பா
தரச (மெர்க்குரி) ரசாயனக் கழிவுகளால் காது கேளாமல், வாய் பேச முடியாமல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சனந்த், தீபக், சஷாங்க், அனிஷ், இந்துஜா. இந்த 5 நண்பர்களும் ஜாலியான மலைப் பயணம் மேற்கொள்கிறார்கள். சைகை மொழி யில் நட்பு பேசியும், மகிழ்ச்சியோடும் பொழுதைக் கழிக்கிறார்கள். இந்துஜா மீது சனந்துக்கு காதல் மலர்கிறது. அதை வெளிப்படுத்துவதற்காக, தனிமையான இடத்துக்கு அழைத் துப் போகிறார். இதை அறிந்து மற்ற நண்பர்களும் அவர்களோடு காரில் தொற்றிக் கொள்கின்றனர். காதல் கனிந்த மகிழ்ச்சியில், காட்டேஜ் திரும்பும் அவர்கள் எதிர்பாராதவிதமாக பிரபுதேவாவை பார்க்க நேரிடுகிறது. அதன் பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? அதில் இருந்து மீண்டார்களா? என்பது மீதிக்கதை.
ஒரு பாழடைந்த கட்டிடம், அதற்குள் சிக்கிக்கொள்ளும் கதாபாத்திரங்கள், அவர்களை வேட்டையாடும் அமானுஷ்ய சக்தி, இறுதியில் மிஞ்சி உயிர் பிழைக்கும் ஒருவரோ, இருவரோ.. என்று காலம் காலமாக பார்த்து சலித்த வழக்கமான திகில் கதை என்பதால், திரைக்கதைக்குப் பெரிதாக வேலை இல்லை.
சில நேரங்களில், வாய்பேச முடி யாத கதாபாத்திரங்கள் சைகை மொழியில் பேசுவதற்கு தமிழில் சப் டைட்டில் போடப்படுகிறது. சிலர் பேசிக்கொள்வது நமக்கு மவுனமாக காட்டப்படுகிறது. இதிலேயே, ‘மொழியற்ற படம்’ (பேசும் படம்) என்று விளம்பரப்படுத்தப்பட்டது அடிபட்டுப் போகிறது. ஆனால், திருநாவுக்கரசு ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணன் இசையும் இதையெல் லாம் ஈடுகட்டி, படத்தை வேறொரு நிலைக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது.
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய விதம் மற்றும் கதையின் முக்கிய நிகழ்விடமான பாதரசத் தொழிற்சாலையை வைத்து, ஒரு திகில் படத்துக்குள் சூழலியல் செய்தியைச் சொன்னதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பாராட்டப்பட வேண்டியவர்.
சைகை மொழி, முகபாவங்கள் மூலம் 5 நண்பர்களும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். அதிலும், இந்துஜாவின் நடிப்பு இயல்பும் அழகுணர்ச்சியும் மிக்கதாக ஈர்க்கிறது.
கிட்டத்தட்ட இடைவேளை காட்சிக்குத்தான் பிரபுதேவா என்ட்ரி என்றாலும் அதன்பிறகு அத்தனை இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார். நடனம், காமெடி, துறுதுறு பேச்சு என்று கலகலப்பான நபராகவே அறியப்பட்ட பிரபுதேவா இதுவரை ஏற்றிராத கதாபாத்திரம். மிரட்டலான ஒப்பனையுடன் வந்து நடுங்க வைக்கிறார்.
முதல் பாதி திரைக்கதை பொறுமையாக நகர்கிறது. வேகம் எடுக்கும் 2-ம் பாதியில் பல லாஜிக்கல் பிரச்சினைகள். பிரபுதேவா ஆவியாகப் புகுந்து, உருவம் மாறி பழிவாங்குவது தெளிவில்லாமல் இருக்கிறது. பார்வையற்றவரான பிரபுதேவாவுக்கு சைகை மொழி எப்படி தெரியும்? இந்துஜாவின் சைகை மொழியை, கைகள் வழியே அவர் உணர்ந்துகொள்வது இடிக்கிறது. பேய்க்கு ஏன் கண் தெரியாது என்கிற காரணமும் தெளிவாக இல்லை. பார்வையற்ற ஒருவரால் இந்துஜா எப்படி தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்? தெரியாமல் செய்த தவறுக்காக அந்த இளைஞர்கள் ஏன் அவ்வளவு ஆக்ரோஷமாக பழிவாங்கப்படுகின்றனர்? என்பதெல்லாம் தெளிவாக கூறப்படவில்லை. இதற்கு ஈடுசெய்யும் விதமாக அமையவேண்டிய பிரபுதேவா - ரம்யா நம்பீசன் ப்ளாஷ்பேக் காட்சிகளும் மிக சாதாரணமாக கடந்துபோய் விடுகின்றன.
படத்தின் இறுதியில், ‘மன்னித்துவிடு, இதுவரை நாம் தவறான எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்திருக்கிறோம்’ என்று எழுதிச் செல்கிறது பிரபுதேவா ஆவி. அது, படத்தின் கதாபாத்திரங்களை விமர்சிப்பதுபோல, சமீபத்திய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை நுட்பமாக உணர்த்துகிறது. கடைசியில் போகிற போக்கில் காட்டப்படுகிற சிலைடுகள், இது வெறும் திகில் படமல்ல என்பதை பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது.