இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: மதுரவீரன்

இந்து டாக்கீஸ் குழு

சாதியின் பெயரால் பிரிவினையைத் தூண்டுவதை ஒழித்தால்தான் மக்கள் ஒற்றுமையாக இருக்க முடியும் என்ற நோக்கத்தோடு ஊருக்கு பல நல்ல விஷயங்களை செய்ய முயற்சிக்கிறார் ஊர் பெரிய மனிதரான சமுத்திரகனி. இதனால் அதே ஊரைச் சேர்ந்த வேல.ராமமூர்த்தி, மைம் கோபி உட்பட பலரது பகையைச் சம்பாதிக்கிறார்.

இந்தச் சூழலில், ஊரில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடக்கும்போது, வேல.ராமமூர்த்தி அணிக்கும், மைம் கோபி அணிக் கும் பிரச்சினை வெடிக்கிறது. சமுத்திரகனி தலையிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விதிமுறைகளை அறிவிக்கிறார். இதனால் பலரது கோபத்துக்கு ஆளாகி, கொலை செய்யப்படுகிறார்.

அதற்குப் பிறகு, அவரது குடும் பம் மலேசியா சென்றுவிடுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் (சண்முகபாண்டியன்) ஊர் திரும்புகிறார். அப்பாவை கொன்றவரைக் கண்டுபிடித்து தண்டிக்கிறாரா? சமுத்திரகனி ஆசைப்பட்டபடி, ஜல்லிக்கட்டு மீண்டும் அந்த ஊரில் நடந்ததா என்பதுதான் மீதி கதை.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவோடு சேர்த்து, எழுதி, இயக்கியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளை மிக நுட்பமாக காட்சிப்படுத்திய விதம் நேர்த்தி. ஜல்லிக்கட்டுப் போட்டி யில் நிலவும் கிராமத்து சாதி அரசி யல் தொடங்கி, கடந்த ஆண்டில் ஜல்லிக்கட்டுக்காக கூடிய இளை ஞர் படையின் உணர்வு வரை, படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். படத்தில் இத்தனை அழுத்தமான கருத்தியல் இருந்தாலும், எந்த இடத்திலும் பிரச்சாரத் தன்மை இல்லாது, திரைக்கதை தாங்கிப் பிடிக்கி றது.

நீண்ட இடைவெளிக்கு பின்பு, மிகவும் நிதானித்து வந்துள்ள சண்முகபாண்டியனுக்கு, ‘மதுரவீரன்’ நன்றாகவே கைகொடுத்துள்ளது. அவரது ஆஜானுபாகுவான உயரம், ஆக்சன் காட்சிகளில் கூடுதல் பலம். ஆனால், வசன உச்சரிப்பு, இயல்பான காட்சிகளில் இன்னும் கூடுதல் உழைப்பை தரவேண்டும். அப்பா விஜயகாந்த் பழைய படங்களில் தெறிக்கவிட்ட வசன உச்சரிப்பைப் பார்த்தாலே போதுமே!

காதலுக்காக மீன் குழம்பு வைக்க கற்றுக்கொள்ளும் நாயகி மீனாட்சி, நடிப்பில் ஒன்றிரண்டு இடங்களிலும், ‘உன் நெஞ்சுக் குள்ள’ பாடலிலும் இயல்பான கிராமத்துப் பெண்ணாக பாராட்டுகளை அள்ளுகிறார். மைம் கோபியின் துடிப்பும், கோபமும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் அடிக்கும் காமெடிகள் எடுபடவில்லை.

சண்டைக் காட்சிகளுக்காக மெனக்கெட்டிருக்கும் இடங்களில் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது. சந்தோஷ் தயா நிதியின் பின்னணி இசை, பாடல்கள் குறை சொல்வதற்கு இல்லை. யுகபாரதியின் ‘என்ன நடக்குது நாட்டுல’ பாடல் சிறப்பு.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடந்த விஷயங்கள், அப் போது நடிகர் விஜய் பேசிய வீடியோ ஆகியவற்றை இரண்டாம் பாதியில் இணைத்துள்ளனர். அவை வெறும் கோப்புக் காட்சிகளின் தொகுப்பு போல அமைந்தது பலவீனம். மாட்டுத்தாவணியில் இருந்து ஆள் மாற்றி கூட்டிவந்த இளைஞர் சண்முகபாண்டியன், கூட்டத்தோடு ஏன் ஐக்கியமானார் என்பதற்கு படத்தில் பதில் இல்லை.

ஜல்லிக்கட்டில் 20 ஆண்டு களுக்கு முன்பு இருந்த சூழலையும், அதன் அரசியல் பின்னணியையும் எந்தச் சிக்கலும் இல்லாமல் தற்போதைய ஜல்லிக்கட்டு போட்டி வரை நகர்த்திக்கொண்டு வந்து நேர்த்தியாக இணைத்த இயக்குநரின் மெனக்கெடல் அருமை. அந்த ஒற்றைப் புள்ளி யோடு காதல், பாசம், வீரம், பழிவாங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை விறுவிறுப்பாகவும், இன்னும் அழுத்தமாகவும் கொடுத்திருந்தால் மதுரவீரனின் வீரம் தனித்து தெறித்திருக்கும்.

SCROLL FOR NEXT