1. 500 நாட்கள் படப்பிடிப்பு
அக்பரின் மகன் சலீம், அரசவை நாட்டியப் பெண் அனார்கலி ஆகிய கதாபாத்திரங்களின் காதல் கதையை இந்தியர்களின் மனதில் காவியமாகப் பதியச்செய்த படம் 1960-ல் வெளியான ‘முகல்- எ- ஆஸம்’. உருது நாடகாசிரியர் இம்தியாஸ் அலி தாஜ் எழுதிய நாடகமே சினிமாவாக எடுக்கப்பட்டது. 1946-ல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நாட்டின் அரசியல் சூழல் காரணமாகத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர், 1950-களின் தொடக்கத்தில் முற்றிலும் புதிய நட்சத்திரப் பட்டாளத்தோடு பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்படத்துக்காக 500 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவு அன்று 1.5 கோடி ரூபாய். ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள், யானைகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் படத்தில் டெல்லியின் சிறந்த தையல் கலைஞர்கள் உடைகளை வடிவமைத்தனர்.
ஹைதராபாத்திலிருந்து பொற்கொல்லர்கள் வரவழைக்கப்பட்டு நகைகள் தயாரிக்கப்பட்டன. ராஜாவின் கிரீடங்களைச் செய்ய கோலாபூரிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். திரைப்படத்தின் காவியப் பரிமாணத்துக்கு நவுஷாத்தின் இசை உதவியது. இயக்குநர் கே. ஆசிப் இயக்கத்தில் திலீப்குமார், மதுபாலா ஜோடியாக நடித்தனர். அவர்கள் நிஜவாழ்க்கையிலும் காதலின் உச்சமும் பிரிவும் இப்படத்தின் படப்பிடிப்பில்தான் நடந்தது. இந்திய சினிமாவில் இன்றும் அற்புதமான காதல் காட்சிகளுக்காக நினைவுகூரப்பட்ட இத்திரைப்படம் டிஜிட்டல் முறையில் வண்ணப்படமாக வெளியான ஆண்டு எது?
2. பெண்களுக்காக ஓர் ஆண்!
குடும்பத்திலும் சமூகத்திலும் வெளிப்படையாகப் பேசத் தயங்கக்கூடிய ஒன்றாகவே இன்னும் இருக்கிறது மாதவிடாய். இயற்கையான இந்த நிகழ்வைப் பெண்கள் ஆரோக்கியமாக எதிர்கொள்ளக் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரிப்பதற்காகப் பல போராட்டங்களைச் சந்தித்து வெற்றிபெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம். இவரைக் குறித்து அமித் விர்மானி 2013-ல் எடுத்த ஆவணப்படமே ‘மென்ஸ்சுரல் மேன்’.
கிராமப்புறப் பெண்களும் எளிதில் வாங்கிப் பயன்படுத்தும் வண்ணம், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து வழங்குவதோடு அதையே ஒரு வாழ்வாதாரத் தொழிலாகவும் செய்ய, ஓர் இயந்திரத்தை உருவாக்கியவர் இவர். சிறந்த ஆவணப்படத்துக்கான ‘ஆசியா பசிபிக் ஸ்க்ரீன்’ விருதுக்குப் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் 23 மாநிலங்களில் இதுவரை 643 சானிட்டரி நாப்கின் உற்பத்தி இயந்திரங்களை நிறுவியுள்ள முருகானந்தத்தின் வெற்றிக்கதையை வைத்து, அக்ஷய் குமார் நாயகனாக நடித்து விரைவில் வெளியாகவுள்ள பாலிவுட் திரைப்படம் எது?
3. இந்தியில் ஜெமினி கணேசன்
கறுப்பு வெள்ளை தமிழ் சினிமாக்களில் 60 ஆண்டுகளைத் தாண்டியும் கதையம்சம், நடிப்பு, இசை, பாடல்கள் என எல்லா அம்சங்களுக்காகவும் நினைவுகூரப்படும் படம் 1955-ல் வெளியாகி வெற்றிபெற்ற ‘மிஸ்ஸியம்மா’. விஜயா தயாரிப்பு நிறுவனம், தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரித்த இப்படத்தை இயக்கியவர் எல்.வி.பிரசாத். ரவீந்திரநாத் தாகூரின் ‘மன்மோயி கேர்ள்ஸ் ஸ்கூல்’, ஷரதிந்து பந்தோபாத்யாயின் ‘டிடெக்டிவ்’ கதைகளை அடிப்படையாகக்கொண்டு இத்திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதியவர் சக்ரபாணி. ஜெமினி கணேசன் நாயகனாகவும் பானுமதி நாயகியாகவும் நடிக்க, நான்கு ரீல்கள் எடுக்கப்பட்ட பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக பானுமதி படத்திலிருந்து வெளியேற நேர்ந்தது.
அப்போது வளரும் நடிகையாக இருந்த சாவித்திரி ஆற்றல் வாய்ந்த நட்சத்திரமாகத் தெரியவருவதற்கு பானுமதியின் வெளிநடப்பு காரணமாக இருந்தது. ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’, ‘வாராயோ வெண்ணிலாவே’, ‘எனையாளும் மேரிமாதா’ போன்ற அருமையான பாடல்களைப் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகியாக பி. சுசீலா தமிழ் ரசிகர்களின் உள்ளத்தில் நிலைபெற்ற படமும் இதுதான். தெலுங்கில் நாகேஸ்வரராவ் நடித்து வெற்றிபெற்ற இத்திரைப்படத்தின் இந்தி வடிவத்திலும் ஜெமினி கணேசனே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்தி வடிவத்தின் பெயர் என்ன?
4. தடைசெய்யப்பட்ட படம்!
அரசியல் உள்ளடக்கம், படத்தொகுப்பு உள்ளிட்ட சினிமாவின் சகல துறைகளிலும் முன்னோடியாகக் கருதப்படுவர் ரஷ்ய இயக்குநர் செர்கி ஐசன்ஸ்டீன் (Sergei Eisenstein). அவரது 120-வது பிறந்த நாளை (2018 ஜனவரி 22 ) முன்னிட்டு அவரை கூகுள் டூடுள் சிறப்பித்துள்ளது. இவருடைய ‘இவான் தி டெரிபிள்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக 1944 மற்றும் 1958-ம் ஆண்டுகளில் வெளியானது.
16-ம் நூற்றாண்டில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னனான நான்காம் இவான் வசிலியவிச்சின் வாழ்க்கை சரிதம் இது. முதல் பாகம் அன்றைய சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினை மிகவும் கவர்ந்தது. இரண்டாம் பாகத்தில் ஜார் மன்னர் இவானின் கொடுமைகள் குறித்த சித்தரிப்புகள் இருந்ததால் ஸ்டாலின் அதை ரசிக்கவில்லை. எனவே, அது தடை செய்யப்பட்டது.
ஐசன்ஸ்டீனின் மறைவுக்குப் பிறகு நிகிதா குருசேவின் நிர்வாகத்தில் இரண்டாம் பாகம் வெளியான ஆண்டு எது?
5. அமெரிக்காவின் குடும்ப வாழ்க்கை
ஹாலிவுட்டின் அரவிந்த் சுவாமி என அழைக்கத் தக்கவர் மத்திய வயது நடிகரான ஜார்ஜ் க்ளூனி. அவரது நடிப்பில் வெளியான சிறந்த படங்களில் ஒன்று ‘தி டெஸன்டன்ட்ஸ்’. சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான அலெக்சாண்டர் பேய்ன், உல்லாசத் தீவான ஹவாயின் நிலப்பரப்புகளை இன்னொரு கதாபாத்திரமாக்கி எடுத்த இக்குடும்பத் திரைப்படம் 2011-ல் வெளிவந்தது. ஹவாய் தீவில் குடியேறிய முதல் வெள்ளைக்காரக் குடும்பத்தின் கோடீஸ்வர வாரிசான மட் கிங்கின் தொழில் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் ஒரே சமயத்தில் நெருக்கடி சூழ்கிறது. மனைவி, குழந்தைகளை அதுவரை கவனிக்காமலேயே இருந்த மட் கிங்கின் மனைவி எலிசபெத் ஒரு சாகச விரும்பி.
ஒரு படகு விபத்தில் சிக்கி கோமா நிலைக்குப் போகிறார் எலிசபெத். மரணத்தின் விளிம்பில் இருக்கும் மனைவி, முரட்டுக் குழந்தைகள், மனைவி குறித்து புதிதாகத் தெரியவரும் உண்மைகளுடன் போராடித் தீர்வுக்கு வருவதே இப்படத்தின் கதை.
குடும்பத் தலைவன் குடும்பத்தின் மீது காட்டும் அலட்சியம் மேலதிக அலட்சியங்களுக்கு வழிவகுக்கும்; ஒரு பிரச்சினைக்கான தீர்வு இன்னொரு பிரச்சினைக்கும் தீர்வாக மாறமுடியும் என்பதை நேர்த்தியாகச் சொன்ன திரைப்படம் இது.
சகல வகையிலும் வளர்ந்த நாடாகச் சொல்லப்படும் அமெரிக்கா, தற்போது எதிர்கொள்ளும் தார்மிகக் குடும்ப நெருக்கடிகளைச் சித்தரிக்கும் இப்படம் எந்தப் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றது?