ஒ
ரே உண்மைச் சம்பவம் வெவ்வேறு கோணங்களில் திரைப்படங்களாகும் வரிசையில் சேர்ந்திருக்கிறது ‘7 டேஸ் இன் என்டபி’.
1976-ல் இஸ்ரேலில் இருந்து பிரான்சு கிளம்பிய ‘ஏர் பிரான்ஸ்’ பயணிகள் விமானத்தை பாலஸ்தீனத் தீவிரவாதிகள் கடத்தினர். உகாண்டாவின் அப்போதைய அதிபர் இடி அமீன் ஆசிர்வாதத்துடன் அந்நாட்டு விமான நிலையமான ‘என்டபி’யில் 200 பயணிகள் அடங்கிய கடத்தல் விமானம் அடைக்கலமானது. உலகை உலுக்கிய இக்கடத்தல் சம்பவத்தில், இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனப் போராளிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விடுக்கப்பட்டன.
பேச்சுவார்த்தையில் எதுவும் பெயராது போகவே இஸ்ரேல் சத்தமின்றி ராணுவ மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. உயிரைத் துச்சமாக மதித்த கமாண்டோ படையொன்று 4,000 கி.மீ. பறந்து சென்று அந்நிய மண்ணில் அதிரடித் தாக்குதல் நடத்தி பிணையக் கைதிகளை மீட்டனர். 7 நாட்கள் இழுத்தடித்த தீவிரவாதிகளின் மிரட்டல்களும் ஒற்றை இரவில் அவர்களைப் போராடி அழித்த இஸ்ரேல் வீரர்களின் சாகசமும் சின்ன, பெரிய திரைகளுக்காகப் பின்னர் பலமுறை சினிமாவானது. தற்போது பிரிட்டீஷ் தயாரிப்பாக ‘என்டபி’ என்ற பெயரில் உருவாகி, ஹாலிவுட்டில் ‘7 டேஸ் இன் என்டபி’யாக மார்ச் 16 அன்று இத்திரைப்படம் வெளியாகிறது.
இஸ்ரேல் வீரர்களின் அதிரடியை இன்னும் நெருக்கத்தில் அணுகியிருக்கும் இப்படம், மீட்பு நடவடிக்கையில் இஸ்ரேல் தரப்பில் பலியான ஒரே கமாண்டோ வீரர் பற்றியும் பேசுகிறது. அவர் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அண்ணன் ‘யோநடன் நெதன்யாகு’. டேனியல் ப்ரௌல், ரோஸமன்ட் பைக் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை ஜோஸ் பஜிலா (Jose Padilha) இயக்கி உள்ளார்.
துனிசியா அருகிலிருக்கும் குட்டி தேசமான மால்டாவின் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, நிஜக் கடத்தலுக்கு ஆளான லிபிய விமானம் ஒன்று அதே விமான நிலையத்தில் தஞ்சம் புக, இந்த நேரடி சம்பவத்தின் தாக்கத்தையும் படத்தின் விறுவிறுப்புக்குப் பயன்படுத்திக்கொண்டார்களாம்.