“ஜப்பானியத் திரைப்பட மேதை அகிரா குரோசாவாவின் உலகப் புகழ்பெற்றத் திரைப்படம் ‘ரஷோமான்’. அதன் திரைக்கதை பாணியைத் தழுவிப் படமெடுத்தால் ‘ரஷோமான் எஃபெக்ட் மூவீ’ என்கிறார்கள். நான் இயக்கியிருக்கும் ‘நேற்று இந்த நேரம்' அப்படியொரு படம்தான். இதற்கு முன்னர் கமல் சாரின் ‘விருமாண்டி’யைக் குறிப்பிடலாம்” என்று பேசத் தொடங்கினார் அறிமுக இயக்குநர் சாய் ரோஷன் கே.ஆர். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
‘ரஷோமான்’ படத்தின் திரைக்கதை உங்களை எந்த வகையில் பாதித்தது?
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தொடங்கி, கமல் சார் வரை அந்தப் படத்தின் திரைக்கதையால் தாக்கம் பெறாத ஒருவர் எந்தத் திரையுலகிலும் இருக்கமுடியாது. உண்மையில் ‘ரஷோமான்’ படத்தின் திரைக்கதையை எழுதியவர் அகிரா குரோசாவா அல்ல; ஷினோபு ஹஷிமோடோ என்கிற இளைஞர்.
பொ.ஆ.12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நாட்டுப்புறச் சிறு கதைக்குத் திரைக்கதை எழுதி, அதை குரோசாவாவுக்கு அனுப்பினார். அதைப் படித்து வியந்த அவர், ‘ரஷோமா’னைத் தேர்வு செய்து ஹஷிமோடோவை அங்கீகரித்தார்.
படமாக்கிய விதத்தில் குரோசாவாவின் ஆளுமை மேலோங்கி நின்றதால் திரைக்கதையாசிரியர் ஹஷிமோடோ வெளிச்சம் பெறவில்லை. ‘ரஷோமான்’ திரைக்கதையின் சிறப்பு என்பது கொலையாளி யார் என்பதை யூகிக்கவே முடியாத அதன் ‘சஸ்பென்ஸ்’ தன்மை.
‘நேற்று இந்த நேரம்’ என்ன கதை?
இறுதியாண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டதைக் கொண்டாடுவதற் காக ஊட்டிக்குச் சுற்றுலா செல்கிறார்கள் 7 இளைஞர்கள். பசுமை சூழ்ந்த ஒரு ரிசார்ட் விடுதியில் தங்கும் அந்த 7 பேரில் ஒருவர் இரண்டாம் நாளில் காணாமல் போகிறார்.
ஊட்டியெங்கும் அவரைத் தேடிச் சோர்ந்துபோகும் நண்பர்கள் காவல் நிலையத்தில் உதவி கோர, ஒரு புலனாய்வு அதிகாரி வருகிறார். அவர், ஊட்டியை ஏற்கெனவே கலங்கடித்துக்கொண்டிருக்கும் சீரியல் கில்லர் வழக்கை விசாரித்துக் கொண்டிருப்பவர்.
காணாமல்போன கல்லூரி மாணவர் வழக்கில், மற்ற 6 பேரிடமும் தனித்தனியாக விசாரிக்கிறார். ஒவ்வொருவரும் நடந்தவற்றை அவரவர் கோணத்தில் விவரிக்கிறார்கள். காணாமல் போனவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? அல்லது சீரியல் கில்லரின் பொறியில் காணாமல் போனவர் சிக்கினாரா? என்ன நடந்தது என்பதைப் புலனாய்வு அதிகாரி கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதுதான் கதை.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஹரிதா, மோனிகா ரமேஷ் என இரண்டு கதாநாயகிகள். இவர்களுடன் திவாகர், நிதின், அரவிந்த் என ‘சஸ்பென்ஸ்’ அம்சத்துக்கு வலிமை சேர்க்கிற மாதிரி புதுமுகங்களை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறேன்.
ஹீரோ, ஹீரோயின் என்று இருந்தாலும் இதில் வரும் 8 கதாபாத்திரங்களுக்கும் கதை யில் சமமான முக்கியத்துவம் இருந்தால் தான் அது ‘ரஷோமான் எஃபெக்’டைக் கொடுக்கும். அதைச் சரியாகச் செய்திருக்கிறோம். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை நித்தின் ஆதித்தியாவும் நானும் இணைந்து எழுதியிருக்கிறோம்.
’மர்டர் மிஸ்டரி’யாக இருந்தாலும் கதையை நகர்த்துவதில் 4 பாடல்களின் பங்கு முக்கியமானது. கெவின்.என். இசையமைத்துள்ளார். விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.