இந்து டாக்கீஸ்

பாலிவுட் வாசம்: எட்டும் தூரத்தில் இத்தாலி சினிமா!

எஸ்.ஆர்.எஸ்

பாலிவுட்டில் இன்னாள் முன்னாள் ஹீரோயின்கள் முன்பைவிட அதிக பிசியாகியிருக்கிறார்கள். அனில் கபூரின் மகளான சோனம் கபூர் நடிக்கத் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றிபெறாவிட்டாலும், அவரது நட்சத்திர அந்தஸ்து குறையாததற்குக் காரணம் தேர்ந்தெடுத்த கதைகளில் நடிப்பதுதான்.

பாகிஸ்தான் ஹீரோவுடன்

இவர் நடித்த முதல் படமான சாவரியா, இவருக்கு சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றுத்தந்தது. நடுத்தரக் குடும்பப் பின்னணியில் மாடலிங் துறையில் சாதிக்க ஆசைப்படும் துடுக்கான யுவதியாக நடித்த டெல்லி-6 நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. படம் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் மனம் மயக்கும் மெலடியான ‘மசாக்களி’ பாடல் வழியாகக் கொஞ்சும் புறாவாக சோனம் மாறினார். தனுஷுடன் இவர் நடித்த ராஞ்சனாவிலும் நடிப்புத் திறமைக்காகப் பரவலான பாராட்டைப் பெற்றார்.

அனில் கபூர் குடும்பத்தினரும் ஹாலிவுட்டின் டிஸ்னி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘கூப்ஸூரத்’ படத்தில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முன்னணி நடிகர் ஃபவாத் கானுடன் ஜோடி சேர்கிறார் சோனம் கபூர். இந்தப் படத்தை இயக்குபவர் சஷாங்கா கோஷ்.

ஸ்பீல்பெர்க் படத்தில் ஜூஹி

பாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னி ஜூஹி சாவ்லா, ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கப்போகும் திரைப்படத்தின் வழியாக விரைவில் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். திருமணத்துக்குப் பிறகு மேல்தட்டு வர்க்க அம்மாவாக விளம்பரப் படங்களில் கலக்கிய ஜூஹி, பாலிவுட்டில் ஆண்டுக்கு இரண்டு படங்கள் வீதம் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வந்தார். 49 வயதிலும் ஜூஹியின் துள்ளலான நடிப்பைக் கண்டு வியந்த ஹாலிவுட் இயக்குநர் லெஸ் ஹால்ஸ்ட்ராம் தாம் இயக்கும் ஸ்பீல்பெர்க் படத்தில் நடிக்க வருமாறு அழைத்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஓம் பூரியின் மனைவியாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 60 வயதான ஆனால் சுறுசுறுப்பான கதாபாத்திரம் என்பதால் ஜூஹியைத் தேர்வு செய்தாராம் லெஸ்.

கணவருக்கு கால்ஷீட்

குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து பாலிவுட்டில் விரைவில் வெளியாக உள்ள மர்டானி படத்தில் போலீஸ் அதிகாரியாக முன்னணிக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் ராணி முகர்ஜி. பாலிவுட்டில் சமீபத்தில் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில் ராணி முகர்ஜி இப்படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்திற்காகவே இஸ்ரேலியத் தற்காப்புக் கலையைப் பிரத்யேகமாக கற்றிருக்கிறார் ராணி. வெறுமனே பறந்து பறந்து எதிரிகளைத் தாக்குவது போன்ற மிகையான ஆக் ஷன் காட்சிகள் இப்படத்தில் இல்லையென்றும், சண்டைகள் யதார்த்தமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறார் . ராணி முகர்ஜின் கணவர் ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் இப்படத்தை ப்ரதீப் சர்க்கார் இயக்கியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு கணவருக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதன் மூலம், வித்யா பாலன் வழியைப் பின்பற்றுகிறார் ராணி.

இத்தாலியின் ராணி

குயின் படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற கங்கணா ரணாவத் விரைவில் இத்தாலி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். திடீரென்று கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோக, அதற்காக வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் கோழையாகிவிடாமல், தேன்நிலவுக்கு முன்பதிவு செய்த விமான டிக்கெட்டில் பாரீஸ் நகருக்குப் போய் கங்கணா ரணாவத் அங்கே தனக்கான புதிய உலகைக் கண்டுகொள்ளும் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பினார். குயின் திரைப்படம் தற்போது உலகப்பட விழாக்களுக்கும் பயணமாகி வரும் நிலையில் கங்கணாவின் புகழ் பரவி வருகிறது.

இதற்கிடையில் கங்கணா வின் நடிப்பில் வியந்த பிரபல இத்தாலி இயக்குநர் எடர்டொ டி ஏஞ்சலிஸ் இயக்கும் படத்தில் மசிமிலியானோ கல்லோவுடன் நடிக்கிறார். சமீபத்தில்தான் அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவதற்கான வகுப்பில் பங்கெடுத்து விட்டு திரும்பி வந்துள்ள கங்கணா ரணாவத் இந்த இத்தாலியப் திரைப்படத்தின் திரைக்கதை குறித்து இயக்குநருடன் பேசிவருகிறார்.

உலக சினிமாவுக்குப் பல உயர்ந்த படைப்புகளை அளித்துவரும் இத்தாலிப் பட உலகில் இந்தியக்கதா நாயகிகளுக்கு எப்போதும் எட்டாக்கனிதான். ஆனால் புதிய இத்தாலிய வாய்ப்பின் மூலம் ஐரோப்பியச் சந்தை தனக்குத் திறந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ள கங்கணா வுக்கு இது அறுவடைக்காலம். குயின், ரிவால்வர் ராணி எனத்தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து அருமையான நடிகை என்றும் பெயர் பெற்றுள்ள கங்கணா ரணாவத் அடுத்து தனு வெட்ஸ் மனு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT