இந்து டாக்கீஸ்

இயக்குநரின் குரல்: மனசாட்சியை உதறினால் ‘விபத்து’

ஆர்.சி.ஜெயந்தன்

நடிகர் மாதவன் எழுதி, இயக்கி, நடித்த ‘ராக்கெட்ரி’ படத்தில் அவரது உதவியாளராகப் பணிபுரிந்தவர் பாலாஜி மாதவன். இவர், விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘வஞ்சகர் உலகம்’ படங்களின் மூலமும் ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியின் வழியாகவும் கவனம் பெற்ற சிபி புவனச் சந்திரனை நாயகனாக வைத்து ‘இடி மின்னல் காதல்’ என்கிற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடவிருக்கும் நிலையில் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

மிஷ்கின், மாதவன் ஆகியோரிடம் பணிபுரிந்த அனுபவம் எப்படியிருந்தது? - மிஷ்கின் சாரிடம் ‘முகமூடி’ தொடங்கி ‘பிசாசு’ படம் வரை உதவியாளராகப் பணிபுரிந்தேன். அதில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை மிஷ்கின் சாரே தயாரித்தார். அதேபோல், மாதவன் சாருக்குக் கதை சொல்வதற்காக மும்பைக்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.

அவர் தாம் எழுதிய ‘ராக்கெட்ரி’ படத்தின் திரைக்கதையைப் படித்துவிட்டு எனது கருத்துகளைக் கேட்டார். நான் சொன்னவை அவருக்குப் பிடித்துப் போய்விட, “இந்தப் படத்தில் என்னோடு பணி செய்; பிறகு நாம் இணைந்து பணியாற்றலாம்” என்றார்.

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய இரண்டு படங்களுமே இயக்குநர்களின் சொந்தத் தயாரிப்பு என்பதால், எனக்குத் தயாரிப்பு நிர்வாகத்திலும் முழுமையான அனுபவம் கிடைத்தது.

அதுதான் இப்போது எனது முதல் படத்தை எனது நண்பர்களுடன் இணைந்து நானே தயாரிக்கும் துணிவைக் கொடுத்தது. தயாரிப்பு நிர்வாகம் தெரியாமல் இன்றைக்குத் தமிழ் சினிமாவில் இயக்குநராக இருக்க முடியாது.

படத்தின் தலைப்பில் ‘காதல்’ இருக்கிறது, ‘இடி - மின்னல்’ என்கிற மற்ற இரண்டு சொற்கள் கதையோடு தொடர்புடையதா? - நூறு சதவீதம்! இதுவொரு ரொமான்ஸ் த்ரில்லர். அமெரிக்கா செல்ல விசா கிடைத்துவிட்ட நாயகன், தனது காதலியுடன் காரில் செல்கிறான். அதுவொரு மழைக்காலம். நவம்பர் 7ஆம் தேதி, நள்ளிரவு 1.30 மணி.

சென்னை கடற்கரைச் சாலையில், துறைமுக நுழைவாயிலுக்கு எதிரே உள்ள, போர் நினைவுச் சின்ன ரவுண்டானாவில் கார் செல்லும்போது எதன் மீதோ மோதி இடி போன்ற சத்தம். அந்த விபத்து, நாயகன் - நாயகி ஆகிய இருவரது வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது.

மின்னலில் சிக்கினால் மனிதர்கள் எப்படி நிலை குலைந்து போவார்களோ அப்படியான சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். தவறை தவறென்று ஒப்புக்கொள்ளாத மனித மனம், மனச்சாட்சியை உதறினால் வரும் எதிர்பாராமைகள் தான் படம்.

பாலாஜி மாதவன்

நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்? - இந்தக் கதைக்கு அதிகம் பரிச்சயமில்லாத முகம் தேவை என்பதால் சிபியைத் தேர்வு செய்தேன். நாயகியாக பாவ்யா. இவர்களைத் தவிர, ‘ஆரண்யகாண்டம்’ படத்துக்குப் பிறகு விரும்பிய கதாபாத்திரம் அமையாததால் நடிக்க விருப்பமில்லாமல் இருந்த அந்தப் படத்தின் நாயகி யாஸ்மின் பொன்னப்பாவை பெங்களூருவில் தேடிப் பிடித்துக் கதை சொன்னேன்.

“காத்திருந்தது வீண்போகவில்லை” என்று பாராட்டியதுடன் நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடித்துக்கொடுத்தார். யாஸ்மின் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ‘இடி மின்னல் காதல்’ வழியாக மீண்டும் வருவது எங்கள் படத்துக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இவர்களைத் தவிர, ஜெகனின் பங்களிப்பு இந்தப் படத்துக்கு மிக முக்கியமானது. ராதாரவி ஒரு பாதிரியார் கதாபாத்திரத்தில் வருகிறார். ‘கணம்’ படத்தில் நடித்த சிறார் நடிகர் ஜே ஆதித்யா இதில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்.

‘ராக்கெட்ரி’ படத்தில் நானும் சாம். சி.எஸ்ஸும் இணைந்து பணியாற்றியபோது நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். அவர்தான் இசையமைத்துள்ளார். அதேபோல், நான் எடுத்திருந்த காட்சிகளைப் பார்த்தபின் ‘இந்தப் படத்தை நான் தான் எடிட் செய்வேன்’ என்று ஆண்டனி சார் முன்வந்தார். இப்படிப் படக்குழு குறித்துச் சொல்ல நிறையவே இருக்கிறது.

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT