“குழந்தைகளை மையமாக வைத்து ‘ஃபாண்டஸி’ படங்கள், ‘பேரண்டல் மோட்’ படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. ஆனால், அவர்களை வைத்து ‘அரசியல்’ படம் எதுவும் இதுவரை வரவில்லை. அவர்கள்தாம் வருங்காலத் தூண்கள், வாக்காளர்கள் என்கிற நிலையில், அவர்களுக்கு அரசியல் தெளிவும் அறிவும் படிக்கிற காலத்திலேயே முக்கியம் என்பதால் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்திய அரசியல் நகைச்சுவை படமாக ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ (கே.எம்.கே) என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறேன்” என்று தொடங்கினார் இயக்குநர் சங்கர் தயாள்.என். இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘சகுனி’ என்கிற அரசியல் நையாண்டித் திரைப்படத்தை இயக்கி கவனிக்க வைத்தவர்.
இந்த முறை கார்த்தி போன்ற ஒரு நட்சத்திரம் இல்லாமல் படம் இயக்க என்ன காரணம்? - கதைதான் காரணம். அதேநேரம், இன்றைக்கு யோகிபாபு மிகப்பெரிய நட்சத்திரமாக இந்தியா முழுவதும் புகழ் பெற்றுத் திகழ்கிறார். அவரும் மூத்த நகைச்சுவை நடிகர் செந்திலும் இந்தப் படத்தில் இரண்டு முக்கியமான கதாபாத்தி ரங்களை நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளை மையப்படுத்திய கதையில் ஒரு மாஸ் ஹீரோவுக்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது.
‘சிறார்களுக்கு அரசியல் அவசிய மில்லை’ என்பதுதானே இன்றுவரை பெற்றோரின் நிலைப்பாடாக இருக்கிறது.. மிகவும் தவறான நிலைப்பாடு. ‘குட் டச்.. பேட் டச்’ என்று சொல்லிக்கொடுக்கிறோம். யாருடன் பழக வேண்டும், எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று சொல்லிக் கொடுக்கிறோம். அப்படிப் பார்த் தால், அவர்களுக்குப் பாலியல் கல்வியைப் போல் அரசியல் கல்வியும் அவசியம்தானே..
மருத்துவக் கல்வியில் சேர, பள்ளியில் ‘பயாலஜி’ படிக்கும் அவர்கள், நாளை தன்னை யார் ஆளவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள அரசியலையும் பள்ளியிலேயே ஏன் படிக்கக் கூடாது என்பதுதான் என் கேள்வி. அந்த அரசியல் கல்வியின் அவசியத்தை இந்தப் படம் முழுநீள நகைச்சுவை ஜானரில் எடுத்துச் சொல்கிறது. தொடக்கம் முதல் கடைசி ‘ஃபிரேம்’ வரை சிரித்துக் கொண்டே இருக்கலாம்.
‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்கிற தலைப்பு கதையுடன் எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கிறது? - இது பள்ளி மாணவர் களைச் சுற்றி நடக்கும் கதை. செந்தில் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்கிற கட்சியைத் தலைவராக இருந்து நடத்தி வருகிறார். அந்தக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருக்கும் யோகிபாபு, பொதுச்செயலாளர் பதவியை அடைய வேண்டும் என்கிற லட்சியத்தைக் கொண்டவர். அவருக்குப் போட்டியாக வருகிறார் ஒரு மேல்நிலைப் பள்ளி மாணவர்.
அவரிடம் ‘நீ என்னவாக விரும்புகிறாய்? என்று ஆசிரியர் கேட்கும்போது ‘நான் அரசியல் தலைவராக விரும்புகிறேன்’ என்கிறான். ‘ஏன் இந்த விபரீத ஆசை? அரசியல் அழுக்கான ஒரு துறை’ என்று ஆசிரியர் கேட்க, ‘உண்மைதான். ஆனால் ஏன் அந்த நிலை உருவானது.
‘அரசியலை நாம் தவிர்ப்போமானால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்’ என்று பேரறிஞர் பிளாட்டோ சொல்லியிருக்கிறார். அது என்னைப் பாதித்துவிட்டது. அதனால், நான் படித்துத்கொண்டே அரசியலில் ஈடுபடப்போகிறேன்’ என்கிறான். அவன் மூலம் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ கட்சியில் உருவாகும் சிக்கல்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறோம்.
சிறார் நடிகர்கள், மற்ற நடிகர்கள் யார்? - இமயவரம்பன், அத்வைத் ஜெய் மஸ்தான், ‘அந்தே சுந்தராணிகி’ தெலுங்குப் படப் புகழ் ஹரிகா, பவஸ் ஆகிய 4 சிறார் நடிகர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யோகி பாபு - செந்தில் இணை படம் முழுவதும் வருகிறார்கள். இவர்களுடன் ‘பருத்தி வீரன்’ சரவணன், சுப்பு பஞ்சு, லிஸ்ஸி ஆண்டனி, ‘ஃபிராங்ஸ்டர்’ ராகுல், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, வையாபுரி, சித்ரா லட்சுமணன் எனப் பலர் நடித்திருக் கிறார்கள்.