இந்து டாக்கீஸ்

திருடன் போலீஸ்

சுரேஷ்

சரியாகச் சொல்லப் போனால் ஆரம்பம் படத்துக்குப் பிறகு சற்றே இளைப்பாறிய யுவன் சங்கர் ராஜா வானவராயன் வல்லவராயன் மூலம் இந்த ஆண்டு களம் கண்டிருந்தார். இப்போது எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் ‘திருடன் போலீஸ்’ மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், இயக்கம் கார்த்திக் ராஜு.

புல்லாங்குழல் தவழ்ந்துவர மெலிதாக வருடிச் செல்லும் "தெய்வம் என்பதென்ன" என்ற பாடலில் இரண்டு வெர்ஷன்கள் உள்ளன. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்களிப்பு பற்றி அர்த்தப்பூர்வமாக விவரிக்கும் இந்தப் பாடலின் மெதுவான வடிவத்தைத் ஹரிசரணும், சற்றே வேகமான வடிவத்தை தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரணும் பாடியிருக்கிறார்கள். நினைத்து அசைபோட வைக்கும் நல்ல மெலடி.

"ஊதா கலரு ரிப்பன்" மூலம் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட ஹரிஹரசுதனுக்கு புது அடையாளம் தரும் பாடல் "பேசாதே". இதில் ராக் இசையையும் மெலடி மெட்டையும் சரியாகக் கலந்து தந்திருக்கிறார் யுவன். ஹரிஹரசுதனுடன் இணைந்து பாடியிருப்பவர் பூஜா.

நரேஷ் ஐயர், ரோஷினி பாடியுள்ள "மூடு பனிக்குள்" பாடல் வித்தியாசமான முயற்சி, மெட்டு வசீகரிக்கிறது. இதுபோன்ற பாடல்கள் காட்சிப்படுத்தும் விதத்தில் வரவேற்பு பெறலாம். குத்துப்பாட்டு வகைக்கு ஒதுக்கீடு: "என்னோடு வா" (பாடியிருப்பவர்கள் சத்யன், செந்தில் தாஸ், பிரியதர்ஷினி).

இடைவெளிக்குப் பிறகு அடித்து ஆடியிருக்கிறார் யுவன்.

SCROLL FOR NEXT