கண்களுக்குக் கறுப்புக் கண்ணாடி, தலைக்குக் கறுப்புத் தொப்பி, உடலை மூடும் கறுப்பு உடை, இவற்றுக்கு மேல் உடல் முழுக்கச் சரம் சரமாகச் சுற்றப்படும் பிளாஸ்டிக் தாள்... எதற்காக இந்தத் தயாரிப்பு? எதை வசப்படுத்துவதற்கான யத்தனிப்பு இது?
சியார் என்ற 16 வயது துருக்மெனிஸ்தான் இளைஞன், துருக்கி நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கான தயாரிப்புதான். அப்படி நுழைய வேண்டிய அவசியம்?
திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு தன் காதலனுடன் நாட்டு எல்லையைத் தாண்டிவிடும் அவனுடைய அக்கா நெர்மினைக் கொல்லவே,தன் உயிருக்கு ஆபத்தான இந்த முடிவைக் கையிலெடுக்கிறான் சியார்.
நெர்மினைச் கொல்வதாகச் சபதம் செய்து, ஏதுமற்ற குர்திஸ்தான் (இராக்கின் ஒரு பகுதி) பள்ளத்தாக்குகளிலிருந்து திசை தெரியாத பறவை போலப் புறப்படுகிறான் அவன். தந்தையை இழந்துவிட்டதால் குடும்பத்தின் தலைவனாக 16 வயதில் பட்டம் சூட்டப்பட்டவன் அவன். அப்படியானால் அவன்தானே குடும்ப மானத்தைக் காப்பாற்றியாக வேண்டும்?
தேடுதல் வேட்டை
நெர்மின் எல்லைகள் தாண்டுகிறாள், நாடுகளைக் கடக்கிறாள். சியார் விடுவதாக இல்லை. கடைசியாக அவள் சென்றடையும் நார்வேயையும் தொட்டுவிடுகிறான்.
ஒவ்வொரு எல்லையைக் கடக்கவும், பிறகு நெர்மினையும் அவளது காதலனையும் தேடவும் அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பெரும் விரக்தியை ஏற்படுத்துபவை. எதற்காகத் தன் அக்காவைத் துரத்துகிறான்? எதற்காக இத்தனை கொடும் அவஸ்தைகளை அவன் அனுபவிக்கிறான்? விடை கூறமுடியாத நேரடிக் கேள்விகள்.
அவனுடைய முயற்சிகளுக்கு ஆதரவாகவும், பொருளாதார ஆதாரமாகவும் இருக்கிறார், அவனுடைய அக்காவுக்கு மாமனாராக வர வேண்டியவர். எந்த அளவுக்குப் பின்தங்கிய நாடாக இருந்தாலும், ஒரு முடிவெடுக்கும்போது யாருடைய எந்தப் பின்னணியில் இருப்பவருடைய கை ஓங்கி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நேர் முரண்கள்
குர்திஸ்தானில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் வந்து பூச்சிகளைத் தேடியலையும் பல்லியின் நாக்குகளைப் போல, கிடைக்கும் சிறு துப்பையும் சியார் சேகரிக்கிறான்.
புதிய ஊரில் பிழைப்புக்குப் பாதுகாப்பு தரும் ஆண் வேடத்துடன் ஷூ பாலிஷ் போடும் ஈவின் என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவள் மீது ஈர்ப்பும் கொள்கிறான்.
காதலனுடன் தன் அக்கா சென்றது குடும்ப மானத்தைப் பறித்துவிட்டதாகக் கருதும் சியார் ஈவினுடன் துருக்கியிலிருந்து எல்லை தாண்டும்போது கிரீஸ் எல்லைக் காவலர்களிடம் சிக்கிக்கொள்கிறான். அப்போது ஆண் வேடமிட்டிருக்கும் ஈவினின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதற்காக, தங்களுக்கு உதவிய ஏஜெண்டுகளைக் காட்டிக் கொடுக்கும் எல்லை வரை செல்கிறான் சியார்.
மற்றொருபுறம், இத்தனை ஆபத்துகளையும் தன் வாசலுக்கே அவன் வரவேற்பது எதற்காக? அக்காவைக் கொல்வது என்ற ஒற்றை நோக்கத்துக்காக. துருக்கி, கிரீஸ், ஜெர்மனி என ஒவ்வொரு நாட்டையும் அவன் கடக்கும்போது ஈவினும் உடன் வருகிறாள். தன் சகோதரியைப் பார்க்கப் போவதல்ல அவன் நோக்கம், கொல்வதற்காகவே தேடிக் கொண்டிருக்கிறான் என்பது ஈவினுக்குத் தெரியாது. இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படையான முரண்களுடனே படைக்கப்பட்டுள்ளன.
உடையும் தீர்மானங்கள்
சியாரும் அவன் அக்காவும் நாடு திரும்புவதில்லை. ஆனால், அக்காவுக்கு நிச்சயித்த மாப்பிள்ளைக்கு அவனுடைய குடும்பத்திலேயே திருமணம் நடக்கிறது. அதுதான் இந்த உலகம்.
கணந்தோறும் அகதிகள் அனுபவிக்கும் மரண அவஸ்தைகள் மனதைப் பிசைந்தாலும், அகதிகளை நாடு கடத்தும் ஏஜெண்ட் வலைப்பின்னல் எப்படிப்பட்ட கொடுங்கரங்கள் நிறைந்தது என்பதும் ரத்தம் தெறிக்கச் சொல்லப்பட்டுள்ளது.
சாதாரணமாகக் கடந்து போய்விடக் கூடிய படம்தான் என்று நினைத்தாலும், அப்படி நினைத்துவிட முடியாதபடிக்கு இருக்கிறது ஹிஷம் ஸமனின் இயக்கம். நார்வே திரைப் பள்ளியில் பயின்ற இவரது முதல் முழுநீள சினிமாதான் இந்த 'பிஃபோர் ஸ்னோஃபால்'. கதாபாத்திரங்கள் மீதான முன்தீர்மானங்களை வலுப்படுத்தும் வகையில் படம் இயக்கப்படாமல் இருப்பது படத்தைத் தனித்துக் காட்டுகிறது.
எல்லைகள் மட்டும் வேறு
இருக்கும் பாத்திரத்துக்கு ஏற்ற வடிவத்தை ஒரு திரவம் பெறுவதைப் போல, நமது சமூகத்தில் ஜாதி செயல்படுகிறது. அது போலப் பழமைவாதச் சமூகங்களில் நிலவும் பிற்போக்குத்தனங்கள் எப்படிக் காலங்களைக் கடந்து தொடர்கின்றன என்பதை மூன்றாவது நபரின் பார்வையில் சொல்லிச் சொல்கிறது படம்.
தேசங்கள் வேறு, எல்லைகள் வேறு... ஆனால் பிற்போக்குத்தனங்களும், அடிமைத்தனங்களும் மாறுவதில்லை என்பதையே இப்படம் நினைவூட்டுகிறது. வளராத குர்திஸ்தானோ, வளர்ந்துவரும் இந்தியாவோ... எல்லாம் ஒன்றுதான். நமது சந்ததிகள் தங்கள் உரிமைகளை அனுபவிக்கவும் சுயசிந்தனை பெற்று வாழவும் இன்னும் இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.