இந்து டாக்கீஸ்

மும்பை கேட்: வைரலான ‘பேட்மேன் சேலஞ்ச்’

கனி

ர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே நடிப்பில் இன்று வெளியாகிறது ‘பேட்மேன்’ திரைப்படம். இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும்விதமாக, கடந்த வாரம் சமூக ஊடகங்களில் ‘பேட்மேன் சேலஞ்’சைத் தொடங்கினார் இந்தியாவின் உண்மையான ‘பேட்மேன்’ ஏ.முருகானந்தம். இவரது வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

அவர் தொடங்கிவைத்த இந்த ‘பேட்மேன் சேலஞ்ச்’சில் பாலிவுட்டின் பெரும்பாலான பிரபலங்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்ட தீபிகா படுகோன், அனுஷ்கா ஷர்மா, ஆலியா பட், ஆமிர் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரும் சானிடரி நாப்கினைக் கையில் வைத்தபடி படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர். பிரபலங்களைத் தொடர்ந்து நெட்டிசென்களும் இந்த ‘பேட்மேன் சேலஞ்’சை அதிக அளவில் பகிர்ந்துகொள்ள அது சமூக ஊடகங்களில் வைரலானது. மாதவிடாயைப் பற்றிச் சமூகத்தின் பார்வையை மாற்றுவதற்காக இந்த ‘பேட்மேன் சேலஞ்’சைத் தொடங்கியதாகச் சொல்லியிருக்கிறார் முருகானந்தம்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம், கிராமப்புறப் பெண்களுக்கும் மாதவிடாயின்போது சுகாதாரமான நாப்கின்களைக் குறைவான விலையில் வழங்குவதற்காக ஓர் இயந்திரத்தை உருவாக்குகிறார். இதை உருவாக்கும்போது, அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொள்கிறார். பொதுச் சமூகத்தில் மாதவிடாயைப் பற்றியும் நாப்கின்கள் பற்றியும் நிலவும் கற்பிதங்கள்தாம் அதற்குக் காரணம். முருகானந்தத்தைப் பற்றிய செய்திக்கட்டுரையைப் படித்த டிவிங்கிள் கன்னா, அவரது வாழ்க்கைக் கதையைப் படமாகத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் முருகானந்தமாக நடித்திருக்கும் அக்ஷய் குமார், “நான் சானிட்டரி நேப்கினைக் கையில் வைத்திருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு, சிலர் என்னிடம், ‘என்ன செய்கிறீர்கள் அக்ஷய், அது சானிட்டரி நாப்கின். அதை வைத்திருப்பது பாவம்’ என்று சொன்னார்கள். நம் மக்களில் சிலருக்கு நாப்கினைப் பற்றிய புரிதல் இல்லை. அதை இந்தப் படம் மாற்றும்” என்கிறார்.

SCROLL FOR NEXT