குக் கிடைத்த திருப்புமுனையை உணர்ந்து சுதாரித்துக்கொண்டார் என எண்ண வைத்தது. ஆனால், கத்தலும் குத்தலுமாக சிம்பு அடுத்தடுத்து நடித்த படங்கள் வழக்கமான படங்களே. போதாக்குறைக்கு மலிவான 'பீப்' பாடல் சர்ச்சையால் மீண்டும் ஆப்பு வைத்துக்கொண்டார். மணிரத்னம் இயக்கத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சிம்புவுக்கு அடுத்த திருப்புமுனை ஆரோக்கியமாக அமைந்தால், அதை அரவணைத்துக்கொள்வாரா?

SCROLL FOR NEXT