இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: சவரக்கத்தி

இந்து டாக்கீஸ் குழு

வறட்டுப் பொய்களுடன் வாழும் ஒரு சிகையலங்காரத் தொழி லாளி பிச்சைமூர்த்தி (இயக்குநர் ராம்). சிறைவாசம் தந்த விரக்தியால் முரட்டுக் கோபத்துடன் வலம்வரும் ரவுடி மங்கா (இயக்குநர் மிஷ்கின்). இந்த இருவருக்கும் எதிர்பாராத விதத்தில் சிறு மோதல் ஏற்பட, ராமை துரத்தத் தொடங்குகிறார் மிஷ்கின். இவர்கள் இருவரிடமுமே கத்தி கள் இருக்கின்றன. ராமிடம் அவரது அப்பா கொடுத்துவிட்டுச் சென்ற சவரக்கத்தி இருக்கிறது. அவரது அன் றாட வாழ்க்கையை நடத்த உதவும் கத்தி அது. பரோலின் கடைசிநாள் கடுப்பில் இருக்கும் மிஷ்கின், தெரு வோர மீன் கடையில் பணத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து நீள மான வெட்டுக்கத்தியை எடுத்துக்கொள்கிறார். இவர்கள் இருவரது கையிலும் இருக்கும் கத்திகள், இறுதி யில் எதற்குப் பயன்படுகின்றன என்பது படத்தின் கதை.

ஒரேநாளில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர் போல தோற்றம் அளிக்கும் இப்படம் உண்மையில் க்ரைம் த்ரில் லர் அல்ல. பொய்மையுடனும், மீள முடியாத ரத்தக்கறையுடனும் வாழும் இருவர் எப்படித் திரும்பவும் புது மனிதர்களாகப் பிறக்கிறார்கள், அதற்கான வாய்ப்பை எப்படிப்பட்ட சம்பவங்கள் வழியாக வாழ்க்கை அவர்களுக்கு வழங்கியது எனும் துயர அழகியலைப் பேசும் படம். படத்தின் நாயகன் ராமோ, மிஷ்கினோ அல்ல; எங்கும் இடைநில்லாமல் இறுதிவரை சீராக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதைதான் உண்மையில் நாயகன்.

மிஷ்கினின் தம்பியான ஜி.ஆர்.ஆதித்யா படத்தை இயக்கியுள்ளார். எப்போதும் சீரியஸான படங்களைத் தரும் மிஷ்கின் - ராம் ஆகியோரை வைத்து பிளாக் காமெடி படத்தைத் தந்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, படத்தை தயாரித்திருக்கிறார் மிஷ்கின். வழக்கமான ரன்னிங் - சேஸிங் படங்களில் காணப்படும் மசாலாத்தனங்கள் எதுவும் இல்லாமல் இயல்பாக எடுத்த விதத்திலும் படம் கவர்கிறது. ஒரு சாதாரண மோதல், உடன் இருப்பவர்களால் எப்படி தவறாக வழிகாட்டப்பட்டு, பெரிய சம்பவத்துக்கு வித்திடுகிறது என்பதும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வகையில் சற்று சென்சிட்டிவான கதை இது. ஆனால், அதை காமெடியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் கையாண்டு திரைக்கதையை விறுவிறுப்பாகப் பதிவு செய்திருக்கின்றனர். கதாபாத்திர உருவாக்கமும் அவற்றுக்குள் கச்சிதமாக பொருந்திக்கொள்கிற நட்சத்திரத் தேர்வும் படத்துக்கு பெரும் பலம்.

ரவுடி கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார் மிஷ்கின். அவருக்கு வசனங்கள் குறைவு என்றாலும், உடல்மொழியால் அதை நேர்செய்கிறார். ஆனால், அவர் அடிக் கடி கத்துவதுதான் காது ஜவ்வை கிழிக்கிறது.

மிஷ்கின் பாத்திரத்துக்கு நேர் எதிர் பாத்திரம் ராமுக்கு. தன்னைப் பற்றியும், தன் சவரக்கத்தி பற்றியும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுவது, வாய்ச்சவடால் பேசுவது, ஆற்றாமை யால் மனைவியுடன் மல்லுக்கட்டுவது, அப்பாவித்தனத்தின் மொத்த உருவாக இருப்பது, சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போது கொதிப் பது என புதிய முகம் காட்டியிருக்கிறார் ராம்.

காது கேளாதவர், இரு குழந்தைகளின் தாய், நிறைமாத கர்ப்பிணி என 3 அவதாரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார் பூர்ணா. அதுவும், பழ மொழி சொல்லி அவர் அடிக்கும் லூட்டிகள் சிரிக்க வைக்கின்றன. இன்னும் சிறுசிறு பாத்திரங்களாக வருபவர்களும் தேவையறிந்து நடித்துள்ளனர். வயது, தோற்றம், சிந்தனை ஆகியவற்றில் மாறுபாடுகளுடன் படைக்கப்பட்டிருக்கும் மிஷ்கினின் அடியாட்கள், அவரது அப்பா, கரும்புச்சாறு விற்கும் பெண் வரை 20-க்கும் அதிகமான துணைக் கதாபாத்திரங்களும் தமக்கே உரிய முழுமையுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. கதைக் களத்துக் குள் முழுமையாக நம்மைத் தொலைத்துவிட இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

‘‘வாசல்ல ஒருத்தர் பிச்சை எடுத்திட்டிருப்பார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கிட்டு வாங்க. உங்க கல்யாணத்தை சுயமரியாதை திருமணமா பதிவு பண்ணிடலாம்’’ என்று பதிவாளர் சொல்லும் காட்சி, ‘பொய்யா மொழி தேநீர் கடை’, ‘பரிசுத்தம் மிதிவண்டி நிலையம்’ என படத்தோடு பயணிக்கும் சிறு காட்சிகளிலும் மிஷ்கினின் அக்மார்க் முத்திரையை படரவிட்டிருக்கிறார் இயக்குநர்.

அரோல் கொரேலியின் பின்னணி இசை, கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு சிறப்பு.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. ரகசிய திருமணம் செய்யும் பெண்ணின் குடும்பத்தினரின் திடீர் மனமாற்றம், துரத்தல்களில் நிகழும் சந்திப்புகள் கேலியாக மாறுவது, கணிக்கக்கூடிய திருப்பங்கள் ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம். நகைச்சுவை என்பதற்காக நிறைமாதக் கர்ப்பிணி சுவர் ஏறி குதிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

சென்சிட்டிவான கதையை அழகியலாகவும் நகைச்சுவையோடும் படம்பிடித்த விதத்தில், இது கூர்மையான, அதே நேரம் இதமான ‘சவரக்கத்தி’!

SCROLL FOR NEXT