எ
ம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் எம்.எஸ்.வியின் இசையில் பணிபுரிந்தவர் கவிஞர் முத்துலிங்கம். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி அவரைப் பேசவைத்தது மெல்லிசை மன்னர் ரசிகர் சங்க அறக்கட்டளை. ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் ‘கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’ என்ற பாடல் தொடங்கி, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரைக்கும் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். தமிழக அரசின் அரசவைக் கவிஞர்களில் ஒருவராகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த பெருமைக்கு உரியவர்.
சென்னை, மயிலாப்பூர் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் அரங்கில் உட்கார இடமில்லாத அளவுக்குக் கூட்டம். ரசிகர்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆருக்கும் எம்.எஸ்.விக்கும் இதைவிட மரியாதையைச் செயல்பூர்வமாக எப்படிக் காட்ட முடியும்? வெங்கட் ஸ்ரீதர் சுவாரசியமாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஒலிப்பொறியாளர் சம்பத் அந்தக் காலத்தில் மோனோ டிராக்கிங் முறையில் செய்த ஒலிப்பதிவு முறைகளையும் விவரித்தார்.
பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கி, ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தின் மூலம் பாடலாசிரியர் ஆனவர் முத்துலிங்கம். எம்.ஜி.ஆர். தான் நடித்த படங்களில் எல்லாம் தனக்குப் பாட்டெழுத வாய்ப்பளித்ததை, அந்தப் பாடல்களின் திரையிடலுக்குப் பின் நெகிழ்ச்சியோடு தனது உரையில் நினைவுகூர்ந்தார் முத்துலிங்கம்.
‘மதுரையை மீ்ட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் ‘தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை’ என்னும் பாட்டில் ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்னும் வரி வரும். இந்த வரியால் சென்சாரில் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது? அதனால் ‘கோட்டையிலே மீன் கொடி பறந்திட வேண்டும்’ என மாற்றிவிடுங்களேன் என்றார் எம்.ஜி.ஆர்.
நான் பாட்டின் மீட்டருக்குச் சரியாக ‘மகர கொடி’ என்று போடலாமா? என்றேன்.
மீன் என்றாலும் மகரம் என்றாலும் ஒன்றுதானே… அப்படியானால், முன்பே உள்ள வரியோடு ஒருமுறையும், மகர கொடி என்று பாடி ஒருமுறையும் பாடலைப் பதிவுசெய்யுங்கள். சென்சாரில் பிரச்சினை வந்தால் சமாளிப்பதற்கு அது உதவும் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால், ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்னும் வரிகளை மட்டும் கொண்ட பாடல் மட்டுமே ஒலிப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வியிடம் “நான் இரண்டு முறையில் ஒலிப்பதிவு செய்யச் சொன்னேனே” என்று சொல்லியிருக்கிறார்.
“நீங்கள் ஏற்றுக்கொண்ட வரிகள்தான் இவை என்று முத்துலிங்கம் சொன்னார்” என்று எம்.எஸ்.வி. தெரிவித்திருக்கிறார். படம் சென்சாருக்குச் சென்றது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்தது.
படத்தின் வரிகளை சென்சார் அதிகாரிகளிடம் காட்டி, படத்தின் சூழலை விளக்கி இந்த வரிகளால் ஏதாவது பிரச்சினை வருமா என்று அவர்களிடம் கேட்டு, இந்த வரிகளால் எந்தப் பிரச்சினையும் வராது என்று அவர்கள் உறுதி அளித்ததால்தான், கோட்டையிலே நமது கொடி பறக்க வேண்டும் என்னும் வரியையே மெல்லிசை மன்னரிடம் தெரிவித்தேன்.இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். படத்தின் வெற்றி விழாவில், “பாடலாசிரியர் என்றால் பாட்டை எழுதுவதோடு நிறுத்திக்கொள்வார்கள். நமக்காக சென்சார் அதிகாரிகளைப் பார்த்து, பேசி, அவர்களின் விளக்கத்தைப் பெற்று, இவ்வளவு வேலைகளை யார் பார்ப்பார்கள்? அதனால்தான் முத்துலிங்கத்துக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறேன்” என்றார். எனக்குப் பேச்சே வரவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். என்றார் முத்துலிங்கம்.