இந்து டாக்கீஸ்

திரைப் பார்வை: பிரமயுகம் | கறுப்பு - வெள்ளை அரசியல் சதுரங்கம்

டோட்டோ

‘நாம் எங்கு செல்கிறோம், என்ன செய்கிறோம் என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது’.

இது ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் முற்பகுதியில் சாருவின் தந்தை சொல்லும் ஒரு வசனம். மேலோட்டமாக சாதாரணமாகத் தெரியும் இந்த வசனம், இறுதிக்காட்சியின் அதிர்ச்சியில் பார்வையாளருக்கு வேறொரு அர்த்தமாக வலுவாக உருமாறும்.

அதே போல இயக்குநர் ராகுல் சதாசிவனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பிரமயுக’த்தின் முற்பகுதியில் பேசப்படும் ஒவ்வொரு வசனமும் இரண்டாவது பகுதியில் வேறு பல அர்த்தங்களுடன் கூடுதல் வலுவுடன் புரியும்.

17ஆம் நூற்றாண்டில் கேரள மலபார் வனப் பகுதியில், பாணர் வகுப்பு அடிமையான தேவன் என்பவன் வழி தொலைந்து அலைகி றான். அவ்வனாந்தரத்தின் நடுவே உள்ள பாழடைந்த கொட்டார வீட்டில் கொடுமன் போட்டி என்கிற நம்பூதிரியோடும் அவருடைய சமையல்காரரோடும் தேவன் தங்க நேர்கிறது.

அந்தப் பெரிய வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள், பதிலற்ற கேள்விகள், குழப்பங்களிலிருந்து அவ னால் தப்பிக்க முடிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. லண்டன் ஃபிலிம் அகாடெமியில் சினிமா பயின்று அனிமேஷன் - வி.எஃப்.எக்ஸில் முதுகலையும் முடித்துள்ள ராகுல் சதாசிவன் எழுதி, இயக்கியிருக்கும் அவரது மூன்றாவது படம் இது.

கதை பீரியட் டிராமாவாக இருக்க வேண்டும், கறுப்பு - வெள்ளையில்தான் எடுக்கப்பட வேண்டும், கண்டிப்பாக மம்மூட்டி நடித்தேயாக வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளையும் தனக்கு விதித்துக்கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார். அவற்றுக்கு முழுமையான நியாயமும் செய்திருக்கிறது இப்படம்.

படத்தில் நிறைகள் அதிகம். ஐந்து கனமான கதாபாத்திரங்கள், பிரமாதமான தயாரிப்பு வடிவமைப்பு, நேர்த்தியான ஒளியமைப்புடன் கூடிய ஒளிப்பதிவு, ஒலி வடி வமைப்பு, நடிப்பு, உரையாடல், இயக்கம் என உருவாக்கத்தில் செதுக்கி இழைத்திருக்கின்றனர்.

குறிப்பாக, கதையின் சூழலைக் கலை வடிவமைப்பை உருவாக்குவதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கின் றனர். அதீத மாந்திரீகக் கற்பனைக் காட்சிகள், இறுதியில் நிகழும் குழப்பங்கள், மூடநம்பிக்கை சடங்கு கள் எனச் சில சறுக்கல்களும் உண்டு. ஆனால் மம்மூட்டி என்னும் மாபெரும் கலைஞனின் நிழலில் குறைகள் யாவும் காணாமல் போய் விடுகின்றன.

அர்ஜுன் அசோகன், சித்தார்த் பாஸ்கரன் இவர்களை எல்லாம் தாண்டி மம்மூட்டி ஏற்று நடித்திருக்கும் ‘கொடுமன் போட்டி’ என்கிற கதாபாத்திரம் அவரது நடிப்புப் பயணத்தில் மைல்கல்லாக இடம்பெறும் வாய்ப்புகள் அதிகம். அரசியல், இதிகாசம், நாட்டாரியல் ஆகியவற்றுடன் வரலாற்றுக் கலப்புள்ள கூர்மையான வசனங்களுக்கு மலையாள எழுத்தாளர் டி.டி. ராமகிருஷ்ணன் திறம்படப் பங்களித்துள்ளார்.

சாதிய அடுக்கு வழியான அதி காரம், அடக்குமுறை எனப் பல தளங்களில் கதை சொல்லப்பட்டி ருக்கிறது. சக்தி அழிவதில்லை அது ஒரு மாற்றம் மட்டுமே பெறுகிறது. இந்த இயற்பியல் கோட்பாட்டைப் போலவே அதிகாரமும் அடக்கு முறையும் கைகள் மட்டுமே மாறும்; அதனால் நன்மை எதுவும் விளைவதில்லை என்பதை மிக அழகாக இத்திரைப்படம் சொல்லி இருக்கிறது.

பொதுவான மலையாளத் திரைப்படங்களில் மென் உணர்வுடன் காட்டப்படும் பருவமழை, இதில், திகில் கலந்த கதாபாத்திரமாக இரண்டாம் பகுதி முழுவதும் நிறைந்திருக்கிறது. மம்மூட்டியைத் தனியே பாராட்டியே ஆகவேண்டும். அவர் உடல் மொழி, மலபார் நம்பூதிரி வட்டார வழக்கு, நுட்பமான நடிப்பு, குரல், பார்வைகள் இவை அனைத்தையும் தாண்டி ஒப்பனையிலும் அதீதமாகச் சிறப்பாக உருவாக்கம் செய்திருக்கின்றனர்.

குறிப்பாக, சாத்தான் போன்ற அவர் பற்களின் வடிவமைப்பு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த ஆறு வெவ்வேறு திரைப்படங்களும் ஆறு திசையில் அவருக்குப் பெருமை அளிக்கின்றன.

மேலும், கூனிக் குறுகிய அடிமை உடல் மொழியோடு வரும் அர்ஜுன் அசோகன், வெவ்வேறு உருமாற்றங்கள் அடையும் சமையல்காரராக சித்தார்த் பாஸ்கரன் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றனர். மம்மூட்டியின் அரக்கத்தனமான நடிப்பில் ஒரு கிளாசிக் ஆக மாற வேண்டிய திரைப்படம், அந்த நிலையை அடைய முயல்வதுடன் தேங்கி நின்றுவிடுகிறது.

- tottokv@gmail.com

SCROLL FOR NEXT