1. வசூல் நாயகன் எம்.ஜி.ஆர்
கோவையைச் சேர்ந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸின் பெயர் சொல்லும் படமான ‘மலைக்கள்ளன்’, எம்.ஜி.ஆரை வசூல் நாயகனாக மாற்றியது. தமிழறிஞரும் கவிஞருமான நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, ‘ராபின் ஹூட்’ மற்றும் ‘மார்க் ஆஃப் ஸாரோ’ படைப்புகளின் உந்துதலில் இக்கதையை எழுதினார். ‘கலைஞர்’ மு.கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். எஸ்.எம்.நாயுடு இசையமைத்து டி.எம்.சவுந்திரராஜன் பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் நமது சூழலுக்கு இன்றும் பொருந்தும் ஒன்று.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் என அனைத்து மொழிகளிலும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தின் இந்தி வடிவத்தில் திலீப் குமாரும் மீனாகுமாரியும் இணைந்து நடித்தனர். முன்பின் அறிமுகமேயில்லாத ஒரு தயாரிப்பாளரான ஸ்ரீராமுலு நாயுடு, கோவையிலிருந்து மும்பைக்குத் வந்து தன்னை வைத்துப் படமெடுக்க ஆவலாக இருக்கிறார் என்ற ஆச்சரியத்தில் திலீப் குமார் ஒப்புக்கொண்ட இத்திரைப்படத்தின் பெயர் என்ன?
2. பூனையின் கண்கள் வழியே…
ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இஸ்தான்புல் நகரின் வரலாறு. ஓட்டோமான் பேரரசு காலத்திலிருந்து நவீன காலம்வரை பூனைகளையும் குடிமக்களாகப் பாவிக்கும் இஸ்தான்புல் நகரத்தின் வாழ்வியலை, பூனைகளின் கண்களிலிருந்து பார்க்கும் ஆவணப்படம் ‘கேடி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம், இருண்ட விதானங்கள், கட்டிடக் கூரைகள், வீடுகளின் பால்கனிகள், ஜன்னல்கள், மொட்டை மாடிகளில் அலையும் பூனைகளின் வெவ்வேறு குணாதிசயங்களைக் கவித்துவத்துடன் காண்பிக்கும். செயடா டோருன் உருவாக்கிய இந்த ஆவணப்படத்துக்காகவே பூனைகளின் உயரத்தில் படம் பிடிப்பதற்காக கேமிரா தாங்கிகள் வடிவமைக்கப்பட்டன.
வேகமாக நவீனமாகி வரும் ஒரு புராதன நகரத்தின் தொன்மையை நினைவில் வைத்திருக்கும் உயிர்களைக் குறித்த இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் 2.8 மில்லியன் டாலரைத் திரையரங்குகளிலேயே வசூலித்து வெற்றிபெற்றது. உலகிலேயே அழகிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்தான்புல்லின் எழிலை, பூனையின் கண்களின் வழியாகப் பார்க்கச் செய்த இந்த ஆவணப்படத்தை 2017-ல் வெளியான சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக எந்தப் பத்திரிக்கை தேர்ந்தெடுத்தது?
3. பவுலோஸ் எனும் படைப்பாளி
இல்லாத தந்தையைத் தேடி பதின்வயதுச் சிறுமியும் அவள் தம்பியும் கிரீஸ் நகரத்திலிருந்து ஜெர்மனிக்குத் தனியாகப் பயணம் செல்கின்றனர். வாய்ப்புகளைத் தேடி ஒரு நாடகக் குழு வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறது. ஒரு நடிகன் அன்பைத் தேடி அலைகிறான். இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு வன்முறையையும் பல்வேறு விதமான துயரங்களையும் தவிர உலகம் வேறெதைக் கொடுத்திருக்கிறது என்பதை ‘லேண்ட்ஸ்கேப் இன் தி மிஸ்ட்’ திரைப்படம் வழியாகப் பார்வையாளர்களிடம் எழுப்பியவர் தியோ ஆஞ்சலோ பவுலோஸ்.
நாடகப் பாங்கிலான காட்சிகள், உறைந்த ஓவியம் போன்ற காட்சிகள், மனத்தை உலுக்கும் படிமங்களுடன் தியோ ஆஞ்சிபோ பவுலோஸின் இயக்கம் இதைக் கலைப்படைப்பாக்கியது. யுத்தங்கள், முரண்பாடுகள், பாலியல் வன்முறைகளுக்கு நடுவே திணறும் மானுட நிலை குறித்து சினிமாவில் ஆத்மார்த்தமாக விசாரணை செய்த ஆந்த்ரேய் தார்க்காவெஸ்கி, இங்க்மர் பெர்க்மன், ராபர்ட் ப்ரெஸ்ஸான் ஆகிய முதல் வரிசை இயக்குநர்களின் பெயர்களுடன் இடம்பிடிப்பவர் பவுலோஸ். ஏதென்சில் பிறந்த படைப்பாளியான தியோ ஆஞ்சலோ பவுலோஸ் 1988-ல் எடுத்த இந்தப் படம் வெனிஸ் உலகத் திரைவிழாவில் எந்தப் பரிசைப் பெற்றது?
4. சண்டைபோட்ட இசையமைப்பாளர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் நிலவிய சமூக அவலங்களில் முக்கியமானது கருப்பின ஒடுக்குமுறை. இதைப் பின்னணியாகக் கொண்டு குவெண்டின் டொரண்டினோ 2012-ல் இயக்கிய திரைப்படம் ‘ஜாங்கோ அன்செய்ன்ட்’. ஜேமி பாக்ஸ், கிறிஸ்டோபர் வால்ட்ஸ், லியார்னடோ டி காப்ரியோ, கெர்ரி வாஷிங்டன் ஆகிய நட்சத்திரங்களின் அபாரமான நடிப்புக்காகப் பேசப்பட்டது இத்திரைப்படம். கருப்பின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ஒரு சுவாரசியமான வெஸ்டர்ன் மசாலா திரைப்படமாக குவெண்டின் டொரண்டினோ மாற்றிவிட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டார்.
இத்திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடிக்க லியானர்டோ டிகாப்ரியோ முதலில் தயங்கினார். ஏனெனில், கொடூரமான கொலையாளியாகவும் இனவாத வசைகளைக் கூறுபவராகவும் அவரது வேடம் இருந்ததே காரணம். இயக்குநரின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பின்னரே ஏற்றார். இப்படத்தின் இசையமைப்பாளர் என்னியோ மாரிக்கோனி, தனது இசையைச் சீர்மையில்லாமல் டொரண்டினோ உபயோகிப்பதாகக் குற்றம்சாட்டி அடுத்த படத்தில் பணியாற்ற மாட்டேன் என்று கூறினார். ஆனால் அதை மீறி, டொரண்டினோவின் அடுத்த படத்துக்கு இசையமைத்து ஆஸ்கரும் வென்றார். அந்தப் படம் எது?
5. தேவைப்படாத பின்னணி இசை
மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் இரண்டாவது திரைப்படம் ‘கொடியேற்றம்’. தென்னிந்திய சினிமாவுக்கு ஒரு தனித்த ஆளுமையின் வருகையை உறுதிப்படுத்திய படைப்பு எனக் கொண்டாடப்படுகிறது. சாதாரணத் தோற்றம்கொண்ட கோபியை நாயகனாக நடிக்க வைத்து தேசிய விருதும் பெற்று பரத் கோபியாக்கிய திரைப்படம் இது. 1975-ம் ஆண்டிலேயே படத்தின் பணிகள் முடிந்துவிட்டாலும் கடுமையான நிதி நெருக்கடியால் இரண்டு ஆண்டுகள் கழித்தே வெளியானது.
ஏ.வி.எம் லேபரட்டரியில் கொடுப்பதற்குப் பணம் இல்லாமல் படத்தையே வெளியே எடுக்க முடியவில்லை. கிராமத்தில் தங்கையின் உழைப்பால் வரும் கூலியில் சாப்பிட்டுவிட்டு வயதில் சிறியவர்களுடன் நாட்களைக் கழிக்கும் அசடனான சங்கரன் குட்டியின் வாழ்க்கையைத் தங்கையின் திருமணம் தடம் மாற்றுகிறது. ஒரு மனிதன் அடையும் முதிர்ச்சி அவனுடைய தங்கை, மனைவி, தோழி வழியாக நிகழ்கிறது. இந்திய சினிமாவில் பின்னணி இசையே இல்லாமல் வந்த முதல் திரைப்படம் இது. மேளச்சத்தம், பட்டாசு சப்தங்கள் மட்டுமே இப்படத்தின் பின்னணி. சங்கரன் குட்டியின் மனைவி சாந்தம்மாவாக நடித்த நடிகை யார்?
விடைகள்
1. ஆஸாத், 2. டைம், 3. வெள்ளிச் சிங்கம், 4. தி ஹேட்புல் எய்ட், 5. கே.பி.ஏ.சி. லலிதா