இந்து டாக்கீஸ்

கோடம்பாக்கம் சந்திப்பு: விஷாலுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

டிஜிட்டல் சினிமா சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலகங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. தமிழ்த் திரையுலகமும் அதில் கலந்துகொள்ளும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால், டிஜிட்டல் சேவை நிறுவனங்களிடம் தவணை முறையில் ஒப்பந்தம் செய்துகொண்டு 10 முதல் 15 லட்சம் வரை விலைகொண்ட டிஜிட்டல் புரஜெக்டர்களை வாங்கித் திரையரங்குகளில் பொருத்தியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

திருச்சியில் கூடிய திரையரங்க உரிமையாளர்கள், ‘வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள முடியாது’ என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள். அதோடு மட்டும் நிற்கவில்லை. ‘நாங்கள் விற்கும் பாப்கார்ன், கூல் டிரிங்ஸ் உள்ளிட கேண்டீன் தின்பண்டங்களின் விலையைப் பற்றியும் பார்க்கிங் பற்றியும் விஷால் இனி பேசக் கூடாது. ஏற்கெனவே அவர் பேசியதைக் கண்டிக்கிறோம்’ என்று எச்சரிக்கும் தொனியில் கூறியிருக்கிறார்கள்.

‘இசைப்புயல்’ ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’. சுபா தம்பி தயாரித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார் நாயகனாக நடிக்கக் கதாநாயகியாக நடித்திருக்கிறார் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா. கடந்த ஆண்டு சஞ்சிதாவின் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த ஆண்டு இந்த ஒரு படம் மட்டும்தானா என்றதும் உஷாராகிவிட்டார்.

“ ‘பார்டி’, ‘ஜானி’, ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ என்று மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டில் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ முதலில் வெளியாகிறது. ஒவ்வொரு படத்தையும் முதல் படமாகத் தான் நினைத்து நடித்து வருகிறேன். இந்தப் படத்தின் நாயகன் அசார் ரொம்ப திறமையான நடிகர். ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது புது அனுபவம். இந்தத் தலைப்பு பலரையும் படத்தைப் பற்றிப் பேச வைத்துவிட்டது. படமும் எதிர்பாராத ஆச்சரியத்தைக் கொடுக்கும்” என்கிறார்.

பாடலாசிரியர், பாடகர், நடிகர் எனப் பன்முகம் காட்டும் அருண்ராஜா காமராஜ் தற்போது இயக்குநராகவும் மாறியிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத படத்தைத் தயாரிக்க இருப்பவர் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளரானது பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, “நண்பர்களின் கனவுகளை நனவாக்க உதவுவதும் நட்புக்குச் செய்யும் மரியாதைதான். அருண்ராஜா இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, எனக்கு நெருக்கமானதாக இருந்தது. நடுத்தரக் குடும்பத்தில் நடக்கும் கதை. அவனுக்காக நானே தயாரிக்க முன்வந்தேன்” என்கிறார்.

‘ஹரஹர மகாதேவகி’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வந்தார். அதில் ஒன்று ‘கஜினிகாந்த்’. இந்தப் படத்தின் குரல் சேர்ப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆர்யா, சாயிஷா நாயகன், நாயகியாக நடித்திருக்கிறார்கள். மற்றொரு படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக்கும், வைபவி ஷாண்டில்யாவும் நடித்திருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமே தயாரித்துவரும் நிலையில், பாலமுரளி பாலு இரண்டு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவரக்கூடும் என்கிறார்கள்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியாகி வெற்றிபெற்றது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்தப் படத்தில் சிம்பு ஏற்று நடித்திருந்த கார்த்திக் என்ற உதவி இயக்குநர் கதாபாத்திரம் கிளாசிக்காக மாறிவிட்டதாக வலைவாசிகள் இன்றும் நினைவுக் குறிப்புகள் எழுதிவருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார் இயக்குநர் கௌதம். ஆனால், சிம்பு ஏற்று நடித்த கார்த்திக் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார். மாதவன் ட்வீட் தகவல் மூலம் இதை உறுதி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT